வேலைக்குப் போகாதீர்கள்!



உங்களைத் தேடி வேலை வரும்

All things are difficult before they are easy.  Thomas Fuller

புதிய பணி இடத்தில், முதல் நாளில் நீங்கள் வேலைக்குச் சேர்கிறீர்கள். உங்களை வேலையில் சேர்த்த முதலாளியோ, நிர்வாகியோ, மேனேஜரோ... பெரும்பாலும் உங்களை அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தி வைக்க மாட்டார். அதிகபட்சம், நீங்கள் எந்தப் பிரிவில் பணியாற்றப் போகிறீர்களோ... அந்தப் பிரிவின் பொறுப்பாளரை அழைத்து அல்லது அங்கு பணியாற்றுபவரை அழைத்து, ‘‘உங்க செக்ஷன்தான். கூட்டிட்டுப் போங்க..’’’ என்பதோடு நிறுத்திக் கொள்வார்.

நீங்கள் வேலை செய்யப்போவது இயந்திரங்களோடு அல்ல... மனிதர்களோடு! எனவே, அங்கு ஏற்கனவே பணியாற்றுபவர்களோடு ஆரம்பத்திலேயே நீங்கள் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த தினங்களில் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் உறவுதான் - அதனால் அவர்களுக்கு உங்கள் மீது ஏற்படப் போகும் எண்ணம்தான் - நீங்கள் அங்கு பணியாற்றும் காலம் வரை உங்களோடு இருந்து, உங்களுக்கு உதவப் போகிறது. எனவே, அந்த நல்லுறவுக்கான விதைகளை நீங்கள் இப்போதே இட்டாக வேண்டும்.

மனிதர்கள் பெரும்பாலும் அடுத்தவருக்கு உதவி செய்யவே ஆசைப்படுவார்கள். இதில் இரண்டு பிரிவினர். ‘அடுத்தவர்கள் சிரமப்படுவார்களே, அவர்களுக்கு உதவலாமே’ என்ற எண்ணத்தில் ஒரு பிரிவினர். இவர்கள் வெகு சிலரே. அடுத்தவர்களுக்கு உதவுவதின் மூலம் தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதை வெளிப்படுத்திக்கொள்வதற்காக உதவுபவர்கள் இன்னொரு பிரிவினர் - இவர்களே மெஜாரிட்டி. உதவி என்பது எப்படிப் பார்த்தாலும் உதவிதான். அதைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நமக்குத்தான் நஷ்டம்.

ஒரு கப்பல் உடைந்து, ஒருவர் ஆளற்ற தீவில் கரை ஒதுங்கினார். சற்று நேரத்தில் இன்னொருவர் வேறு ஒரு கப்பல் உடைந்து அதே தீவில் கரை ஒதுங்கினார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். பேசிக் கொள்ளவில்லை. இரண்டு மாதம் கழித்து வேறொரு கப்பல் மூலம் அவர்கள் மீட்கப்பட்டார்கள். அந்தக் கப்பல் கேப்டனுக்கு இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்பது தெரிய வர, ‘ஏன்?’ என்று விசாரித்தார். அந்த இருவரும் சொன்னார்களாம்... ‘‘எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைக்க அங்கே யாருமில்லையே..!’’

இப்படியெல்லாம் ஈகோ பார்ப்பவராக நீங்கள் இருந்தால், யாருக்கு நஷ்டம்?
பணியில் சேர்ந்த முதல் நாட்களில் அப்படி ஒன்றும் வேலை இருக்காது. இருந்தாலும், பரவாயில்லை. நீங்கள் அப்படியே உங்களது பணி இடத்தைச் சுற்றி வர வேண்டியதுதான். ஒவ்வொரு பிரிவிற்கும் சென்று அங்கு இருப்பவர்களிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். பதிலுக்கு அவர்களும் தங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுவார்கள். ஏதாவது ஒருசில விஷயங்களில், ‘‘அட, நீங்களும் அதே காலேஜா?’’, ‘‘அட, நீங்க நம்ம ஊருக்குப் பக்கமா?’’, ‘‘ஓ, நீங்க அவருக்கு சொந்தமா?’’ என இணக்கம் ஏற்பட்டு விடும்.



