நிழல்கள் நடந்த பாதை





குழந்தைகள் எந்நேரமும் வளர்கிறார்கள்
கடந்த வாரத்தில் ஒரு நாள் அம்முவும் அப்புவும் அவர்களது குட்டி சைக்கிள்களை ஓட்டிக்கொண்டுவர, நெரிசல் மிகுந்த நீண்ட சாலைகளைச் சுற்றிக்கொண்டு வந்தோம். நான் எனது ஸ்கூட்டியில் அவர்களுக்குப் பாதுகாவலாக மெதுவாக சென்றுகொண்டிருந்தேன். இதுவரை வீட்டு காம்பவுண்ட் என்ற சதுரத்திற்குள் ராப்பகலாக ஒரு வட்டத்தை சுற்றும் சர்க்கஸ்காரனைப் போல சுற்றி வந்தவர்கள், திறந்தவெளியில் தங்கள் சின்ன கைகளால் சின்ன வாகனத்தை செலுத்திக்கொண்டு விரையத் தொடங்கினார்கள்.

நான் இதுவரை அவர்களை எந்தெந்த கடைகளுக்குக் கூட்டிச் செல்வேனோ, அங்கு அவர்களே தங்கள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு தங்களுக்குத் தேவையானதை வாங்கினார்கள். நான் அவர்களை அழைத்துச் சென்று இளைப்பாறும் ரயில் நிலையத்தின், பூங்காவின் வாசலை அவர்களாகவே வந்தடைந்தபோது அவர்களின் முகம் பரவசத்தில் விரிந்தது.
சாலையின் இருபுறமும் சீறிச்செல்லும் வாகனங்கள் நடுவே இரண்டு குழந்தைகள் குட்டி சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்லும் காட்சியைக் கண்டு பாதசாரிகள் பதற்றமடைந்தார்கள். ‘‘யோவ், உனக்கு அறிவிருக்கா... குழந்தைகளை இவ்வளவு டிராஃபிக்கில் சைக்கிள் ஓட்ட வைக்கிறியே?’’ என்று ஒரு பெரியவர் கண்டபடி திட்டினார். எனக்கும் அதை விடவும் எவ்வளவோ பதற்றமாக இருந்தது. ஒவ்வொரு வாகனமும் குழந்தைகளைத் தாக்க வரும் கொடிய விலங்குகளைப் போல தோன்றியது. ஒரு பெரிய லாரி ஒரு கணம் திகைத்து நின்று, குழந்தைகள் கடந்த பிறகு சென்றது. ஆனால் குழந்தைகள் முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை. ஒவ்வொரு சாலையைத் தாண்டும்போதும் பெரும் சாகச உணர்வும் வெற்றியின் பெருமிதமும் அவர்கள் முகத்தில் வெளிப்பட்டது. ‘‘வீட்டுக்குப் போகலாம்’’ என்றால், ‘‘இன்னும் கொஞ்சம் தூரம் போகலாம் அப்பா’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அம்முவும் அப்புவும் தங்கள் முதல் நடைப்பயிற்சியை மேற்கொண்ட நாளும் இப்படித்தான் இருந்தது. முதல் வாக்கியங்களை பேசிய நாளும் இப்படித்தான் இருந்தது. அவர்களை நான் நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நாளும் இப்படித்தான் இருந்தது. ஒரு குழந்தை ஏதோ ஒன்றை புதிதாகக் கற்றுக்கொள்கிறது என்று இதை எளிமையாகச் சொல்லிவிட முடியாது. ஒரு குழந்தை ஒவ்வொரு கட்டத்திலும் இப்படித்தான் இந்த உலகை தன் வயப்படுத்துகிறது.

