வத்திக்குச்சி : சினிமா விமர்சனம்





மூன்று தீயவர்களுடன் சந்தர்ப்ப வசத்தால் உரசிக் கொள்ளும் ஹீரோ, வத்திக்குச்சியாய் பற்றிக் கொள்ளும் கதை.
ஷேர் ஆட்டோ ஓட்டும் நாயகன் திலீபனுக்கு, டுடோரியலில் ஆங்கிலம் படிக்கும் அஞ்சலியுடன் ஒருதலைக் காதல். அஞ்சலியின் சிக்னலுக்காக ஒரு பக்கம் ஏங்கிக்கொண்டிருக்க, மற்ற மூன்று பக்கங்களில் மூன்று பேர் திலீபனை போட்டுத் தள்ள வெறியோடு அலைய... ஏன் இந்த கொலைவெறி? என்று ஆடியன்ஸ் நிமிர்ந்து உட்கார, விரிகிறது படம். திலீபனுக்கு என்ன நேர்ந்தது? அஞ்சலியோடு காதல் நிறைவேறியதா? என்பதுதான் எதிர்பார்க்க வைக்கும் மீதிக் கதை.

புறநகர் பகுதியில் வசிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர் கேரக்டரில் புதுமுகம் திலீபன் கன கச்சிதம். ‘‘தாம்பரம்... தாம்பரம்...’’ என சவாரிக்காக ஆட்களைக் கூவி அழைப்பவர், காதலியை கண்டதும் ரூட்டை மாற்றி ‘‘அம்பத்தூர்... அம்பத்தூர்...’’ என்று அசலாக அசடு வழிகிறார். ‘‘நீங்க என்னைக் காதலிக்கறது உங்க விருப்பம்... நான் உங்களைக் காதலிக்கலியே!’’ என்று அஞ்சலி குண்டைத் தூக்கிப் போட்டாலும், லவ் டிராக்கில் ஜாலி கியர் போட்டுத் தூக்குகிறார்.

சம்பத்தின் அடியாட்களை வீடு புகுந்து துவம்சம் செய்பவர், ‘‘நீ இருக்குற தைரியம்தான் இவங்களோட பலமே. நீ வா...’’ என்று சம்பத்தையும் சண்டைக்கு அழைத்து கீழே சாய்ப்பது, கிளைமாக்ஸில் சம்பத்துக்கு மரண பயத்தைக் காட்டுவது என ஆக்ஷன் ஏரியாவில், ‘இது இவருக்கு முதல் படம்தானா’ என்றே ஆச்சரியப்பட வைக்கிறார்.

திலீபன் மீது இருக்கும் காதலை வெளியே காட்டிக்கொள்ளாமல் ஹீரோவை மிரட்டுவது... ‘‘ஹாய், ஹவ் ஆர் யூ? வாட் டைம் நவ்? வேர் ஆர் யூ கோயிங்?’’ என டியூஷன் சென்டரில் கற்றுக்கொண்ட ஆங்கில அறிவை வெளியே சோதித்து பில்டப் செய்வது என அஞ்சலி அதகளப்படுத்துகிறார். ஆனாலும் ‘எங்கேயும் எப்போதும்’ கேரக்டரை அப்படியே நினைவூட்டுவது அவ்வப்போது அலுப்பு.
லாஜிக்கில் ஓட்டை விழாமல் இருப்பதில் இயக்குனர் சர்வ ஜாக்கிரதை காட்டியதை மீறியும் பல இடங்களில் காதுல பூ. இன்கம்டாக்ஸ் அதிகாரியைக் கொலை செய்யப்போகும் திட்டத்தை டீக்கடையில் நின்று சர்வசாதாரணமாகப் பேசுவது, பூட்டிய வீட்டில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ துப்பாக்கிசூட்டிலிருந்து தப்பிப்பது, மண்டையில் அத்தனை அடி விழுந்தும் மருந்துக்குக் கூட மயங்காதது... என எத்தனை தடவை சறுக்குவது?

சென்னை, புறநகர் என நகரும் கதைக்களம் திடீர் திடீரென வேறு வேறு லொகேஷனுக்கு தாவுவது ஏனோ? ஃபிளாஷ்பேக் காட்சிகளில் எடிட்டர் பிரவீன் - ஸ்ரீகாந்த் கை வைத்திருந்தால், அவ்வப்போது இறங்கும் டெம்போவை தவிர்த்திருக்கலாம். ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு சுமார் ரகம். பாடல்களில் ஜெயித்த ஜிப்ரான், பின்னணி இசையில் ஆறுதல் தரவில்லை.
கண்முன் பார்க்கும் அட்டூழியத்தை, அவலத்தை தட்டிக் கேட்க ஆசைப்படும் நம்மில் பலரின் ஆதங்கத்துக்கு ஆறுதல் தருவது போல் ஹீரோ கேரக்டரை வடிவமைத்ததற்கும் சமூக அக்கறையை இழையோட வைத்ததற்கும் அறிமுக இயக்குனர் கின்ஸ்லினுக்கு வாழ்த்து.
கலவை சரியாக இருந்திருந்தால் இன்னும் பவர்ஃபுல்லாக வெளிச்சம் தந்திருக்கும் ‘வத்திக்குச்சி’.
- குங்குமம் விமர்சனக் குழு