புதிய இடம் உங்களுக்குத் தரும் அந்நிய உணர்வை இது போன்ற நடவடிக்கைகள் மூலம் வென்று விடலாம். நீங்கள் மௌனியாகவே இருந்தால், ‘‘புதுசா ஒருத்தன் வேலைக்கு வந்திருக்கான். திமிர் பிடிச்சவன். பேசவே மாட்டான்’’ என்ற முத்திரைகள் குத்தப்படும். முதல் தினங்களில் நம் மீது விழும் முத்திரைகளின் பாதிப்பை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணருங்கள். இவை நீண்ட நாள் நம்முடனேயே நிழலைப் போலத் தொடர்ந்து வரும்.

தவிர, என்ன இருந்தாலும் அங்கே ஏற்கனவே வேலை பார்ப்பவர்கள் உங்களைவிட பணியில் சீனியர்கள். அவர்களாகவே உங்களிடம் வந்து பேச மாட்டார்கள். ‘‘நேத்து வந்தவன் இவன். நாங்கள்லாம் இங்க ஃபவுண்டேஷன் போடுறதுக்கு முன்னாடியே இருக்கோம்’’ என்ற மனோபாவம் கொஞ்சம் கூடக் குறைய எல்லோரிடமும் இருக்கவே செய்யும்.  
எனவே, நீங்கள்தான் உங்களின் பி.ஆர்.ஓ ஆக மாற வேண்டும். ஒதுங்கி இருந்தால், நீங்கள் எப்படி அவர்களில் ஒருவர் ஆக முடியும்? அவர்களில் ஒருவர் ஆனால்தானே, நீங்கள் அவர்களின் உதவியையும், ஒத்துழைப்பையும் பெற முடியும்?
புதிய பணியிடத்தில் உங்களது வேர்கள் மெல்ல மெல்ல ஆழமாக வேரூன்றும் முதல் தினங்களில் உங்களுக்கு சில மனத்தடைகள் ஏற்படும்.

நீங்கள் புதியவர் என்றால்... அதாவது, முதன்முதலாக வேலைக்கு வந்துள்ளவர் என்றால் உங்களுக்கு எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும். அந்த ‘எதையோ’ வேறு எதுவுமில்லை. அது உங்களது சுதந்திரம்தான். இதுவரை உங்களது நேரம் முழுவதும் உங்களது கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது முதன்முறையாக உங்களது நேரத்தின் ஒரு பகுதி இன்னொருவரின் கீழ் வரப்போகிறது. இனி நீங்கள் உங்கள் பணி நேரத்தில் உங்கள் விருப்பப்படி எதையும் செய்து விட முடியாது.
மனிதன் அடிப்படையில் சுதந்திரத்தை விரும்புகிற மிருகம். இன்னொருவரின் கீழ் அவனால் ரொம்ப நேரம் இருக்கவே முடியாது. எனவே, ‘இப்படி அடக்கி வைக்கப்பட்டிருக்கிற நேரத்தில் எதை எதையெல்லாமோ சாதித்து விடலாமே’ என்று உங்கள் மனம் அலை பாயும். ஆனால், உண்மையில் அப்படி ஏதாவது சாதிக்கவோ, செய்யவோ ஐடியா இருந்தால், இங்கு வேலைக்கு வரும் முன்பே நீங்கள் யோசித்திருப்பீர்கள். எதுவும் இல்லாததால்தான் இங்கே இருக்கிறீர்கள். ‘முட்டையும் உடையக் கூடாது... ஆம்லெட்டும் வேண்டும்’ என்றால், எப்படி?
ஆனால், இவற்றை நேரடியாக ஒப்புக் கொள்ளாத உங்கள் மனம் கீழ்க்கண்டவாறு எல்லாம் குமுறும். அவசரப்பட்டு வந்து விட்டோமோ? கொஞ்சம் பொறுத்திருக்கலாமோ? அபத்தமான முடிவோ? திறமைக்கும், தகுதிக்கும் இதை விட நல்ல இடம் கிடைத்திருக்குமோ?