சமீபத்தில் எல்.கே.ஜி குழந்தைகளின் ஆண்டுவிழாவிற்கு சென்றிருந்தேன். ஒரு பையன் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனங்களை ஒப்பித்துவிட்டு வெட்கத்துடன் அம்மாவை நோக்கி ஓடத் தொடங்கினான். கூட்டம் கைதட்டியது. கைதட்டல் ஓசை கேட்டதும், பையன் சட்டென நின்றான். கைதட்டும் கூட்டத்தை சந்தோஷத்துடன் பார்த்தான். அவனுக்கு இன்னும் கொஞ்சம் கைதட்டல் தேவையாக இருந்தது. அங்கீகாரத்தின், புகழின் வெளிச்சத்தை அந்தக் குழந்தை முதன்முதலாக உணர்ந்துகொள்கிறது. தன்னை ஒரு ஆளுமையாக, தனித்த மனிதனாக உணர்ந்து கொள்கிறது. அம்முவும் அப்புவும் அந்த சாலையில் சைக்கிளில் செல்லும்போது அவர்கள் வாகனங்களையும் சாலைகளையும் பார்ப்பதற்கு நிகராக, பாதசாரிகள் தங்கள் சாகசங்களை எவ்வளவு கவனிக்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.

டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன், ஒரு புலி தன் குட்டிகளுக்கு எப்படி வேட்டையாடப் பழக்குகிறது என்று. அதைப் பார்ப்பது ஒரு பேரனுபவம். உண்மையில் என் குழந்தைகளுக்கு புதிதாக ஒன்றைக் கற்றுக்கொடுக்கும்போது ஏற்படும் உணர்வு, குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு பறவைக்கு ஏற்படும் உணர்வு; வேட்டையாடக் கற்றுக்கொடுக்கும் ஒரு மிருகத்தின் உணர்வுதான் அது.

வீடு திரும்பும்போது அம்மு கேட்டாள், ‘‘அப்பா, நாளை காலையிலிருந்து நானே சைக்கிளில் ஸ்கூலுக்கு போகலாமா?’’ ஒரு கணம் சந்தோஷமாக இருந்தது. மறுகணம் என் உற்சாகம் சட்டென வடிந்தது. ஏதோ ஒரு ஆழமான இழப்புணர்வு ஏற்பட்டது. நான் உன்னை இனி சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று குழந்தை சொல்கிறாள். இப்படித்தான் குழந்தைகள் ஒவ்வொரு படியாக தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். அவர்கள் சுயேச்சையான மனிதர்களாக மாற மாற, பெற்றோர்களின் மீதான தங்கள் சாய்மானத்தை கொஞ்சம் கொஞ்சமாக விலக்குகிறார்கள். ஆனால் அன்பின் பிடிமானமும் இறுக்கமும் பரிதவிப்பும் இந்த சார்ந்திருத்தலில்தான் இருக்கிறது. அவர்கள் நம் கண்முன்னால் அந்த சார்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடும்போது நம் மனம் பேதலிக்கிறது. கடுமையான தனிமையுணர்ச்சியை அடைகிறது.

இந்த துக்கத்தை பல பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. குழந்தைகள் வளர்வதைக் கண்டு குறிப்பிட்ட வயதுவரை மகிழ்ச்சியடைபவர்கள், அதற்குமேல் வருத்தப்பட ஆரம்பிக்கிறார்கள். குழந்தைகள் தங்களுக்கு அடிபணிவதில்லை என்று புகார் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். குழந்தைகள் கெட்டுப்போவதாகவும் பொறுப்பற்றவர்களாக மாறிவிட்டதாகவும் புலம்பத் தொடங்குகிறார்கள். பல சமயங்களில் தங்கள் அதிகாரத்தையும் வன்முறையையும் குழந்தைகள் மேல் செலுத்தத் தொடங்குகிறார்கள். அலாவுதீன் பூதத்தை திரும்ப குடுவையில் அடைத்ததுபோல, குழந்தைகளை மீண்டும் தங்களைச் சார்ந்திருந்த குழந்தைப் பருவத்திற்குள் திருப்பி அனுப்பிவிட ஏங்குகிறார்கள்.

