நடைவெளிப் பயணம்



அமெரிக்கக் கனவு

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது சாபு மீது அசாத்திய மதிப்பு. ஓர் இந்தியனாக இருந்து, திடீரென அவன் ஹாலிவுட் நட்சத்திரமாகி விட்டான்! சாபு தஸ்தகீர் மைசூர் சமஸ்தானத்தில் யானையைப் பார்த்துக் கொள்பவர்கள் குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார்களா என்பது சந்தேகமே.

அவனுக்கு பத்து, பன்னிரண்டு வயது இருக்கும்போது அந்த விஷயம் நிகழ்ந்தது. ஆங்கில நாவலாசிரியர் ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய நாவலைப் படம் பிடிக்க இந்தியா வந்த ராபர்ட் ஃபிளஹர்டி கண்ணில் பட்டான்.

ஃபிளஹர்டியை ‘ஆவணப் படங்களின் அகத்தியர்’ என்று கூறுவார்கள். அவர் 1921ம் ஆண்டிலேயே ‘நனூக் ஆஃப் தி நார்த்’ என்ற மௌனப் படம் மூலம் உலகப் பிரசித்தம் ஆனார். ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்கள் பற்றிய படம் அது.

எஸ்கிமோக்களுடன் சுமார் ஓராண்டு வாழ்ந்து, அதன்பின் ராபர்ட் அப்படத்தை எடுத்ததாகத் தகவல். அந்த நாளில் கேமரா சாதனங்கள் அவ்வளவு முன்னேற்றம் அடையவில்லை. அப்படிப்பட்ட சூழலில் அந்த மனிதர், தண்ணீர் உறையும் குளிரில் ஓராண்டு வாழ்ந்து ஒரு முழு நீளப் படத்தை எடுத்திருக்கிறார்! நான் பார்த்ததில்லை. ஆனால் ‘யு டியூப்’ வசதியுள்ளவர்கள் இப் படத்தை இன்று பார்க்கலாம்.

எனக்கும் அவருக்கும் உள்ள உறவு டி.எம்.யூ.பதி என்பவர் மூலமாகக் கிடைத்தது. யார் எடுத்தது என்று அறியாமல் நான் ‘பொன்னி ஆறு’ என்றொரு ஆவணப் படத்தைப் பார்த்தேன். இவ்வளவு தேர்ச்சியாகவும் கலைநயத்துடனும் ஓர் ஆவணப்படம் எடுக்க முடியுமா என்று வியந்தேன். இன்னும் வியப்பைத் தந்தது அவருடைய இன்னொரு குறும்படம்.

ஆங்கிலத் தலைப்பு ‘பொக்கிஷ மரம்’.   (Tree of Wealth )   எது பொக்கிஷ மரம்? தென்னைதான். இரண்டு படங்களும் பதி அவராகவே எடுத்தது. அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐந்தடிதான் உயரம். ஒல்லி உருவம். சதா சிகரெட். அவர் படங்கள் எனக்கு அளித்த பரவசத்தைச் சொன்னேன். ‘‘நான் பணி செய்த என் குருவின் வேலைப்பாட்டைப் பார்த்தால் உன்னால் தரையில் நிற்க முடியாது’’ என்றார்.     

‘‘யார் உங்கள் குரு?’’‘‘ராபர்ட் ஃபிளஹர்டி.’’சாபுவை நடிகனாக்கியது ஹாலிவுட் அல்ல. பிரிட்டிஷ்காரர்கள். அவர்கள் விரைவிலேயே தங்கள் தவறை உணர்ந்தார்கள். சாபு மீது எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஃபிளஹர்டி நாவலைப் படம் பிடிப்பதற்குப் பதிலாக யானைகளைக் கொண்டு ஓர் ஆவணப்படத்திற்கு திட்டமிட்டிருந்தார்! அவருடைய எஜமானர்களுக்கு விஷயம் தெரிந்தவுடன் அவரை நீக்கி விட்டு வேறொருவரைக் கொண்டு படத்தை முடித்தார்கள். அப்போது பேசும் படங்கள் வந்து விட்டன.

