விஸ்பரூபம் பார்ட் 2 என்ன கதை?





கமலின் வீட்டுப் பத்திரங்களை பத்திரப்படுத்தி விட்டது ‘விஸ்வரூபத்தின்’ வெற்றி. நடனம், கலை வடிவமைப்பு என லேட்டஸ்ட்டாக கிடைத்துள்ளது இரண்டு தேசிய விருதுகள். வெற்றி தந்த உற்சாகத்தை, விருதுகளின் பற்றாக்குறை லேசாக வடியச் செய்திருந்தாலும், ‘விஸ்வரூபம் பார்ட் 2’ வேலைகளில் எப்போதோ இறங்கிவிட்டார் கமல். முதல் பார்ட்டின்போதே செகண்ட் பார்ட்டிற்கான பெரும்பாலான படப்பிடிப்பையும் சேர்த்தே முடித்துவிட்டார்களாம். எப்போதும் அட்வான்ஸாகவே பிளான் பண்ணும் கமலுக்கு, இந்த பார்ட் டூ ஐடியா தற்செயலாகத்தான் தோன்றியது என்கிறது கமல் வட்டாரம். நடந்தது என்ன?

‘விஸ்வரூபம்’ படத்தின் க்ளைமாக்ஸ் தவிர்த்த மற்ற காட்சிகளை எடுத்து முடித்து போட்டுப் பார்த்தபோது நான்கரை மணி நேரத்திற்கு மேல் வந்துள்ளது. என்ன செய்யலாம் என்று கெட்டப் தாடியைத் தடவியபோது டக்கென்று வந்து நின்றது பார்ட் டூ ஐடியா. ஆக, இரண்டாம் பார்ட்டிற்கான 60 சதவீதக் காட்சிகள் முதல் பார்ட்டிலேயே கிடைத்துவிட்டன. மீதமிருந்த 40 சதவீத வேலைகளே இப்போது நடக்கிறது. செகண்ட் பார்ட் கதை இதுதான்...



அமெரிக்காவிலிருந்து தப்பிக்கும் தீவிரவாத தலைவன் உமர் (ராகுல் போஸ்) இந்தியாவுக்குள் நுழைகிறான். அவனைப் பிடிக்க போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ லீக் ஆக, எஸ்கேப் ஆகிறான் உமர். வாரத்திற்கு இரண்டு இடங்கள் என தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே போகும் உமரைப் பிடிக்க இந்திய அரசாங்கம் தலையைப் பிய்த்துக்கொள்கிறது. மனைவி, ஹனிமூன் என்று விடுமுறையை என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கும் உளவுத்துறை அதிகாரியான கமல் மறுபடியும் என்ட்ரி ஆகி தீவிரவாத தலைவன் உமருக்கு கட்டம் கட்டுகிறார். இதோடு படம் முடிகிறதா அல்லது மூன்றாவது பார்ட் எடுக்கும் யோசனை கமலிடம் இருக்கிறதா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

பார்ட் டூவில் வேறென்ன ஸ்பெஷல்?
நடு வானில் பறக்கும் இரண்டு விமானங்களில் இருந்தபடி வில்லனும், உளவுத்துறை அதிகாரியான கமலும் மோதும் ஒரு சண்டைக் காட்சி ஆக்ஷன் ரசிகர்களுக்கு சூப்பர் தீனியாக இருக்குமாம். ரொமான்ஸ் ஏரியாவிலும் காதல் ரசம் சொட்டுகிறாராம் கமல். ‘‘எனக்கு விஷ்வநாத்தைத்தான் பிடிக்குது’’ என சிணுங்கும் ஆண்ட்ரியாவுக்காக, அதில் டான்ஸர் கெட்டப்பில் மாறும் கமல், அடுத்த வருட தேசிய விருதையும் அபகரிக்கும் அளவுக்கு சிறப்பான நடனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளாராம். முதல் பார்ட்டில் இருந்த புறாக் கால்களில் அணுக்கதிர் துகள்களை கட்டி விடுவது போன்று ‘அட’ போட வைக்கும் ஐடியாக்களையும் ஆங்காங்கே நுழைக்கிறாராம்.

படத்தில் விஷுவல் எஃபெக்டின் பங்கு மிக முக்கியம் என்பதால், விஷுவல் எஃபெக்ட் மதுசூதனுடன் தினமும் ஆலோசனையில் இருக்கிறார் கமல். நடுவானில் விமானத்தில் போடும் சண்டைக் காட்சி முழுக்க விஷுவல் எஃபெக்ட்டில்தான் எடுக்கப்படுகிறது. இதற்காக செட் போடும் பணி நடந்து வருகிறது. கதைப்படி சென்னையை குண்டு வைத்துத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் போடுகின்றனர். இதற்கு எச்சரிக்கை விடுவது போல சாம்பிளுக்கு சென்னையின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்க்கின்றனர். இந்தக் காட்சிக்கு அவ்வளவு பெரிய பிரமாண்டமான செட் போடுவதெல்லாம் சான்ஸே இல்லை. முழுக்க முழுக்க விஷுவல் எஃபெக்ட்டில் இதுவும் மதுசூதனின் கைவண்ணத்திலேயே உருவாகி வருவதாகத் தகவல் அறிந்த வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

நடு வானில் பறக்கும் இரண்டு விமானங்களில் இருந்தபடி வில்லனும், உளவுத்துறை அதிகாரியான கமலும் மோதும் ஒரு சண்டைக் காட்சி ஆக்ஷன் ரசிகர்களுக்கு சூப்பர் தீனியாக
இருக்குமாம்.
- அமலன்