ஸ்மார்ட் ஜீவா... மாடர்ன் துளசி! : ‘யான்’ First look





‘‘எப்படி அனல் காட்டு, காட்டுன்னு காட்டுது பாருங்க... வெயில்னு சொல்லிட்டு நெருப்பு வருது. ஏ.சியில் உட்கார்ந்து ஹாய்யா பேசலாம்’’ - அழைக்கிறார் ரவி கே.சந்திரன். இந்தியாவின் மிகவும் பேசப்படுகிற ‘காஸ்ட்லி’ ஒளிப்பதிவாளர். இவரை ‘புக்’ செய்துவிட்டுத்தான் இந்தியில் ஹீரோவைத் தேடுகிறார்கள். ‘யான்’ படம் ரவி கே.சந்திரனின் முதல் டைரக்ஷன் ப்ராஜெக்ட். ஒளிப்பதிவு, இந்தி சினிமா, ‘யான்’, ஜீவா, துளசி ஒன்றுவிடாமல் முதல் தடவையாகப் பேசினார் ரவி.கே.எஸ்.

‘‘டைரக்டரா புது அவதாரம் எப்படியிருக்கு?’’
‘‘சரியாகச் சொன்னால் த்ரில்லிங். டைரக்டர் ‘கட்’ சொன்னதும் எழுந்து போய்க்கிட்டே இருப்போம். பிரச்னைகள் எதுவும் தெரியாது. ‘பேக்கப்’னு ஒரு வார்த்தை மட்டும்தான் கேட்கும். மத்ததைக் கேட்கவே மாட்டோம். ஆனால், டைரக்ஷன் வேறயா இருக்கு. சினிமாவோட எல்லா விஷயமும் நம்ம கையில வருது. முன்பு செட் சரியில்லன்னா, மறுபடியும் பண்ணுங்கன்னு எழுந்து போயிடுவேன். இப்ப ஆற அமர உட்கார்ந்து, சரி பண்ணி ஆரம்பிக்கிறோம். ரொம்ப அக்கறை சார்ந்தது டைரக்ஷன். பல டைரக்டர்கள்கிட்ட சண்டை போட்டது தப்புன்னு தெரியுது.’’

‘‘ஒரு ஒளிப்பதிவாளரா நீங்களே முதல் ரசிகரா படம் பார்த்திருப்பீங்க... அதிலேயே அனுபவம் சேர்ந்திருக்குமே?’’
‘‘அதெல்லாம் சும்மா. ஒரு சினிமாவை முழுமையாக இயக்குநர்கள்தான் உணர முடியும். நல்ல டைரக்டர்கள்கிட்டதான் ஒளிப்பதிவாளர்கள் பளிச்னு தெரிவாங்க. ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் தனியா இயங்க முடியாது. இயக்குனரை விட அவர்கள் உயர்ந்தவர்கள் இல்லை. படத்தோட முழுப் பரிமாணமும் இயக்குநரின் கையில் இருப்பதுதான் நிஜம். மணிரத்னம் படத்தில்தான் பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், நானெல்லாம் பளிச்னு தெரிய வந்தோம். நாங்க டைரக்டரின் கனவுகளை மட்டும் சுமப்பவர்கள். இப்ப நல்லா தெரிகிற ஒளிப்பதிவாளர்கள் கூட நல்ல டைரக்டரால்தான் வந்திருப்பாங்க!’’
‘‘உங்களை இந்தியில் தேடிக்கிட்டே இருக்காங்க. பெரிய சம்பளம். அப்புறமும் ஏன் டைரக்ஷன்..?’’

‘‘நான் கடைசியா செய்த ‘அக்னிபாத்’ பயங்கர வெற்றி. இரண்டு வாரத்துல 150 கோடிக்கு மேலே அள்ளுச்சு. ‘ஏழாம் அறிவு’ம் மரியாதையான கலெக்ஷன். அதுக்காக பணத்தையும் புகழையும் பார்த்துக்கிட்டே இருக்க முடியாது. ஒரு இடத்தில் நிறுத்தி ஆகணும். இயக்குனர் ஆகணும்னா ஒரு கேப் விடணும். ஒரு நடிகரைத் தொடர்ந்து போய்ப் பார்த்து, அவருக்காக நான் வெயிட்டிங்கில் இருக்கேன்னு நம்பிக்கை தரணும். இல்லைன்னா ‘சும்மா விளையாட்டுக்கு சொல்றாரு’ன்னு நினைச்சுடுவாங்க. இயக்குநரா வந்து நின்னபோது, முதன்முதலில் கேமராமேனா நின்ன பதற்றம் இருந்தது. கொஞ்சம் ஆசுவாசமாகி இப்போ க்ளீன் டேக் ஆஃப். ‘யான்’ அருமையா வந்திருக்கு.’’



