விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?





ஸ்திர லக்னங்களிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நீங்கள்தான். வீடு, மனை, சொத்து, சுகம் எல்லாம் விரைவாகக் கிடைத்து விடும். ஆனாலும், ஏதோ ஒன்றிற்காக எதையாவது நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியாது. வளைந்து கொடுக்கத் தெரியாமல் வளர்ச்சியை இழப்பீர்கள். தாய்க்காக சில காலம், தங்கைக்காக சில வருடங்கள் என்று உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்காகவே பாதி வாழ்நாளை வாழ்வீர்கள். பிறகுதான் உங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியும். ராசி கட்டிடம் எனில், லக்னம் அதன் அஸ்திவாரம். ராசி கோபுரம் என்றால், லக்னம் கருவறை. ராசி கனியெனில் லக்னம் வேர். எனவே, ராசியும் ராசிநாதனும் முதலில் வெற்றி பெறுவதுபோலத் தோன்றினாலும், உங்கள் வசதி வாய்ப்புகளையும் பயணங்களின் இலக்கையும் நிர்ணயிப்பவர் லக்னாதிபதிதான்.

விருச்சிக லக்னக்காரர்கள்தான் வீராவேசத்தோடு இருப்பார்கள். இனம், மொழி, மண்ணுக்காக எல்லை கடந்து போராடுவீர்கள். சரித்திரத்தில் இடம் பிடிக்க நீங்கள் நினைக்காவிட்டாலும், உங்களின் பெயர் செயலாலும் தியாகத்தாலும் பொறிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. உங்களின் லக்னாதிபதியான செவ்வாய், அநியாயத்தை தட்டிக் கேட்கக் கூடியவர். ‘‘தவறு நடந்தால் நமக்கென்ன. நமக்கு பிரச்னை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’’ என்று கண்டும் காணாமலும் இருக்கத் தெரியாது. அடுத்தவர்களுக்கு ஒன்று எனில் பதறிப்போவீர்கள். அந்த பாதிப்பை, இழப்பை, உங்களுக்கு ஏற்பட்டதாக நினைத்து களத்தில் குதிப்பீர்கள். சென்ட்டை அடித்துக் கொண்டு ருத்ராட்சமும் அணிவீர்கள். லௌகீகத்திற்கும் ஆன்மிகத்திற்குமிடையே ஊசலாடுவீர்கள். அதனாலேயே சில சமயம் மனைவி பிள்ளைகளிடம் மகிழ்ந்து பேசுவதும், சில சமயம் ஒதுங்கியிருப்பதுமாக இருப்பீர்கள். ‘‘முப்பது வருஷமா குப்பை கொட்டிட்டேன். இன்னமும் புரியாத புதிராதான் இருக்காங்க’’ என்று வாழ்க்கைத்துணை சொல்வார். வாரிசுக்கு சொத்து சேர்க்க நினைப்பீர்கள். ஆனால், வரைமுறை தாண்டிப் போய் சம்பாதிக்கவோ, உதவி கேட்கவோ உங்களின் உள்மனசு இடம் கொடுக்காது. தந்தையாரிடம் ரொம்ப பாசமாக இருப்பீர்கள். ஆனால், அவர் உழைத்து சம்பாதித்த பணத்தில், உட்கார்ந்து சாப்பிட மாட்டீர்கள்.

நீங்கள் ஓரிடத்தில் உட்கார்ந்து யோசிப்பதை விட, பயணப்படும்போது சிந்தனை கூர்மையாக இருக்கும். புதுப்புது யோசனைகள் வந்தபடி இருக்கும். ஒரேமாதிரியான விஷயங்களை திரும்பத் திரும்பச் செய்வது பிடிக்காது. அதீத ரோஷக்காரராக இருப்பீர்கள். திடீரென இரண்டு, மூன்று வருஷம் வீட்டிலுள்ளவர்களிடம் பேசாமல் இருப்பீர்கள். அதாவது ஒரு மைண்ட் செட்டப்பிலிருந்து உங்களால் அவ்வளவு விரைவாக வெளியே வர முடியாது. உறவினர்கள், நண்பர்களைப் பற்றி சரியான மதிப்பீடுகளால் விமர்சிப்பது பிடிக்கும். அதேசமயம் விஷய ஞானமுள்ளவர்களை மதிப்பீர்கள். வாழ்க்கைத்துணையை எங்குமே விட்டுக்கொடுக்காமல் நேசிப்பீர்கள்.   

மிகமுக்கியமான ஐந்து கிரகங்கள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. அதில் முதல் இரண்டாக குருவும், சூரியனும் வருகிறார்கள். அடுத்ததாக செவ்வாயும், சந்திரனும் வருகின்றார்கள். உங்களின் சொந்த ஜாதகத்தில் இவர்கள் எப்படிப்பட்ட இடங்களில் இருந்தாலும் உதவி செய்யத் தயங்க மாட்டார்கள்.

