ஆல்தோட்ட பூபதி





டேய்ய்ய்... எவன்டா அவன் ‘இத்தாலியில இருந்து வந்தவனும் போக மாட்டேங்குறான், இத்தாலிக்குப் போனவனும் வரமாட்டேங்குறான்’னு கூவுறது? பிச்சுபுடுவேன் பிச்சு. டேய், இங்க எவன்டா ‘அவனுங்க என்ன இங்க தலை தீபாவளி கொண்டாட மாமியார் வீட்டுக்கா வந்திருக்காங்க? இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்னவங்கள எதுக்கு திருப்பி அனுப்பணும்’னு எதிர் பாட்டு பாடறது? தூக்குல போடப்பட்ட கசாப் பாகிஸ்தான் வரை போயிட்டு வந்துடுறேன்னு கேட்டிருந்தா கூட பத்திரமா பஸ் ஏத்தி விட்டு டாட்டா காமிக்கற நல்லவங்கடா நாம. யாரை அனுப்பக் கூடாதோ அவங்களை அனுப்பிட்டு, இப்போ இத்தாலி தூதரை வெளியேற விடாம தடுத்துக்கிட்டு இருக்கோம் பாத்தியா... அதான் நம்ம ‘டக்’குடா மக்கு.

இத்தாலின்னா சாதாரணமில்லைய்யா, நம்ம நாட்டோட முப்பது வருஷத்துக்கு மேல ஊழல் முதல் காதல் வரை பலவகைகளில் நெருங்கிய தொடர்பில் இருக்கு. இதுல தன்னைப் படைத்த வசீகரனையே எதிர்த்துப் பேசி கடுப்பேற்றும் சிட்டி ரோபாவாய் பிரதமர் வேற இத்தாலிக்கு எதிரா காரசார அறிக்கை விடுறாரு. ஓ... ஒருவேளை இவரே ‘இத்தாலிக்கு’ தூதுவரா இருக்கிறப்போ, தனியா இன்னொரு தூதர் எதுக்குன்னு கோவப்படுறாரோ? ஆனா, ஒண்ணு... இத்தாலி தூதரையாவது கண்டிக்கலாம், இலங்கைத் தூதரை ஒண்ணும் பண்ண முடியாது. ஏன்னா அவங்க தூதரே நாமதான்.

இன்றைய தலைமுறையைப் பொறுத்தவரை அப்பா எனப்படுபவர் குழந்தைகளின் பத்து வயது வரை ஹீரோ, பத்திலிருந்து இருபது வயது வரை ஜீரோ, இருபதுக்கு மேல் யாரோ!

அப்பாக்கள் தாங்கள் ஹீரோவாய் திகழ வேண்டிய குழந்தைகளின் பால்ய வயதில், பணம் தேடும் பெரும் பணிகளால் ஹீரோ வாய்ப்பை சோட்டா பீம் போன்ற கார்ட்டூன் கேரக்டர்களிடம் பறிகொடுத்து விட்டார்கள். சோட்டா பீம்களில் வரும் ராஜாக்கள், ‘‘பீம், உன்னால இந்த நாட்டுக்கே பெருமை’’ என்று எப்படி ஒரே டயலாக்கை பேசுகிறார்களோ, அதுபோலவே இவர்களும் ‘‘உன்னால நம்ம குடும்பத்துக்கே பெருமை சேரணும், அதனால படிச்சு பெரிய எஞ்சினியர் ஆகணும்’’ என்ற ஒரே டயலாக்கைப் பேசுகிறார்கள். சின்னப் பசங்களை புரிந்துகொண்ட சோட்டா பீம் மகாராஜா, குழந்தைகளின் அன்பைப் பெற்றார். நமக்கு அப்படியான அன்புப் பகிர்வு கிடைக்குமா என்பது சந்தேகமே.



*  பெண்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆண்கள் பிரச்னைகளை சீக்கிரம் தீர்த்து விட வேண்டும் என்று!

    ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் பிரச்னைகளை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டுமே என்று!

*  பெண்களின் வெட்கத்தைப் புகழ்ந்து பேச ஆயிரம் வார்த்தைகள் உண்டு;

    ஐநூறு வார்த்தைகளிலாவது புகழ்ந்து பேசினால்தான் ஆண்களுக்கு வெட்கமே வரும்.

*  பெண்கள் நினைப்பது, ஆண்கள் அவர்களின் பேச்சை 5 நிமிஷமாவது கேட்க வேண்டுமென.

    ஆண்கள் நினைப்பது, 5 நிமிஷமாவது பெண்கள் பேசாமல் இருக்க வேண்டுமென.

*  ஒரு வேலையை ஆண்களிடம் சொல்லி அதை ஒன்பது தடவை ஞாபகப்படுத்தாட்டி அவர்கள் பெண்களும் இல்ல...
    பெண்கள் 9 தடவ ஞாபகப்படுத்திய வேலையை மறக்காட்டி அவங்க ஆம்பளையும் இல்ல.