‘எலிஃபன்ட் பாய்’ (யானைப் பையன்) நன்றாக ஓடியது. சாபு பெரும் கவனம் பெற்றான். ஆனால் அவனை இதர வெள்ளைக்கார நடிகர்கள் போல ஹாலிவுட் அல்லது பிரிட்டிஷ் படங்களில் பயன்படுத்த முடியாது. உலகில் ஆங்கிலப் படம் பார்ப்பவர்களில் எவ்வளவு பேர் திரும்பத் திரும்ப இந்தியக் கதைகளைப் பார்ப்பார்கள்?

ஆனால் சாபு தொடர்ந்து ஒரு நட்சத்திரமாக இருக்கத் தேவையான அளவு படங்கள் வந்தன. இரண்டாவதில் அவனுக்கு மிக வலுவான, சுவாரசியமான பாத்திரம். அதுவும் ருட்யார்ட் கிப்ளிங் எழுதியது. ‘ஜங்கிள் புக்’. அப்புறம் முழுக்க முழுக்கக் கற்பனையில் உருவாக்கப்பட்ட ‘தீஃப் ஆஃப் பாக்தாத்.’ (பாக்தாத் திருடன்.) நான் ‘ஜங்கிள் புக்’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன். என் பிரமிப்பைச் சொல்லி முடியாது. இரண்டும் பல அபத்தங்களைக் கொண்டாலும் திரைப்படமாக மிகவும் ரசிக்கத்தக்கவை.

இதுவரை சாபு பிரிட்டிஷார் வசம் இருந்தார். அதன் பிறகுதான் ஹாலிவுட் சென்றார். அங்கே அப்போது மத்திய கிழக்குப் பகுதி பற்றி ஒரு மயக்கம் இருந்தது. அதன் விளைவாக அநேக பாலைவனப் படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிலும் சாபுவுக்கு இடம் இருந்தது. மௌனப்படங்கள் காலத்தில் ருடால்ஃப் வாலெண்டினோ என்பவர் அமெரிக்க சினிமாப் பார்வையாளர்களுக்கு ஆண்மையின் சின்னமாக இருந்தார். சாபு ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. அவர் பெரிய கதாநாயகனாக விளங்காது போனாலும், அவர் பெயர் பார்த்து அத்திரைப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் இருந்தார்கள்.

சாபு தோன்றிய படங்களில் மிகவும் தீவிரமாக இருந்தது ‘பிளாக் நார்சிஸஸ்’ என்ற தலைப்புடையது. இமாலய மலைச்சாரலில் ஒரு கன்னி மாடம். கன்னி விரதம் எடுத்துக்கொண்ட ஒருத்தியால் அந்த நிலை தாங்க முடியாத துன்பமாகப் போய்விடுகிறது. அவளால் கன்னி மாடத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.

சாபு அமெரிக்கப் பிரஜையாகி, மெரிலீன் கூப்பர் என்ற அமெரிக்க நடிகையை மணந்து கொண்டார். அவருக்குப் பொருத்தமாக வேடங்கள் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் சுமார் இருபது படங்களில் பங்கேற்றுவிட்டார். இதற்கிடையில் அவர் மீது ஒரு பெண் குழந்தை சார்பில், அதன் அம்மாவான பிரிட்டிஷ் நடிகை வழக்குத் தொடுத்தாள். ‘தனக்கு அப்பா சாபுதான்’ என உரிமை கொண்டாடிய வழக்கு அது.

அதற்குப் பன்னிரண்டு பேர் ஜூரிகள். ஒன்பதிற்கு மூன்று என்று சாபுவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தது. 39 வயதில் சாபு மாரடைப்பால் இறந்தார். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக டாக்டரிடம் போனபோது சாபுவிடம் டாக்டர் சொன்னாராம்... ‘‘என்னிடம் வரும் எல்லோருமே உங்களைப் போல ஆரோக்கியமாக இருந்தால், நான் தொழிலுக்கே முழுக்குபோட வேண்டியதிருக்கும்!’’

