எது நியூஸ்... எது டூப்..?





சட்டையில் இங்க் இருக்கு’ ரேஞ்சுக்கு உங்களை ஏமாற்ற முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் இந்த டெஸ்ட். இங்கே ஆறு செய்திகள். எது உண்மை, எது பொய் என மூளையைக் கசக்கி முடிவு செய்யுங்கள்...

பூண்டு கடத்தல்!

ஐரோப்பிய நாடுகளுக்கு இப்போது அதிகம் கடத்தப்படும் பொருள் எது தெரியுமா? தங்கம், வைரம், ஹெராயின்... எதுவும் இல்லை. சீனா பூண்டு தான்! பூண்டு கடத்தினால் சீக்கிரம் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் அங்கு. மலிவு விலை சீனா பூண்டு மார்க்கெட்டில் குவிவதால், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாட்டு பூண்டு விவசாயிகள் நஷ்டமடைகிறார்கள். இதைத் தடுக்க, சீனா பூண்டுக்கு கடுமையான வரி விதித்தது ஐரோப்பிய யூனியன். அதனால் வேறு நாடுகளிலிருந்து வருவதாக போலி ரசீதுகள் காட்டி, கடத்தல்காரர்கள் ஐரோப்பா கொண்டு வருகிறார்கள்.

சரக்கு பிரசாதம்

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகருக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ‘போமா வாடாலா’ என்ற கிராமம். பாபா ரோட் ஷா என்ற துறவியின் கல்லறையை இங்கு கோயிலாக்கி வழிபடுகிறார்கள். வருஷத்தில் இரண்டு நாட்கள் இந்தக் கோயிலில் திருவிழா நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் படையல் போடுவது எதைத் தெரியுமா? விதம்விதமான மதுபானங்களைத்தான்! படையல் முடிந்ததும் எல்லோருக்கும் அதையே பிரசாதமாகத் தருகிறார்கள். கிளாஸில் வாங்கிக் குடித்து களிப்புறுகிறார்கள் பக்தர்கள்.

கழுதைப் பாலாடைக் கட்டி

நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் விரைவில் செர்பியாவில் ஹோட்டல்கள் திறக்கப் போகிறார். இதற்காக கழுதைப் பாலாடைக்கட்டிகளை வாங்கிக் குவிக்கிறார். சாதாரண பாலாடைகளைவிட இது ரொம்ப காஸ்ட்லி. ஒரு கிலோ 70 ஆயிரம் ரூபாய். செர்பியாவிலிருந்து உலகம் முழுக்க இவை ஏற்றுமதியாகும். இதை சாப்பிட உலக மக்களை தன் ஹோட்டலுக்கு வரவழைக்க வேண்டும் என்பது நோவாக்கின் லட்சியம்!

லேட்டஸ்ட் ஹேண்ட்பேக்!
புகழ்பெற்ற பர்பெர்ரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள லேட்டஸ்ட் மாடல் ஹேண்ட்பேக் இது. ‘புதுயுகப் பெண்களுக்கான ஃபேஷன் அயிட்டம்’ எனப் பெருமையாக 9 மெட்டாலிக் வண்ணங்களில் அறிமுகமாகி இருக்கிறது இது. மலைப்பாம்புத் தோலை பக்குவப் படுத்தி, பழங்கால பேட்லாக் பூட்டு போட்டு வந்திருக்கும் இதன் விலை ஒன்பதரை லட்சம் ரூபாய்.

கள்ளக்காதல் நல்லது


‘‘திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமா? கள்ளக்காதல் செய்யுங்கள். குடும்பம் சந்தோஷமாக இருக்கும்’’ என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த சமூக விஞ்ஞானி கேத்தரீன் ஹகிம். ‘தி நியூ ரூல்ஸ்’ என்ற அவரது புத்தகம் இதைத்தான் உபதேசம் செய்கிறது. ‘‘வீட்டு சாப்பாடு அலுக்கும்போது ஹோட்டலில் சாப்பிடுகிறோமே... அப்படித்தான் செக்ஸும்! அது ஒன்றும் புனிதமானது இல்லை. கணவனும் மனைவியும் கூண்டில் அடைபட்ட விலங்காக இல்லாமல், இப்படி புதிய உலகைத் தேடும்போது கிடைக்கும் உற்சாகம், அவர்களின் விவாகரத்தை தடுக்கிறது’’ என்கிறார் அவர்.

இது சட்டவிரோதம்!
‘அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என வீட்டு முதியவர்களைப் பிரிந்து வெளியூர்களில் வசிக்கும் இளைய தலை முறையினர் அடிக்கடி அவர்களைச் சென்று பார்க்காவிட்டால் தண்டிக்கப்படுவார்கள்’ என சீனா அறிவித்திருக்கிறது. இதற்காக லீவ் கேட்டால் கம்பெனிகள் உடனே லீவ் தர வேண்டுமாம். சீன தேசிய மக்கள் காங்கிரஸில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த சட்டம், வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.