வயதைக் குறைக்கும் விஷ ஊசி!





பிபாஷா பாசு, ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி, மாதுரி தீட்சித், நிகோல் கிட்மேன், ஜெனிஃபர் அனிஸ்டன், சிண்டி கிராஃபோர்ட், டாம் க்ரூஸ் என பாலிவுட், ஹாலிவுட் நடிகர், நடிகைகளைப் பார்க்கும் பலருக்கும் ஒரு ஆச்சரியம் எப்போதும் இருக்கும். நாற்பது வயதை நெருங்கிய, தாண்டிய பிறகும் இவர்கள் முகம் மட்டும் எப்படி வயதின் சுருக்கங்கள் இல்லாமல் இத்தனை இளமையாக இருக்கிறது? அதற்குக் காரணம் ஒரு விஷ ஊசி! இப்போது உலகமே அதன் பின்னால் அலைகிறது...

தாங்கள் முதுமை அடைவதை அறுபது வயதில்கூட பெண்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு சுவாரசியமான கதை கூட இதுபற்றி உண்டு. நாற்பது வயதுப் பெண்மணி ஒருவர் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்திரி போனார். கிட்டத்தட்ட மரணத்தின் வாசலுக்குப் போனபோது கடவுளை தரிசித்தார். ‘‘அவ்வளவுதானா... என் வாழ்க்கை முடிந்துவிட்டதா?’’ எனப் பதறிய அந்தப் பெண்மணிக்கு, ‘‘இன்னும் 50 வருடம் வாழ்வாய்’’ என வரம் கொடுத் தார் கடவுள். ஆபரேஷன் முடிந்து, லிப்போசக்ஷன், பிளாஸ்டிக் சர்ஜரி என இருக்கும் எல்லா அழகு சிகிச்சைகளும் செய்துகொண்டு டீன் ஏஜ் பெண் போல வெளியில் வந்தார். ஆஸ்பத்திரி வாசலிலேயே ஆக்சிடென்ட்டில் செத்துப் போ னார். மேலே போனதும் கடவுளிடம் கத்தினார். ‘‘நீ கொடுத்த வரம் என்ன ஆனது?’’ கடவுள் நிதானமாக பதிலளித்தார்... ‘‘சாரி! எனக்கு உங்களை அடையாளம் தெரியலை...’’



இப்படி அடையாளம் தெரியாமல் முதுமையை நீக்கி விடும் ஒரு சிகிச்சையே, ‘போடாக்ஸ்’ இஞ்செக்ஷன்!
‘பாட்டுலினம் டாக் ஸின்’ என்பதே சுருக்கமாக ‘போடாக்ஸ்’. இது ஒரு விஷ பாக்டீரியா. சரியாக சமைக்காத, பக்குவப் படுத்தப்படாத மாமிசத்தை சாப்பிடுகிறவரை இந்த பாக்டீரியா தாக்கி ‘பாட்டுலிஸம்’ என்ற நோய் வரும். நூற்றுக்கணக்கானவர்களை இந்த விஷம் பலி கொண்டிருக்கிறது.

வில்லனை நல்லவனாகத் திருத்தி மருந்தாகப் பயன்படுத்துவதுதானே ஆராய்ச்சியாளர்களின் வேலை! அப்படி இந்த வில்லனையும் ஆளாளுக்கு நல்வழிப்படுத்த முயன்றார்கள். அப்படித் திருத்தி ‘போடாக்ஸ்’ என்ற மருந்தாக மாற்றியதில் ஏகப்பட்ட நன்மைகள். சிலருக்கு அவர்களின் கட்டுப்பாட்டை மீறி கண்கள் தானாகவே பலமுறை சிமிட்டியபடி இருக்கும். இதனால் தன்னம்பிக்கை இழந்து வீட்டை விட்டு வெளியில் போகவே தயங்கியவர்கள் உண்டு. இவர்களின் சிமிட்டலை இது தடுத்தது. அக்குளில் அதிகமாக வியர்வை சுரந்து அவதிப்பட்டவர்களுக்கும் இது நிவாரணம் தந்தது. மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலிக்கும் இது தீர்வு தந்தது.



இந்த எல்லா விஷயங்களிலும் பொதுவான ஒரு குணம் இருந்தது, இந்த மருந்து நம் சருமத்தை சற்றே செயலிழக்கச் செய்து மயக்கத்தில் வைக்கிறது. வாதம் தாக்கினால் கை, கால்கள் செயலிழந்து போ குமே... அதுபோல! ‘அப்படியானால் முதுமை ஏறும்போது நெற்றியிலும், கண்களுக்கு அடியிலும், தாடையிலும், கழுத்திலும் ஏற்படும் சுருக்கங்களை இது தடுக்குமா?’ என அடுத்த யோசனை தோன்றியது. அதன் விளைவுதான் இன்றைய சிகிச்சை...

