பரதேசி : சினிமா விமர்சனம்





இனி தேநீர் குடிக்கும்போதெல்லாம் நெஞ்சம் பதற வைப்பான் இந்தப் பரதேசி! பச்சைத் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே பதுங்கிக் கிடக்கும் ஒரு துயர வரலாற்றைச் சொன்ன டேனியலின் ‘ரெட் டீ’ நாவலைத் தழுவி, ‘பரதேசி’ படைத்திருக்கிறார் பாலா. ஒரு கொத்தடிமைச் சமூகத்தின் கரிய சரித்திரத்தை திரையில் இவ்வளவு வீரியமாக விதைத்தற்காக பாலாவுக்கு எமது வணக்கங்கள்!

1939ல் விரிகிறது கதை. சாலூரைச் சேர்ந்த ஒட்டுப்பொறுக்கி அதர்வா, தண்டோரா போடுகிறவர். அதே ஊரைச் சேர்ந்த அங்கம்மா வேதிகாவுக்கும் அவருக்கும் அழகாக பூக்கும் பிரியம் கல்யாணத்துக்கு முன்பே உறவில் முடிகிறது. அப்போது ஊரில் பஞ்சம் பிடுங்கித் தின்ன, கங்காணி ஒருவர் அந்த ஜனக்கூட்டத்தை வஞ்சகமாகப் பேசி தேயிலைத் தோட்டத்தொழிலுக்கு கொத்தடிமைகளாக கூட்டிப்போகிறார். காதலியை ஊரில் விட்டுவிட்டு அதர்வாவும் அவர்களோடு போகிறார். அதன் பிறகு இருள் காடாய் விரியும் தேயிலைத் தோட்ட பொழுதுகளும், பிரிந்தவர்கள் மறுபடி சேர்ந்தார்களா என்பதும் கண்ணீரின் கதை.

வழக்கமான பாலா இல்லை இது. ஒட்டுப்பொறுக்கிக்கும் அங்கம்மாவுக்கும் பசியில் தொடங்கி ‘பசி’யில் முடியும் காதலிலிருந்து ‘நாயமாரேஏஏஏ... கொஞ்சம் எரக்கம் காட்டுங்க நாயமாரே...’ என உச்சிப்பாறையிலிருந்து நாயகன் கூவுவது வரை நாம் பார்க்காத எளிய மக்களின் இருண்ட பக்கங்களை ‘இதோ இதோ’ என திறந்து காட்டுகிறார். பொறுக்க முடியாத வறுமைக்கு நடுவிலும் காமெடியும் கலகலப்புமாக போகும் சாலூர் வாழ்க்கையில் அந்தக் கங்காணி ஜெர்ரி வருகிறபோதே இன்னொரு இடத்திற்குப் போகிறது படம். அவ்வளவு ஜனத்தையும் அழைத்துக்கொண்டு பொட்டல் காட்டில் கங்காணி போகிறபோது, வழியில் ஒருவர் மயங்கி குற்றுயிராய் விழ, எதுவும் செய்ய முடியாமல் கங்காணி பின்னால் போகிறார்கள் மக்கள். அப்போது தவித்து விழுகிற அந்த கை ஷாட்டே, வரப்போகிற அத்தனை பயங்கரங்களையும் சொல்லிவிடுகிறது. தேயிலைத் தோட்டத்தில் விரியும் அந்த வாழ்க்கை... நிச்சயமாக ஓர் உலக சினிமா. கங்காணியை வெள்ளைக்காரன் அடிப்பதும், கங்காணி அடிமையான மக்களை வதைப்பதுமாக கண்ணீரின் வர்க்க வரலாற்றைச் சொன்னதிலேயே இது நமக்கான சினிமாவாகிறது.