உங்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திற்கும், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக குரு வருகிறார். உள்ளுணர்வு அதிகம் மிக்கவர்களாக இருப்பீர்கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஆறுதலைத் தருவதாக அமையும். எப்போதும் வங்கிக்கணக்கில் பணம் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிகம் உழைப்பீர்கள். குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். கௌரவமாக வாழ வேண்டும் என்கிற குறிக்கோளோடு இருப்பீர்கள். பேச்சினூடே, மகான்கள் கூறிய தத்துவங்களை உதாரணமாகக் கூறுவீர்கள். வாழ்க்கை ஒரு நெறிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்றாலும், மரபு மாறாமல் வாழ்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு வருவதால் சத்புத்திரன், சத்புத்திரியை குரு அருளுவார். குழந்தைகளை நுண்ணறிவு மிக்கவர்களாக வளர்ப்பீர்கள். தங்க ஆபரணங்களை நிறைய அணிய விரும்புவீர்கள். உங்களில் பலர் கல்வி நிறுவனங்களை வைத்து நடத்துவீர்கள். பல தர்ம ஸ்தாபனங்கள் தொடங்கி ஏழை மக்களுக்கு உதவுவீர்கள். நீங்கள் செய்த எல்லா நல்ல விஷயங்களையும் உங்கள் பிள்ளைகளும் செய்ய வேண்டுமென்று விரும்புவீர்கள். சொந்த ஜாதகத்தில் கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் குரு அமர்ந்திருந்தாலோ, சூரியனுடன் குரு சேர்ந்திருந்தாலோ, ஒரு குறையும் வராத ராஜபோகமான வாழ்க்கை அமையும். குருவும் செவ்வாயும் சொந்த ஜாதகத்தில் சேர்ந்திருந்தால், குரு மங்கள யோகம் கிடைக்கும். அமைச்சர், காவல்துறை அதிகாரி, பேராசிரியர், வங்கி மேலாளர் என்று சிறிய வயதிலேயே பெரிய பதவிகளில் அமர்வீர்கள். குரு செவ்வாயுடன் மேஷம், தனுசு வீடுகளில் சேர்ந்திருந்தால் ராணுவம் அல்லது விமானப் படையில் முதன்மைப் பதவி வகிப்பவராக இருப்பீர்கள். மூங்கில் அரிசி சாதம் சாப்பிடுங்கள். உணவில் அதிகமாக தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலை, கொண்டைக்கடலையை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். குரு தசை, குரு புக்தி, வியாழக்கிழமை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள், 3, 12, 21, 30 போன்ற தேதிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.



சூரியன் பத்துக்குரியவராக இருக்கிறார். வேலை ஸ்தானத்தையே அவர்தான் நிர்ணயிக்கப் போகிறார். ‘தான் உண்டு தன் வேலையுண்டு’ என்று அலுவலகத்தில் ஏதேனும் வேலையைச் செய்தபடி இருப்பீர்கள். எதையும் படைப்புத்திறனோடும், வித்தியாசமாகவும் செய்வீர்கள். எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் முக்கியமான முதன்மைப் பதவியிலும், நிர்வாகத்திலும்தான் ஈடுபாடு காட்டுவீர்கள். உயர்ந்த பதவிகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். நாட்டின் நலத்திட்டங்கள் அனைத்திலும் பங்கு கொள்ள விரும்புவீர்கள். குறைந்தபட்சமாக அதிகார மையத்திற்கு அருகிலாவது இருப்பீர்கள். சூரியனுக்கும் மறைவு காலங்கள் இருப்பதுபோல நீங்கள் சில காலம் உறங்கிக் கிடந்துவிட்டுத்தான் விழித்தெழுவீர்கள். சூரியன் கிட்டத்தட்ட உங்களின் வேலைக்கான விஷயங்களை சரியான முறையில் அமைத்துத் தருவார். அடிப்படை ஜாதகத்திற்கு வலிமையைக் கொடுப்பார்.

உங்களின் ஜாதகத்தில் சூரியனை பலம் பெறச் செய்ய, சில நடைமுறைப் பரிகாரங்களை கைகொள்ளுங்கள். தந்தையிழந்த குழந்தைக்கும், பார்வை இழந்தவர்களுக்கும், தலையில் அடிபட்டவருக்கும் உதவி செய்யுங்கள். உணவில் சூரியகாந்தி எண்ணெயை அதிகம் உபயோகப்படுத்தலாம். தலைவர்களின் பிறந்தநாள், நினைவு தினங்களில், இயன்ற அளவு அன்னதானம் செய்யுங்கள். குடும்பத்துப் பெரியவர்களை அவ்வப்போது சந்தித்து ஆறுதலாகப் பேசுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுங்கள். இஞ்சி, சுக்கு கஷாயம், கோதுமை உணவை அடிக்கடி சாப்பிடுங்கள். சூரிய தசை, சூரிய புக்தி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள், ஞாயிற்றுக் கிழமை, 1, 10, 19, 28 போன்ற நாட்கள் எல்லாமே உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

