பக்குவம்





“அப்பா, ரமேஷ்னு எங்க ஆபீஸ்ல என்கூட வொர்க் பண்றவர். என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்றார். வீட்ல வந்து பேசச் சொல்லியிருக்கேன். நீங்க முடிவு பண்ணிக்கங்க’’ - மகள் சுமி இப்படிச் சொன்னதும் மணிக்கு அதிர்ச்சி.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கல்யாண வீட்டில் அவரது தங்கை வந்து, ‘‘என் பையன் ராமு உன் பொண்ணை விரும்பறதா தெரியுது. நீ என்ன சொல்றே அண்ணா?’’ என்றபோது, இதே சுமிதான் வெட்கமாக புன்னகைத்து சம்மதம் தந்தாள். இப்போது இன்னொருவனை வரச் சொல்லியிருக்கிறாள்.
‘‘அப்போ அத்தைக்கு என்னம்மா பதில் சொல்றது...’’ என்று அவர் இழுக்க, தெளிவாகப் பேசினாள் சுமி.
‘‘அப்பா, ஒரு மனுஷன் காதலிக்கிற பொண்ணுகிட்ட தைரியமா தன் காதலைச் சொல்லணும். ஆனா, ராமு அத்தான் அத்தைகிட்டதான் சொல்லி அனுப்பினார். அதுக்கு அப்புறம் நேர்ல என்னை பல தடவை பார்த்தும் கூட, கல்யாணத்தைப் பத்தி வாயைத் திறக்கல. இதுக்குக் கூட தைரியம் இல்லாத ஆம்பளைங்க, நாளைக்கு பிரச்னைனு வந்தா ஓடி ஒளிஞ்சுக்குவாங்கப்பா. இந்த ரமேஷ் தைரியசாலி. உங்களுக்குப் பிடிச்சிருந்தா இவரையே நான் கல்யாணம் பண்ணிக்கறேன். இல்லைன்னா வேற மாப்பிள்ளை பாருங்க. அந்த பயந்தாங் கொள்ளி ராமு அத்தான் வேண்டாம்!’’
இந்தக் காலப் பெண்களின் மனப் பக்குவம் கண்டு பிரமித்தார் மணி.