குழந்தைகளுக்காகவே தங்கள் மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்கள், நாற்பது வயதுக்கு மேல் அடையும் கைவிடப்பட்ட உணர்வு கடுமையானது. ‘அவர்கள் தங்கள் இளமையையும் கடந்த காலத்தையும் திருடிக்கொண்டுவிட்டார்கள்’ என்று ஆழ்மனதில் ஒரு எதிர்ப்புணர்ச்சி எழுகிறது. குழந்தைகளின் திருமண வாழ்க்கையில் குறுக்கிடும் ஏராளமான பெற்றோர்கள் இந்த மனச்
சிதைவுக்கு ஆட்பட்டவர்களே. தங்கள் பிள்ளைகளின் திருமணச்சூழல் வரும்போது, தாங்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டிக் கொள்ள முயல்கிறார்கள். குடும்ப அதிகாரம் அவர்களுக்கு வழங்கும் கடைசி வாய்ப்பு அது.



நாம் நம் குழந்தைகளிடம் எப்படி கௌரவமாக நடந்துகொள்வது என்பது மிகப்பெரிய சவால். அவர்கள் நம்மைத் தாண்டிச் செல்லும்போது அவர்களுக்கு கௌரவமாக கையசைப்பதற்கு ஒரு பெரிய ஞானமும் மனோவலிமையும் வேண்டும்.

இயற்கையில் எல்லா பிராணிகளுக்கும் இந்த உணர்ச்சி இருக்கிறது. இயற்கையின் நியாயம் சார்ந்த ஒரு ஒழுங்கு இருக்கிறது. காட்டுயிர் ஆர்வலரான என் நண்பர் ‘ஓசை’ காளிதாசன் ஒரு தகவலைச் சொன்னார். ‘பிற பாம்புகளைத் தின்று வாழும் ராஜநாகம், தான் அடைகாக்கும் முட்டைகளிலிருந்து பாம்புக் குட்டிகள் வெளிவரும் தருணத்தில் கண்காணாமல் எங்கோ சென்றுவிடுமாம். தனது குட்டிகளை தானே தின்றுவிடக்கூடாது’ என்பதற்காக. இதைக் கேட்டபோது, இயற்கையின் அதிதீவிர ஒழுங்கு குறித்து திகைத்துப் போய்விட்டேன்.
மனிதனால் அப்படி தன் குட்டிகளைத் தானே தின்ன நேரும் ஒரு பருவத்தில் தனது புற்றிலிருந்து பிடிவாதமாக விலகிச் செல்ல முடியுமா? மனிதன் மட்டும் ஏன் இயற்கையின் எல்லா நியதிகளுக்கும் எதிராக, இவ்வளவு கோளாறுகளுடன் இருக்கிறான்?
அந்தி மயங்குகிறது. குழந்தைகளின் சைக்கிள் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காலத்தின் சக்கரங்கள் வேறெப்படி சுழலும்?
 
மாணவர்களும்  மக்களும்
பொதுவாக போராட்டங்கள், ஊர்வலங்கள், கடையடைப்புகள் என்றால் பொதுமக்கள் எரிச்சலும் எதிர்ப்புணர்வும் காட்டுவது இப்போது வழக்கமாகிவிட்டது. ஆனால் சமீபத்தில் இலங்கை பிரச்னையில் மாணவர் போராட்டங்கள் குறித்த மக்களின் உணர்வு முற்றிலும் வேறுவிதமாக இருந்ததைப் பார்க்க முடிகிறது.     
தங்கள் பிள்ளைகளின் படிப்பு கெடுகிறது என்று பெற்றோர்கள் புலம்பவில்லை. மாணவர்களின் ஊர்வலங்களை, ‘அவர்களில் ஒருவராக தாங்கள் இல்லையே’ என்ற ஏக்கத்துடன் மக்கள் பார்ப்பதை உணர முடிந்தது. உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, தங்கள் சொந்தப் பிள்ளைகளைப் பார்ப்பது போல ஒவ்வொருவரின் மனமும் பதைத்தது. ஆட்டோகாரர்கள் பயணிகளிடம் ஆவேசமாக மாணவர் போராட்டத்தைப் பற்றி பேசியபடி வண்டி ஓட்டுகிறார்கள். முடி வெட்டுபவர்களின் சவரக் கத்திகள் இதைப் பேசும்போது நடுங்குகின்றன.