‘‘ ‘யான்’... சுத்தமான தமிழ்ப் பெயரா அள்ளுதே!’’
‘‘இருக்கட்டும். நல்லதுதானே. ‘யான் பெற்ற இன்பம்’னு சொல்வாங்களே... அந்த அர்த்தத்தில்தான் வரும். ரொமான்ஸ் பின்னும். ஆக்ஷனும் சரியான கலவையில் இருக்கு. அருமையான ரஜினி, விஜய் சினிமா பார்த்தா, அது கொடுக்கிற ரிலீஃப் ரொம்ப ஈஸியாக இருக்குமே... அதுதான் என் படம். கொஞ்சம் கமர்ஷியல் தூக்கலா இருக்கும். ஷங்கர், முருகதாஸ் படத்தில் துறுதுறுன்னு காட்சிகள் உருண்டு போகுமே... அப்படித்தான் இருக்கும். என்னோட டச் அதில் இருக்கும். குடும்பமா உட்கார்ந்து பார்க்கிற சினிமாதான் எனக்கு சின்ன வயதிலிருந்தே பிடிக்கும். என்னோட நோக்கம் நல்ல ஜனரஞ்சகமாக படம் தருவது. அது நடந்திருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் இதில் பிரத்யேகமா உழைச்சிருக்கார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் எனக்குக் கொடுத்த சுதந்திரம் ரொம்பப் பெரிசு.’’
‘‘ஜீவா எப்படி இருக்கார்?’’

‘‘பாதிக்கு மேலே எடுத்த பின்னாடி கேமராமேன் மனுஷ்நந்தன்கிட்ட எடிட் பண்ணிப் போட்டுக் காண்பிச்சேன். ‘சார், நீங்க சொன்னதை விட, நாம் பேசிக்கிட்டதை விட, 50% அதிகமாகவே வந்திருக்கு’ன்னார். நம்முடன் இருக்கிறதில் தனுஷ் மாதிரி ஒரு அம்சமான பையன் ஜீவா. ‘கற்றது தமிழ்’, ‘ராம்’னு நல்ல வாய்ப்பு கிடைத்தால் கிடுகிடுன்னு உயரம் போகிறவர். நல்ல ரேஞ்ச் இருக்கு அவர்கிட்ட. வேலை கடுமையா இருந்தாலும் தோளில் சுமப்பார். ‘சிவா மனசுல சக்தி’ மாதிரி குடிச்சிட்டு சிரிக்க சிரிக்கப் பேசி ரகளை பண்ணவும் முடியும். ஒரு பிராண்டு மாதிரி அவரை நம்பலாம். பொய் கிடையாது. எட்டு மணிக்கு ஷாட்டுன்னா, அந்தக் கணத்தில் ஆரம்பிப்பேன். மேக்கப் போட்டுக்கிட்டு யாரையும் தண்டத்துக்கு உட்கார வைக்க மாட்டேன். அதனால் என்னைப் பிடிக்கும் எல்லாருக்கும்!’’
‘‘துளசி ‘கடலு’க்குப் பின்னாடி இதில் எப்படி இருக்காங்க?’’

‘‘ ‘கடல்’ பண்ணும்போதே ஸ்டில் பார்த்தேன். மணிரத்னம்கிட்ட கேட்டதும், ‘உன் படம்ன்னா அனுப்புறேன்’னு சொன்னார். இதில் நகரத்துப் பொண்ணு. ராதா உயரமும், பாடி பில்டரான அவங்க அப்பாவின் அடையாளமும் துளசிகிட்ட இருக்கு. அசின் ‘கஜினி’யில் பேர் வாங்கிட்டுப் போன மாதிரி, இதில் வருவாங்க. மாடர்னா டிரஸ் போட்டு பார்க்கவே கம்பீரமா, உயரமா, அழகா வந்தபோது துளசியான்னு நம்ப முடியலை. ஜீவாவும் படு ஸ்மார்ட். இந்த ஜோடி நின்னு பார்க்கிறதுக்கே அழகு.’’

‘‘பாலிவுட்ல அத்தனை பெரிய டைரக்டர்களோடு உங்களைப் பார்த்திட்டு, பயப்படுவாங்களே...’’
‘‘நீங்க ஒண்ணு, ‘உங்களுக்கு தமிழ் தெரியுமா சார்’னு ஆச்சரியப்பட்டாங்க. அட, தமிழ்தாங்க தெரியும்! இந்தி சுட்டுப் போட்டாலும் வராது. இங்கிலீஷ் கூர்ந்து பார்த்தா தப்பாத் தெரியும். மதுராந்தகத்தில் காயத்ரி தியேட்டரில் படம் பார்த்திட்டு திரிஞ்சவன்னு யாருக்கும் தெரியாது. ஏதோ மும்பைக்கு போய் டிரஸ், கிளாஸ்னு ஸ்டைல் பண்ணி பார்க்கப் புதுசாத் தெரியறேன்.’’
‘‘இப்ப தமிழ் சினிமா எப்படியிருக்கு?’’

‘‘இவங்களுக்கு போட்டியாகவா இறங்குகிறோம்னு பயமா இருக்கு. ‘பீட்சா’ மாதிரியெல்லாம் கதை சொல்ல தைரியம் வேணும். வெற்றிமாறன் பெரிய ஆச்சர்யம். மெட்ராஸில் பொறந்து வளர்ந்திட்டு, மதுரையில் களம் வச்சு நுணுக்கமா பண்றார். இந்தியில் வித்தியாசம் காட்டுகிற அனுராக் காஷ்யப் மாதிரியானவங்களுக்கு தமிழ்தான் பிடிக்குது. தமிழ் டைரக்டர்கள் மெக்ஸிகன் படம் மாதிரி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. சசிகுமாரில் ஆரம்பிச்சு, வெற்றிமாறன் முடிய அழகான தமிழ் சினிமாக்காரர்கள் தொகுப்பு இங்கே இருக்கே. இவங்களில் வித்தியாசப்பட்டு நிற்பதுதான் என் முயற்சி.’’
- நா.கதிர்வேலன்