*  ஆண்கள் பெண்களை ஜில், ஜங், ஜக் என மூன்று வகைப்படுத்துகிறார்கள். பெண்களோ ஆண்களை, பின்னால் அலைஞ்சவன், அலையாதவன் என இரு வகைப்படுத்துகிறார்கள்.

*  பெண்கள் பயப்படுவது ஆணுக்கல்ல, ஆண்களுக்கு.
    ஆண்கள் பயப்படுவது பெண்களுக்கல்ல, பெண்ணுக்கு!

ஹோட்டல் பார்சல் சாப்பாடு / டிபன் வாங்கிட்டு வந்தாக்கா, அவங்க கட்டிக் கொடுக்கிற சாம்பார் பாக்கெட் ரப்பர் பேண்ட் முடிச்சை அவுக்கிறது, கிட்டத்தட்ட ஒரு பொண்ணு ஏதேனும் விசேஷத்துக்குக் கிளம்பறப்ப பட்டுப் புடவையக் கட்டுற மாதிரி ரொம்ப ரொம்ப கஷ்டமானது.

அதோட ஒட்டி கட்டித் தந்த சட்னி பாக்கெட்டுகளை அவுக்கிறது குழந்தைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் போட்டு விடற மாதிரி இன்னமும் கொடுமையான செயல். இந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் கதையான ‘மாற்றானை’க் கூட இந்த சட்னி - சாம்பார் பாக்கெட்டுகள பார்த்துத்தான் யோசிச்சு இருப்பாங்க போல. அய்யா ஹோட்டல்காரவுங்களே... தயவுசெய்து பார்சல் பொட்டலத்த கொஞ்சம் ஈசியா பிரிக்கிற மாதிரி கட்டிக் கொடுங்க. இல்லன்னா இதைப் பிரிக்கிற சக்திக்கே இன்னமும் ரெண்டு இட்லி சேர்த்து கட்டி விடுங்க!

முப்பது வருடங்களாக வெறும் மனப்பாட மதிப்பெண் மரங்களை மட்டுமே உருவாக்கி வந்த நம்ம கல்விமுறைக்கு மீண்டும் பெருமை வந்து விட்டது. 1960/70களில் தி.மு.க கண்டெடுத்த, காண வைத்த எழுச்சி மிக்க மாணவர்கள் மீண்டும் பிறந்து விட்டார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. இவர்களின் அறவழி போராட்டம் எதில் முடியும் என விளைவுகளை ஆராய வேண்டாம். இந்த சமயத்திலாவது மாணவர்கள் தங்கள் அப்பா, பெரியப்பாக்கள் காலத்தை போல ஒற்றுமையின் சக்தியை உணர்ந்து கொண்டார்கள் என நினைக்கும்போது பூரிப்பு வருகிறது. இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, இளைஞர்கள்/ மாணவர்கள் மீதும், சமூக வலைத்தளங்கள் மீதும் ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் அச்சம் கொள்ளும் காரணம் புரிகிறது. இந்த மாணவர்களுக்கு இருக்கும் உணர்வு, அதிகாரம் கொண்ட மாண்புமிகுக்களுக்கு இருக்கிறதா?

குளிக்கிறதுக்கு ஒரு சோப்பு செலக்ட் பண்ணவே நாம பலமுறைகளைக் கையாளுறோம். இந்த வெள்ளைக்காரங்க என்னடான்னா அவ்வளவு முக்கியமான போப்பை செலக்ட் பண்றதுக்கு புகைக்கூண்டுல வெள்ளைப் புகை, கருப்புப் புகைன்னு பழைய மெத்தடையே இன்னமும் பயன்படுத்தறாங்க. வெள்ளைக்காரங்க மட்டும், குஜய் டி.விகிட்ட ஐடியா கேட்டிருந்தா, ‘உங்களில் யாரு அடுத்த போப்?’னு செலக்ஷனை ஒரு வருஷம் இழுத்திருக்கலாம். அது மட்டுமா, ஆரம்பத்துல செலக்ட் ஆகாம போன போப் போட்டியாளர்களுக்கு வைல்ட் கார்ட் ரவுண்ட் மூலமா இன்னொரு வாய்ப்பு தந்திருப்பாங்க. டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏத்த இடையில யாராவது ஜட்ஜ கோவப்பட வச்சு வெளிநடப்பு கூட செய்திருப்பாங்க. ‘அய்யா, இன்னொரு தடவை எங்களை ஓட விட்டீங்க... சேகர் செத்துடுவான்’னு ‘ஈயம், காண்டவம்’ பட சி.டிக்கள் கையெடுத்து கும்பிடுற மாதிரி, வாரா வாரம் இந்த நிகழ்ச்சியோட பைனல் சி.டிய போட்டு நம்மள நோகடிச்சிருப்பாங்க.

இந்த வார குட்டிச்செவுரு போஸ்டர் பாய்...
ஐ.ஏ.எஸ் தேர்வில் மாநில மொழிகளுக்கு எதிராக மாற்றம் அறிவித்து, வாங்கிக் கட்டிக் கொண்டு வாபஸ் வாங்கிய யு.பி.எஸ்.சி!