மீண்டும் கிடைக்குமா கச்சத்தீவு?





கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர். தமிழக அரசியல்வாதிகள் தொடங்கி, தமிழ் ஈழம் கோரி போராட்டம் நடத்தும் உணர்வாளர்கள் வரை எல்லோருமே ‘கச்சத்தீவை மீட்க வேண்டும்’ என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள். சிங்களப் படையால் நம் மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் ‘கச்சத்தீவு’ கோரிக்கை தீவிரமாக ஒலிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது கச்சத்தீவில்? கச்சத்தீவு கிடைத்தால் எல்லாப் பிரச்னையும் தீர்ந்துவிடுமா..?

ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 18 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த குட்டி மணற்திட்டு. மொத்த பரப்பளவே 285.20 ஏக்கர்தான். அதாவது, 1 மைல் நீளம், 1000 அடி அகலம். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் நிர்வாகத்தில் இருந்த இந்தத் தீவு, பிற்காலத்தில் ராமேஸ்வரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புறம்போக்கு பகுதியானது. ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலுக்கு நேர்ந்துவிடப்படும் கால்நடைகள் இந்தத் தீவில் மேய்ச்சலுக்கு விடப்படும். மூலிகைத் தோட்டம் ஒன்றும் அங்கு இருந்தது. ராமேஸ்வரம், ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இந்தத்தீவில் ஒரு அந்தோணியார் கோயிலை நூறாண்டுகளுக்கு முன் உருவாக்கினார். ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆலயத்தில் தங்கச்சிமடம் பங்கின் சார்பில் திருவிழா நடத்தப்படும். ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வலைகளைக் காயவைக்கவும், ஓய்வெடுக்கவும் கச்சத்தீவு மணற்திட்டைப் பயன்படுத்துவார்கள்.
இலங்கை, நெடுந்தீவில் இருந்து 28 கி.மீ தூரத்திலும், தலைமன்னாரில் இருந்து 25 கி.மீ தூரத்திலும் இருக்கிறது கச்சத்தீவு. கோடியக்கரை தொடங்கி, ராமேஸ்வரம் வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கைக்கும், இந்தியாவுக்குமான தூரம் எல்லை வகுக்கும் அளவுக்கு விரிவானதில்லை. இரு நாட்டு மீனவர்களும் பாகுபாடு இல்லாமல் மீன்பிடிப்பார்கள். இலங்கை மீனவர்களும் கச்சத்தீவில் ஓய்வெடுப்பார்கள். 1974 வரைக்கும் இதுதான் நிலை.

கச்சத்தீவு இலங்கையின் பிடியில் சென்றது எப்படி..?
‘‘அது மோசமான அரசியல் பேரம்’’ என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச் சங்க மாநிலத்தலைவர் கு.பாரதி. ‘‘1974ல் இந்தியா தன் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நடத்தியது. இதைக் கண்டித்து, உலக நாடுகளின் துணையோடு பாகிஸ்தான் ஐ.நா.சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது இந்தியாவுக்கு துணையாக இலங்கை நின்றது. இந்தியாவுக்கான இலங்கை தூதராக இருந்தவரும், பிறகு ஐ.நாவுக்கான இலங்கையின் சிறப்பு பிரதிநிதியாக இருந்தவருமான அமரசிங்கே இதில் இந்தியாவுக்கு பெரிய அளவில் உதவி செய்தார். அதற்கு நன்றிக் கடனாக, அதே ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி இலங்கைக்கு கொடுத்த பரிசுதான் கச்சத்தீவு’’ என்று சரித்திரப் பக்கங்களைப் புரட்டுகிறார் பாரதி.



‘‘கச்சத்தீவை ஒட்டி ஏராளமான பவளப்பாறைகள் உண்டு. கடல் உயிரின வளம் மிகுந்த பகுதி அது. ராமேஸ்வரத்தில் 5 கி.மீ தூரம் வரை மணலும், பாறைகளும் நிறைந்திருக்கிறது. இந்த பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாது. ராமேஸ்வரம் வட்டாரத்தில் 1000 படகுகளுக்கு மேல் உள்ளன. தினமும் 200 முதல் 300 படகுகள் தொழிலுக்குச் செல்கின்றன. வெறும் 10 கி.மீக்குள் இவ்வளவு படகுகள் எப்படி மீன்பிடிக்க முடியும்..? கச்சத்தீவுக்கு அருகில் சென்றாலே இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துகிறது. மீன்வளம் பறிபோனது ஒரு விளைவென்றால், கடல்பரப்பு சுருங்கியது இன்னொரு விளைவு. கச்சத்தீவை மீட்டால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கலாம். இலங்கை கடற்படையால் ஏற்படும் பொருள் இழப்பு, உயிரிழப்பு குறையும்.