‘அமெரிக்கக் கனவு’ என்று அமெரிக்கர்கள் சொல்வார்கள். சாபுவாக அக்கனவைத் துரத்திப் போகவில்லை. ஃபிளஹர்டி மூலமாக அது அவரைத் துரத்தி வந்து, சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் அவருக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் கொடுத்தது. கொடுத்தது போலத் திரும்பப் பிடுங்கிக் கொண்டது. இந்த அமெரிக்கக் கனவு ஐரோப்பியர்களையும் இங்கிலாந்துக்காரர்களையும் சபலப்பட வைத்திருக்கிறது. சிலர் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தனித்துத் தெரிவார்கள்.

ஐரோப்பியர்களாக இருந்தும் பல டைரக்டர்கள் ஹாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றார்கள். அதே போல இசை அமைப்பவர்கள். ஒரு காலத்தில் ஹாலிவுட்டில் ‘பாட்டு படம்’ என்றே ஒரு ரகம் இருந்தது. இசைக்குத் தனிப் பாரம்பரியம் தேவைப்பட்டது.

அமெரிக்க இசை என்றும் இருக்கிறது. ப்ளூஸ், ராக் அண்ட் ரோல் ஆகியவை அயனான அமெரிக்க சிருஷ்டிகள். ஆனால் முதல் ரக ஐரோப்பிய இசை மற்றும் நடனக் கலைஞர்கள் இன்றும் திரைப்படத்தை ஒரு கலை வடிவமாக ஏற்றுக்கொள்வதில்லை.

சாபு விஷயத்தில் ஹாலிவுட்டுக்குப் பெருத்த ஏமாற்றம் இல்லை. ஆனால் ஒமர் ஷரீஃப் என்ற நடிகர் உன்னத இடம் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்குப் பல படங்களில் முதலிடம் கொடுக்கப்பட்டது.

அவரும் நன்றாகவே பணியாற்றினார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் தொலைக்காட்சிக்குத் தள்ளப்பட்டு, இன்று எவர் நினைவிலும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. சாபு திரும்ப இந்தியா வந்து அவருடைய உற்றார், உறவினரைச் சந்தித்தாகத் தகவல் இல்லை.

ஃபிளஹர்டி ஒருவேளை அவரைப் பார்க்காமல் இருந்திருந்தால் அவருடைய வாழ்க்கை அவருக்கும் அவரைச் சார்ந்தாருக்கும் மனநிறைவு கொடுத்திருக்கும். மைசூரிலேயே ஒரு பெண்ணை மணந்து கொண்டு ஓர் இயல்பான வாழ்க்கை வாழ்ந்திருப்பார். அவராகக் கோராத அமெரிக்கக் கனவு கானல் நீராகிவிட்டது. சாபு அமெரிக்கக் கனவைத் துரத்திப் போகவில்லை. அது அவரைத் துரத்தி வந்து, சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் அவருக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் கொடுத்தது. கொடுத்தது போலத் திரும்பப் பிடுங்கிக் கொண்டது.

படிக்க

மீண்டும் ஒரு நண்பரின் நூலைத்தான் சிபாரிசு செய்கிறேன். இந்த நூல் எளிதில் கிடைக்கக் கூடியது. பாரதி, தான் வாழ்ந்த சொற்ப ஆண்டுகளில் சந்தித்த அல்லது மதித்தவர்கள் பற்றிக் கூறியதை அல்லது எழுதியதை ‘பாரதியின் பார்வையில்’ என மு.ஸ்ரீனிவாசன் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த நூலில் உள்ள சில படங்கள் அபூர்வமானவை. இன்று எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது எனலாம்.

ஆனால் எதுவும் சந்தர்ப்ப சூழ்நிலை விளக்கப்படவில்லை என்றால் பயனற்றுப் போய் விடும். ஸ்ரீனிவாசன் இந்தியாவையும் உலகத்தையும் பலமுறை பயணம் செய்து, அவர் சொல்வதனைத்தையும் கண்ணால் கண்டவர். இந்த நூல் பல உன்னத மனிதர்களையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறது. இந்த நூல் ஸ்ரீனிவாசன் படைத்த எண்ணற்ற நூல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது.‘பாரதியின் பார்வையில்...’ - மு.ஸ்ரீனிவாசன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600002. விலை ரூ.60/-

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்