அந்த ஒட்டுப்பொறுக்கி பாத்திரத்தில் இருக்கிற அப்பாவித்தனமும் ஆதங்கமும் அத்தனை அழகு. கடைசி வரை இயல்பு மாறாமல் திடீர் சண்டைகளுக்குக் கிளம்பாமல் இருப்பதே மனதில் அறைகிறது. ஒட்டுப்பொறுக்கியின் பிள்ளையை சுமக்கும் வேதிகா கேரக்டராகட்டும், தேயிலைத் தோட்டத்தில் புருஷன் ஓடிப்போய்விட பிள்ளையோடு தனியே அல்லாடும் தன்ஷிகாவாகட்டும், வெள்ளைக்கார வெறிக்கு பலியாகும் அந்த கருத்தக்கண்ணியாகட்டும், ஒட்டுப்பொறுக்கியின் பாட்டியாக வரும் அந்த கூன் கிழவி கச்சம்மாவாகட்டும்... அத்தனை பாத்திரங்களிலும் ஜீவன் ததும்புகிறது.
ஒட்டுப்பொறுக்கியாக அதர்வா... நிச்சயமாக அதர்வாவுக்கு அற்புதமான படம். தண்டோரா கொட்டுகிற அந்த ஸ்டைலிலிருந்து, கால் நரம்பு அறுந்து விந்தி விந்தி நடந்து கண்ணீரும் காதலும் சுமந்து... படம் முழுக்க அப்படி உழைத்திருக்கிறார். ஹேட்ஸ் ஆஃப் அதர்வா!

அங்கம்மா வேதிகா அப்படியே செம ஃபிட். சூட்டிகையும் காதலுமாக ரசிக்க வைக்கிறார். கொஞ்சம் ஆண் தன்மையோடு ‘பொம்பளைய தப்பா பேசுனா... கொன்னுருவேன்’ என்கிற தன்ஷிகா... நரம்பு துண்டித்த அதர்வாவை கையில் வாரி நெஞ்சில் ஏற்றி ஆசுவாசப்படுத்தும் நேர்த்தி... ஆஹா! சின்ன கோபத்திலும் புன்னகையிலுமே அவ்வளவு பேசிவிடுகிறார். கங்காணியாக வருகிற ஜெர்ரி சிரிப்பிலேயே அவ்வளவு வஞ்சத்தைக் கொண்டுவந்ததில்... நல்ல அறிமுகம். கடுகடு பேச்சும், பேரனின் பிரியத்தை வார்த்தைகளில் ஏந்தி சாடுவதுமாக காமெடி நடிகர்களையெல்லாம் லெப்ஃப்ட்டில் அடிக்கிற மாதிரி ஆச்சரியப்படுத்துகிறார் கச்சம்மா. கருத்தகண்ணியாக வருகிற ரித்விகா, போதையில் ஜாலி ஆட்டம் போட்டு காலியாகும் விக்ரமாதித்தியன்... எப்படிப்பா! உங்களையும் ஞாபகத்திலிருந்து பிரிக்க முடியவில்லை.

ஆரம்பக் காட்சியிலே சாலூர் கிராமத்திற்குள் இன்ச் இன்ச்சாகப் பயணமாகும் செழியனின் கேமரா தேயிலைத் தோட்டங்களில் அபாரமாக உழைத்திருக்கிறது. உங்கள் தலைவர் பி.சி.ஸ்ரீராம் பெருமைப்படுவார் பாஸ்! ஜி.வி.பிரகாஷ் இசையில், வைரமுத்துவின் வார்த்தைகள் உரம் சேர்க்கின்றன. இயல்பான பேச்சு மொழியில் நாஞ்சில்நாடன் வசனத்தில் பிரமாதப்படுத்துகிறார்.

கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வரும் டாக்டரும் அவர் மனைவியும் போடும் குத்தாட்டம் கொஞ்சம் ஓவர் சார். அப்புறம் தேயிலைத் தோட்ட கொடுமைகளுக்கு நடுவே அந்த மக்கள் எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாமல் இருப்பது ஏன்? சாலூரின் வறுமையையும் பஞ்சத்தையும் இன்னும் கூட அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
ஆனாலும், பரதேசி தமிழ் சினிமாவில்... இந்திய சினிமாவில்... ஒரு மகத்தான நிகழ்வு. இது நமது மண்ணையும் மக்களையும் பேசும் உலக சினிமா!
- குங்குமம்
விமர்சனக் குழு