ஜென்டில்மேன்





ஷாப்பிங் முடித்துவிட்டு முரளியும் கீதாவும் பைக் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தார்கள். வண்டியைக் காணவில்லை. மாமனார் வீட்டில் வாங்கிக் கொடுத்திருந்த புது பைக். திருமணத்துக்குப் பிறகு அப்போதுதான் முதன்முதலாக வண்டியில் வெளியே வந்திருந்தார்கள். ‘ஐயோ... புது வண்டியாச்சே’ - அலறியடித்தபடி பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள்.

‘‘கம்ப்ளெயின்ட் எழுதி ரைட்டர் கிட்ட குடுத்துட்டுப் போங்க. எதுக்கும் வண்டியை நிறுத்தியிருந்த இடத்துல இன்னொரு தடவை நல்லா தேடிப் பாருங்க’’ என்றார் இன்ஸ்பெக்டர்.
அவநம்பிக்கையோடு ஆட்டோ பிடித்து, மீண்டும் அந்தக் கடையின் வாசலில் வந்து பார்த்தான் முரளி. என்ன ஆச்சரியம்! இப்போது முரளியின் பைக், அதே இடத்தில் நின்றிருந்தது. அதன் மீது ஒரு கடிதமும் சொருகப்பட்டிருந்தது. ‘மன்னிக்கணும் சார்... எங்க அப்பாவுக்கு முக்கியமான ஆபரேஷன். சரியான நேரத்தில் பணத்தைக் கட்டுறதுக்காக உங்க வண்டியைப் பயன்படுத்திக்கிட்டேன். அதுக்குப் பிராயச்சித்தமா உங்களுக்காக ரெண்டு சினிமா டிக்கெட்டை இந்தக் கடிதத்தோடு வச்சிருக்கேன். ரொம்ப நன்றி!’
‘‘சொல்லாம ஒரு பொருளை எடுத்துட்டாலும், அதைத் திருப்பிக் கொடுக்கிற முறையைப் பார்த்தியா? அவன் ஒரு ஜென்டில்மேன்...’’ என்ற முரளி, அன்றிரவே மனைவியோடு சினிமா போனான்.

திரும்பி வந்தால், அவர்கள் வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வண்டியின் டாங்க் கவரில் இருந்த ஆர்.சி புக் ஜெராக்ஸ் பிரதி மூலம்தான் வீட்டு முகவரியைத் திருடன் கண்டுபிடித்திருக்கிறான். அந்த ஜெராக்ஸ் பிரதி அங்கே ஒரு மூலையில் கிடந்தது.