ஒரிஜினல் : கே.ஆனந்தன்





நண்பன் சுதாகரைப் பார்க்க அவன் தங்கியிருந்த ரூமுக்குப் போயிருந்தேன். புதிதாக வாங்கியிருந்த லுங்கியை உடுத்திக் கொண்டிருந்தான் நண்பன்.
‘‘ஐயோ சுதாகர்... இதை எதுக்கு வாங்கினே... இது ஒரிஜினல் இல்லைடா... அதே மாதிரி இருக்கும் டூப்ளிகேட்...’’ - பக்கத்தில் இருந்த அவன் ரூம் மேட் சொன்னார்.
‘‘பாரு... ஒரிஜினல்ல இந்த பிராண்ட் படம் வெள்ளை கலர்ல பிரின்ட் ஆகி இருக்கும்... டூப்ளிகேட்ல சாம்பல் கலர்ல இருக்கு.’’
‘‘ஆமாம் பாஸ்..... ஏமாத்திட்டான்...’’ என்றான் சுதாகர்.
‘‘பார்த்து வாங்கக் கூடாதா..? என்னை எல்லாம் ஏமாத்தவே முடியாது தெரியுமா? எழுதற பேனாவுல இருந்து, போடற சோப்பு, டிரஸ், ஷூன்னு என்கிட்ட இருக்குறது எல்லாமே ஒரிஜினல்தான். செக் பண்ணித்தான் எப்பவும் வாங்குவேன். டூப்ளிகேட்டை வாங்கி ஏமாந்ததே இல்ல. சரி சரி... இனிமேலாவது எதையும் ஒரிஜினலானு பார்த்து வாங்கு. ஓகே... எனக்கு டைமாச்சு... வர்றேன்! வர்றேன் பாஸ்!’’ - என்னிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.
‘‘சே... மனுஷன் எவ்வளவு விவரமா இருக்கார் பார்த்தியா? இப்படித்தான் இருக்கணும்! ஆமா, அவர் என்ன பண்றார்?’’ - சுதாகரிடம் கேட்டேன்.
‘‘சினிமாவுல இருக்கார்... நீ கூட பல படங்கள்ல பார்த்து இருக்கலாம்... முன்னணி ஹீரோக்களுக்கு எல்லாம் டூப்பா வர்றது அவர்தான்’’ என்றான் சுதாகர்.