என்னத்த நடிச்சிட்டேன்! பரதேசி பாட்டி ‘நச்’





‘‘அந்தக் காலத்துல ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் பாத்ததோட சரி கண்ணு. அதுக்குப் பெறவு சினிமா கொட்டா பக்கமே போனதில்ல. ஆனா, இப்ப என்னய இந்த ஊரே சினிமா பாட்டின்னு கூப்புடுது. கெரகத்தப் பார்த்தியா?’’ - ஊஞ்சல் கயிறு போல் நீண்டிருக்கும் காது மடலை காற்றில் ஆடவிட்டபடி பேசுகிறார் கச்சம்மாள். ‘பரதேசி’யில் அதர்வாவின் பாட்டியாக களேபரம் செய்தவர்.

மதுரை, திருமங்கலம் அருகே செங்குளம் என்ற குக்கிராமம்தான் கச்சம்மாளின் சொந்த ஊர். உறவுக்காரர்களின் ஓட்டை உடைசல் வீட்டில், தன் மூத்த மகளோடு ஒண்டிக் கொண்டிருக்கிறார்.
‘‘பதினெட்டு வயசுல மொறமாமனுக்கு என்னயக் கட்டி வச்சாக. அவுக எப்பயும் அரசியலு, கட்சி அது இதுன்னு கெடப்பாக. அப்படியே இருந்ததெல்லாம் போச்சு. கூலி வேலை பாத்துத்தேன் கஞ்சி குடிக்கிற நெலமை. தாளமுத்து, சமுத்திரம்னு ரெண்டு பொட்டப் புள்ளைங்க. அமாவாசைனு ஒத்தைக்கோரு மவன். மத்தவங்களுக்கு கல்யாணத்தை முடிச்சி வச்சுப்புட்டோம். தாளமுத்துதேன் ஊனமா போயிட்டா. அதுக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்க்க முடியல’’ - ராகத்தோடு தன் சோகம் சொல்லி அழும் கச்சம்மாளுக்கு இந்தக் குரல்தான் சினிமா வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.

‘‘சின்ன வயசுல இருந்தே பாடுவேன் கண்ணு. அவுக போன பெறவு அதுதேன் ஆறுதல். ஒரு நாளு ‘அரவான்’ படத்துக்கு ஆளு தேடி வந்தாக. காது வளத்த கெழடுக பத்து பேரு வேணும்னாக. இந்தக் கெழவி பாடவுஞ்செய்வாள்னதும் என்னையப் புடிச்சிப் போச்சி. அதுலதேன் மொதல்ல நடிக்க வச்சாக. ‘நல்லா நடிச்சிருக்கியே அப்பத்தா’ன்னு அப்பவே நெறய பேரு சொன்னாக. அதப் பாத்துட்டுத்தேன் பாலா தம்பியும் நடிக்க வச்சிச்சு’’ என்கிற கச்சம்மாள், இந்த வயதிலும் நிமிர்ந்து கம்பீரமாக நடக்கிறார். திரையில் அச்சு அசல் கூன் விழுந்த பாட்டியாக கச்சிதம் காட்டியிருக்கிறார்.

‘‘என்னத்த கண்ணு நடிக்கிறேன்... எல்லாம் இருக்குறபடிதேன் இருக்கோம். 17 வருஷத்துக்கு முன்னாடியே புருஷன் போய்ச் சேந்துட்டாரு. எம்புட்டு வயசானாலும் ஒழச்சு ஓடாத் தேயத்தேன் எனக்கு எழுதிருக்கு. கஷ்டங்கவலையத் தவுர வேற என்னத்தப் பார்த்துருச்சு இந்தக் கட்ட? அப்படியே என்னைய மாதிரி ஒரு மனுசியாத்தான நடிக்கச் சொல்லுறாக. அதுல என்ன இருக்கு?’’ என்கிற கச்சம்மாள், இந்தப் படம் பற்றிப் பேசினாலே இன்னொரு சோகத்தில் ஆழ்கிறார். ‘பரதேசி’ ஷூட்டிங் முடிந்து டப்பிங் பேச வேண்டிய கேப்பில் ஊருக்கு வந்திருந்தபோது அவர் மகன் அமாவாசை ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனாராம்.

‘‘இத்தனையும் பாத்துக்கிட்டு இன்னும் உசுரத் தாங்கி இருக்கேனே... அதான் வேதனை!’’ - ‘பரதேசி’ படத்தை விடவும் கலங்க வைக்கிறது கச்சம்மாளின் வாழ்க்கை.
- தா.கார்த்திகேயன்