ஒருகாலத்தில் நூல்வலை வைத்திருந்தோம். அதை காயவைக்க வேண்டியிருந்தது. அதற்கு கச்சத்தீவைப் பயன்படுத்தினோம். இப்போது நவீன வலைகள் வந்து விட்டன. காய வைக்கவோ, ஓய்வெடுக்கவோ அவசியமில்லை. எனவே அதை முன்னிறுத்தி நாங்கள் கச்சத்தீவை கோரவில்லை. மீனவர்களுக்கு கடலில் எல்லையே இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. இது இலங்கை மீனவர்களுக்கும் பொருந்தும். கடல் எல்லை என்பது நிர்வாகத்துக்கான அளவீடாக இருக்கலாமே ஒழிய, மீனவர்களுக்கான அளவீடாக இருக்கக்கூடாது.  
அதேநேரம் கச்சத்தீவு இலங்கையிடம் இருப்பதில் இன்னொரு விபரீதமும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் கச்சத்தீவில் சீனர்களின் நடமாட்டத்தை மீனவர்கள் பார்த்துள்ளார்கள். ஒருவேளை சீனா செய்த உதவிக்கு நன்றிக்கடனாக கச்சத்தீவை குத்தகைக்குக் கொடுக்கும்பட்சத்தில் சீனா தன் ராணுவ தளத்தை அங்கு அமைக்கலாம். அது இந்தியாவுக்கு மிகப்பெரும் ஆபத்து’’ என்கிறார் பாரதி.

‘‘பாரதியின் கருத்து வெறும் யூகமல்ல... அதற்கு ஒரு முன்னுதாரணமும் உண்டு’’ என்கிறார் கச்சத்தீவு மீட்பு இயக்கத்தின் தலைவர் சீதையின் மைந்தன். ‘‘அந்தமானில் உள்ள கோக்கோ தீவில் இந்திய மீனவர்களும், மியான்மர் மீனவர்களும் இணைந்து மீன் பிடித்து வந்தார்கள். மியான்மரை சந்தோஷப்படுத்தி தக்கவைத்துக் கொண்டால் சீன விவகாரத்தில் பக்கபலமாக இருக்கும் என்று எண்ணிய நேரு, 1950களில் கோக்கோ தீவை பர்மாவுக்கு விட்டுக் கொடுத்தார். பர்மா இப்போது அந்தத் தீவை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்டுவிட்டது. இதைத்தான் இலங்கையும் செய்யப் போகிறது’’ என்கிறார் சீதையின் மைந்தன்.     

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கமுடியுமா..?
‘‘தாராளமாக முடியும்’’ என்கிறார்கள் பாரதியும், சீதையின் மைந்தனும். ‘‘இந்திராவும், பண்டாரநாயகவும் செய்து கொண்ட ஒப்பந்தம், நாடாளுமன்றத்தில் அனுமதி பெறாதது. அதனால் அது சட்டபூர்வமானதல்ல. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெருபாரி கிராமத்தை பாகிஸ்தானுக்கு நேரு கொடுக்க முயன்றபோது, 8 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், ‘நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை வேறுநாடுகளுக்குக் கொடுக்கமுடியாது’ என்று தீர்ப்பளித்தது. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தபோது, முதல்வராக இருந்த கலைஞர், கச்சத்தீவில் தமிழகத்துக்கு உள்ள உரிமை பற்றி மிகத்தெளிவான ஒரு ஆய்வறிக்கையை டெல்லிக்கு அனுப்பினார். அப்போது தமிழக அரசின் எதிர்ப்பை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. அந்த அறிக்கை ஒன்று போதும், கச்சத்தீவை மீட்க.

1983க்கு முன்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்வதுண்டு. இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபிறகு, இந்திய அரசுதான் மீனவர்கள் எல்லை தாண்ட தடை விதித்தது. இலங்கை தடை விதிக்கவில்லை. அந்த தற்காலிக தடையை இந்திய அரசு விலக்கிக்கொண்டாலே கச்சத்தீவை நம் மீனவர்கள் பயன்படுத்தலாம்’’ என்கிறார் சீதையின் மைந்தன்.
எந்த காங்கிரஸ் கட்சி, இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்ததோ, அதே காங்கிரஸ் கட்சிதான் ‘கச்சத்தீவை குத்தகைக்கு வாங்க வேண்டும்’ என்று இப்போது யோசனை சொல்கிறது. இந்த அளவுக்கு தொலைநோக்குக் கொள்கை கொண்ட ஒரு கட்சிதான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது!
- வெ.நீலகண்டன்