ஒருவேளை, இதெல்லாம் உண்மையாக இருந்தால் கூட, நீங்கள் இப்போது இந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதுதான் நிதர்சனம். இங்கு இருக்கும் வரை, நீங்கள் இந்த இடத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களது அதிகபட்ச உழைப்பைத் தந்தாக வேண்டும்.
எனவே, கவலை வேண்டாம். எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும். துறவிகள், சந்நியாசிகள் எந்த இடத்திலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்க மாட்டார்களாம். அவ்வளவு ஏன், மரத்தடியில் கூட தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மேல் படுக்க மாட்டார்களாம். ஏன்? தொடர்ந்து அங்கே இருக்க நேரிடும்போது, அவர்களை அறியாமல் அங்கே ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும். ஞானிகளுக்கே மூன்று நாட்களில் பிடிப்பு ஏற்படச் செய்யும் அளவிற்கு ஒரு இடத்திற்கு சக்தி உள்ளது என்றால், நமக்கு இன்னும் சிறிது நாட்கள்! ஒரு வாரம்? பத்து நாட்கள்..? நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்தப் பிடிப்பு நம்முள் ஏற்படுவதை அனுமதிப்பது மட்டும்தான்.

நீங்கள் ஏற்கனவே ஒரு இடத்தில் வேலை பார்த்துவிட்டு, இந்த இடத்தில் சேர்ந்திருந்தால் கூட, ‘‘அவசரப்பட்டு இங்கே வந்துவிட்டோமோ?’’ என்ற எண்ணம் ஆரம்ப நாட்களில் வருவது தவிர்க்க இயலாதது - பழைய இடத்தில் தீராத கசப்புகள் இல்லாத பட்சத்தில். அங்கே அந்த வசதி இருந்ததே, இந்த வசதி இருந்ததே, அங்கே அப்படி, இங்கே இப்படி... என்றெல்லாம் மனம் சொல்லும். காலத்தை பின்னோக்கிச் செலுத்த முடிந்தால், இந்த வேலையில் சேர்வதற்கு முடிவெடுத்த கணத்தை அழித்து விடத் துடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
காரணம் என்னவென்றால், மனித மனம் எப்போதுமே முதலில் எதிர்மறையான விஷயங்களையே பார்க்கும். உங்களை துன்பத்தில் ஆழ்த்தியிருக்கவே அது விரும்பும்.
போதாக்குறைக்கு புதிய இடத்தில் இருப்பவர்கள், ‘‘அங்கேயே இருந்திருக்கலாமே’’ என்பார்கள். ‘‘அத விட்டுட்டா இங்க வந்தீங்க?’’ என ஷாக் கொடுப்பார்கள். இவற்றை உங்கள் மனம் நம்பி, உங்களை இன்னும் பலவீனமாக்கும்.

இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ளுங்கள். ஒன்று... பழைய இடத்தைவிட, ஏதோ ஒன்று இந்தப் புதிய இடத்தில் இருப்பதால்தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். அது பணம் சார்ந்த விஷயமாகட்டும், சொந்த விருப்பம், பணி சார்ந்த திருப்திகள், ஒரு மாற்றம்... இப்படி ஏதோ ஒன்றுதான் உங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது. அந்த நல்ல விஷயத்திலேயே உங்களது மனதை நிலைநிறுத்துங்கள்.
இரண்டாவது... நினைவில் கொள்ளுங்கள். இந்தக் கரையில் நீங்கள் இருக்கிறீர்கள். அந்தக் கரை முன் எப்போதையும் விட பச்சையாகத் தோன்றியே தீரும்.
(வேலை வரும்...)