‘அலெர்கன் இங்க்’ என்ற அமெரிக்க நிறுவனம் இந்த மருந்துக்கு கடந்த 2002ம் ஆண்டு காப்புரிமை பெற் றது. அப்போதிருந்து தனி ஆளாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இது தோள்பட்டையிலோ, பின்புறத்திலோ ஊசி போடும் சிகிச்சை இல்லை. எங்கே சுருக்கம் இருக்கிறதோ, அங்கே இஞ்செக்ஷன் போடுவார்கள். முகம் முழுக்க சுருக்கம் இருந்தால் முழு சிகிச்சை தேவைப்படும். நெற்றியில் 8 இடங்கள், கண்களுக்குக் கீழே 6 இடங்கள், உதட்டுக்கு மேலும் கீழும் 6 இடங்கள், கழுத்தில் 6 இடங்கள் என 26 இஞ்செக்ஷன் போடுவார்கள். சுருக்கம் குறைவாக இருந்தால், எந்த ஏரியாவில் இருக்கிறதோ அங்கு மட்டும் போதும்! இன்றைய தேதியில் அமெரிக்காவில் ஒரு சிட்டிங் சிகிச்சைக்கு 80 ஆயிரம் ரூபாய் தேவை.



போட்ட சில மணி நேரங்களில் சுருக்கம் மறையத் தொடங்கும். இளமைத் தோற்றம் வந்துவிடும். மருந்தின் வீரியம் 3 அல்லது 4 மாதங்களுக்கு இருக்கும். சிலருக்கு 6 மாதங்கள் தாங்கும். அதன்பின் திரும்பவும் தோல் சுருங்க ஆரம்பிக்கும். திரும்பவும் ஊசி போட வேண்டும். இப்படி வருஷத்துக்கு 2 அல்லது 3 முறை போட்டுக் கொள்ள தயங்குவதில்லை பிரபலங்கள்.

இந்தியாவிலும் மும்பை, பெங்களூரு, சென்னை என முக்கிய நகரங்களில் ‘போடாக்ஸ்’ போடுகிறார்கள். ஒரு இஞ்செக்ஷன் 5 ஆயிரம் ரூபாய். போடும் செலவுகள் தனி! ‘‘அமெரிக்காவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனாலும், இங்கே சமீபகாலமாகத்தான் இது பாப்புலர். பிளாஸ்டிக் சர்ஜரியை விட பலரும் இதையே விரும்புகிறார்கள். என்னிடம் 85 வயது மூதாட்டி ஒருவர்கூட வந்து போடாக்ஸ் போட்டுக் கொண்டார்’’ என்கிறார் மும்பையின் ‘த்ரீ கிரேஸஸ்’ மருத்துவமனை இயக்குனர் சிமல் சோயின்.



இந்த ஒரே ஒரு மருந்து மூலம் ‘அலெர்கன் இங்க்’ நிறுவனம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக இந்த வருமானம் உயருமாம்! இதனால் பல மருந்து நிறுவனங்களுக்கு சபலம் வந்திருக்கிறது. விலை குறைவான, அதிக காலம் பலன் தருகிற ஒரு ‘சுருக்க நிவாரணி’யை ஜான்ஸன் அண்டு ஜான் ஸன் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் அது விற்பனைக்கு வருமாம். ஊசிக்கு பயப்படும் பெண்களுக்காக இதை ‘ஜெல்’ வடிவில் கொடுக்கவும் முயற்சி நடக்கிறது. இன்னொரு பக்கம் ‘‘போடாக்ஸ் ஊசியோடு இந்த மாத்திரையை சேர்த்து சாப்பிட்டால், அதன் பலன் மேலும் பல வாரங்களுக்கு நீடிக்கிறது’’ எனச் சொல்லி  ஜைடேஸ்’ என்ற மாத்திரையை ஆயிரக் கணக்கில் விற்றது ஒரு கோஷ்டி.
வயசைக் குறைக்க எதைச் சொன்னாலும் செய்கிறார்கள் பெண்கள்!
- அகஸ்டஸ்



சாப்பிடுவது கஷ்டம்!
‘அழகு சிகிச்சையில் நம்பர் ஒன்’ எனப் பெயர் எடுத்திருக்கும் போடாக்ஸ் இஞ்செக்ஷனில் மிக ஆபத்தான பக்க விளைவுகள் ஏதுமில்லை. 10 ஆண்டுகளில் இதைப் போட்டுக் கொண்டதால் யாரும் செத்துப் போனதில்லை. ஆனால், வேறு விதமான சிரமங்கள் உள்ளன. உணவை மென்று சாப்பிடுவது கஷ்டம், கண்களை மூடுவது சிரமமாக இருக்கும், வாய் உலர்ந்து போகும், சிலருக்கு தலைவலி வரலாம், எல்லாவற்றுக்கும் மேலாக முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டுவது சிரமம். சிரிப்பும் இயல்பாக இருக்காதாம்! இருபது வயசைக் குறைப்பதில் இதுகூட இல்லை என்றால் எப்படி?