தமிழகத்தின் முதல் சிவில் சமூகப் போராட்டம் இது. இதற்குள் எல்லோரும் இருக்கிறார்கள்.
 பயணத்தின் நடுவே...
இந்தப் பத்தியை எழுதத் தொடங்கி இந்த இதழோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்தேன். இன்னும் ஓராண்டு புதிய அம்சங்களுடன் புதிய தலைப்பில் தொடரும்படி பணி நீட்டிப்பு வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பத்தி என்னையும் என்னைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையையும் நான் மறுகண்டுபிடிப்பு செய்துகொள்வதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம். இப்போது இல்லாவிட் டால் எப்போதும் இதையெல்லாம் எழுதியிருக்க மாட்டேன்.
(நிழல்களோடு நடந்த அனைவருக்கும் நன்றி)

மழைக்காரி : எனக்குப் பிடித்த கவிதை

மழையில் நனைந்த பொழுதது
நாவல்பழ வாசனையென பரவினாள் அவள்
கைகளில் ஏந்திய மழையின் லாவகம் தெறித்து
அவள் கால்களின் கொலுசுகளானது
நனைந்த கூந்தலில் சிக்கிய மழையினை
விரல்களால் கோதுகின்றாள்
கைரேகைகளில் மழைவெள்ளம்
இன்னும் வலுக்கும் மழையின் ஆசை
அவளை மேலும் நனைக்க
சிவக்கின்ற அவள் மேனிச்சேற்றில்
சித்திரங்கள் தோன்றுகின்றன
காமத்தின் காம்புகள் பூக்களாகி
மலர்கின்றன அவளுடலில்
கொஞ்சம் கொஞ்சமாய் மழை
நனைந்துகொண்டிருக்கிறது அவளில்
அவளில் கரைந்த
மழையின் உடல்பரவிய அவ்விடம் முழுதும்
தேங்கியிருந்தது பால்போல் பசலை.
- யாழன் ஆதி

நான் படித்த புத்தகம் : பிரபல கொலை வழக்குகள்

- எஸ்.பி.சொக்கலிங்கம்
நமது நாட்டை உலுக்கிய பல கொலை வழக்குகள் ஒரு மர்ம நாவலைவிட சிக்கல்களும் விநோதங்களும் கொண்டவை. உண்மையில் அந்த கொலை வழக்குகள் முடிந்துபோய்விட்டால்கூட அவை மீண்டும் மீண்டும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்த எஸ்.பி.சொக்கலிங்கம், புகழ்பெற்ற 15 கொலை வழக்குகளை அவற்றின் பின்புலத்தோடு விவரிக்கிறார். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆஷ் கொலை வழக்கு, சிங்கம்பட்டி கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற நூல்களை எழுதும்போது அதில் புனைகதை சார்ந்த அலங்கார நடையை தவிர்ப்பது நல்லது. அது நூலின் நம்பகத்தன்மையை குலைக்கக் கூடும்.
(விலை: ரூ.140/-, வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-600014.)

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்

சஞ்சய் தத்திற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மம்தா ஆதரவு - செய்தி
தம்பி பேரறிவாளா... நீ படிச்சு கோல்ட் மெடல் வாங்கி பிரயோஜனம் இல்ல. ஜெயில்ல இருந்தே ஏதாவது நடிக்க வழி இருக்கா பாரு!