செவ்வாய் உங்களுக்கு லக்னாதிபதியாக வருகிறார். உங்களின் அடிப்படை குணநலன்களையும், உருவ அமைப்பையும் இவரே தீர்மானிக்கிறார். இதே செவ்வாய் ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதியாக வருவதால், எதிரிகளையும் தீர்மானிக்கிறார். எனவே, நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அப்படித்தான் உங்களின் எதிரிகளும் இருப்பார்கள். பலாப்பழம்போல பார்ப்பதற்கு முள்ளாகவும் பழகினால் தேன் சுளையாகவும் இருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால், சமூகத்தில் பெரிய அந்தஸ்தோடு வாழ்வீர்கள். சூரியனும், செவ்வாயும் அதிநட்பு கிரகமாக வருவதால். பெற்றோருக்கு கௌரவத்தைக் கொடுப்பீர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பரம்பரைச் சொத்து உள்ளவர்களாகவே இருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருந்தாலும், அவரின் ஆசிகள் நிச்சயம் உண்டு. ஆனால், புதன் அல்லது சனியோடு சேர்ந்தால் போராட்டம்தான். தன் முழுத்திறனையும் உபயோகப்படுத்தி உதவ முடியாத நிலையில் இருப்பார்.

செவ்வாயை பலப்படுத்த சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருக்கலாம். துவரை தானம் கொடுங்கள். உணவில் பூண்டு மற்றும் மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் செம்பருத்தி, செண்பகப் பூச்செடிகளை வளர்க்க முயற்சியுங்கள். உடன்பிறந்த சகோதரர்களுக்கு மறந்துபோய்க்கூட துரோகம் இழைக்காதீர்கள். ரத்த தானம் செய்யுங்கள். உணவில் காரம் சேர்த்துக் கொண்டால் தவறில்லை. முருகப் பெருமானின் படத்தை உங்கள் பார்வையில் படுமாறு மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் தசை, செவ்வாய் புக்தி மற்றும் அந்தரம் நடக்கும்போதெல்லாம் உங்களுக்கு சாதகமான பலன்களே கிடைக்கும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்கள், செவ்வாய்க் கிழமை, 9, 18, 27 போன்ற தேதிகளில் எல்லா நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.

நான்காவதாக சந்திரன் உங்களுக்கு பாக்யாதிபதியாக வருகிறார். நீங்கள் பிறந்ததிலிருந்தே தந்தையின் வளர்ச்சி உயரும். நீடித்த, நிலைத்த செல்வத்திற்கான வழி பிறக்கும். அதே சந்திரன் பாதகாதிபதியாக வருவதால், சில விஷயங்களில் தந்தையோடு முரண்படுவீர்கள். ‘அவர் வழி வேறு; என் வழி வேறு’ என்று சில சமயம் முடிவெடுப்பீர்கள். நீங்கள் வளர்பிறையில் பிறந்து, ராகு, கேது, சனி சம்பந்தப்படாமல் இருந்தால் சுகமான வாழ்க்கை அமையும். எப்போதுமே சந்திர தசை, அல்லது வேறெந்த தசை நடந்தாலும் அதில் வரும் சந்திர புக்தி, திங்கள்கிழமை, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள், 2, 11, 20, 29 தேதிகள் என்று சந்திரனின் ஆதிக்கமுள்ள அனைத்து நாட்களிலும் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உணவில் முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி, தர்ப்பூசணி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் வாழையிலையில் சாப்பிட முயற்சியுங்கள். நிறைய நீர் அருந்துங்கள். அவ்வப்போது ஆறு, குளம், தோப்பு என்று எங்கேனும் அமர்ந்து விட்டு வாருங்கள். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்துவிட்டால் தாயாரின் சொத்துகள் உங்களுக்கு சேரும்.

மேலே சொன்ன கிரகங்கள் எப்படியிருந்தாலும், பிராப்தம் எனும் முன்வினைப் பயனை மாற்றியமைக்கும் சக்தி தெய்வத்திற்குத்தான் உண்டு. எனவே, உங்களின் வாழ்க்கை யோகமாக மாற, நீங்கள் தில்லை ஸ்தானம் என்றழைக்கப்படும் திருநெய்தானம் தலத்திற்குச் சென்று வாருங்கள். அத்தலத்தில் அருளும் நெய்யாடியப்பரையும், பாலாம்பிகையையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகேயுள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)

மாற்றம் தரும் மந்திரம்

விருச்சிக லக்னத்தில் பிறந்த நீங்கள், வாழ்வில் எல்லா நலன்களும் பெற, கீழ்க்கண்ட திருவருட்பாவை தினமும் கூறுங்கள்...
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நின்னைப் பிரியாத நிலையையும் வேண்டுவனே