சண்டை
டி.வி. சீரியல் பார்த்துக்கொண்டிருந்த ராகவன், யாரோ அழைக்கும் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார். அதே அபார்ட்மென்ட்டில் மேல்தளத்தில் குடியிருக்கும் மூர்த்தி நின்றிருந்தார். ‘‘சார்... கீழே பார்க்கிங்ல பசங்க விளையாடிட்டு இருந்தப்ப எங்க பையனுக்கும் உங்க பையனுக்கும் ஏதோ சண்டை. சட்டை கிழிஞ்சிருச்சு...’’ என்று அவர் தொடர்ந்து பேசுவதற்குள்... ‘‘இதுதான் நீங்க பிள்ளை வளர்க்கிற லட்சணமா? இப்படி ரவுடித்தனம் பண்றதுதான் விளையாட்டா? இப்ப என் பிள்ளைக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு?’’ எனப் பொறிந்து தள்ளினார் ராகவன். ‘‘சார்... சார்... கொஞ்சம் பொறுமையா...’’

‘‘என்னய்யா பொறுமை வேண்டிக் கிடக்கு...’’ என்ற ராகவன், சற்று குரல் தாழ்த்தி ‘‘அதான் தராதரம் தெரியாம கண்டவங்களையும் குடி வைக்கக் கூடாதுங்கறது’’ என்று முணுமுணுத்தார். ‘‘என்ன சார் இதுக்குப் போய் இப்படிப் பேசுறீங்க? உங்க பையன்தான் என் பையனை அடிச்சி சட்டையைக் கிழிச்சிருக்கான். இது தெரிஞ்சா நீங்க அடிப்பீங்கனு பயத்துல உங்க பையன் அழுதுகிட்டிருக்கான். சின்னப் பசங்கன்னா இப்படித்தான்... இன்னிக்கு அடிச்சிப்பாங்க, நாளைக்கு கூடிப்பாங்க. அவனை அடிக்காதீங்கனு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். வர்றேன் சார்!’’ என்ற மூர்த்தியை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தலை குனிந்தார் ராகவன்.
-மீனா சுந்தர்
|