இந்தியாவை பஞ்சத்தில் முடக்குமா மரபணு மாற்றப் பயிர்?



கடும் பஞ்சம் சூழ்ந்த காலம். குற்றுயிரும் குலையுயிருமாக மக்கள் வதங்கிக் கிடந்தார்கள். எல்லோருடைய பார்வையும் கடலின்மீதே இருந்தது. அமெரிக்காவிலிருந்து கப்பல் வந்தால்தான் காய்ந்த வயிறுகள் கால் பங்காவது நிரம்பும். சுதந்திரமடைந்த சில வருடங்களில் இந்தியா - குறிப்பாக தமிழகம் சந்தித்த அவலமும் அவமானமுமான பஞ்சக்காலம் ஒரு கறுப்பு சரித்திரம்.

அந்த சரித்திரம் மீண்டும் நிகழலாம் என்கிறார்கள். ‘எப்போது வருமென்று’ அமெரிக்கக் கப்பலை எதிர்நோக்கி மக்கள் கடல் பார்த்து நிற்கலாம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட 15 வகையான பயிர்களை கள ஆய்வு செய்ய அனுமதித்து, அதற்கான முகாந்திரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது மத்திய அரசு.

‘‘மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பூச்சிகள் தாக்காது. விளைச்சல் அதிகமாகும். இந்திய விவசாயிகளின் வீடுகளில் பாலாறும் தேனாறும் ஓடும்...’’ என்றுதான் சொல்கிறார்கள் ‘மரபணுவாதிகள்’. ஆனால், ‘‘அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். தயவுசெய்து வாழ விடுங்கள். விதைக்கு கையேந்தும் பிச்சைக்காரர்களாக மாற்றிவிடாதீர்கள்’’ என்று மன்றாடுகிறார்கள் விவசாயிகள். உண்மையில், மரபணு மாற்றம் என்ன மாதிரி விளைவை ஏற்படுத்தும்?

ஒரு உயிரியின் மரபணுவை தாவரத்தில் புகுத்தி, இயல்புக்கு மாறான குணம் தரப்படுவதுதான் மரபணு மாற்றப் பயிர். பேசிலஸ் துரின்சீன்சஸ் (Bacillus thuringiensis) என்ற பாக்டீரியாவின் மரபணுவை தாவரங்களில் பொருத்தி அதன் இயல்பை மாற்றினார்கள்.

அப்படி வெற்றிகரமாக (?) உருவாக்கப்பட்ட முதல் குழந்தை, பி.டி. பருத்தி. பருத்திக்கு சத்ருவாக இருப்பது காய்ப்புழு. பருத்தியில் நுழைக்கப்பட்ட பி.டி மரபணு, காய்ப்புழு தாக்குதலை தாக்குப் பிடித்தது. (ஆனால் பல புதிய பூச்சிகள் அதை நாடி வந்தது வேறு கதை). அதன்பிறகு, அவர்களின் பார்வை விழுந்தது உணவுப் பயிர்கள் மீது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அதை உண்ணும் உயிரினங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய சோதனைச்சாலை ஆய்வுகள் நிறைவு பெறாத நிலையில், வயல்களில் விளைவித்து சோதிக்க மத்திய அரசின் மரபணு மாற்ற மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துவிட்டது.

உலகில் 160 நாடுகளில் மரபணு மாற்றப் பயிர்களுக்குத் தடை உள்ளது. கொஞ்சமாக அனுமதித்திருந்த இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ருமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகள் அண்மையில் கைவிட்டுவிட்டன.

கனடா, மெக்ஸிகோ, பிரேசில், சீனா, இந்தியா போன்ற நாடுகள் மட்டுமே அனுமதித்துள்ளன. மான்சான்டோ, பேயர், சிஞ்சென்டா, டூபான்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களே மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தைக் கடை விரிக்கின்றன. இந்த அபாயகரமான தொழில்நுட்பம் இப்படியான பெருவணிக நிறுவனங்களின் கையில் இருப்பதும் விபரீதத்தை அதிகமாக்கி இருக்கிறது.

‘‘மரபணு மாற்றப்பட்ட பயிர் என்பது புதியவகை பயிர். அது நம் மண்ணுக்கும் உடம்புக்கும் பொருந்துமா என்பதை ஆய்வகத்தில் சோதிக்க வேண்டும். இவை சிறுநீரகக் கோளாறு, தோல் நோய்கள், ஒவ்வாமை, இதய நோய், புற்றுநோய் என 55 வகையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சர்வதேச அளவில் வெளிவரும் 450 ஆய்விதழ்கள் கட்டுரை வெளியிட்டுள்ளன.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனுமதி கொடுத்துள்ளார்கள். இந்த விபரீதத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிற நிறுவனங்கள் ஏற்கனவே பல நாடுகளின் விவசாயத்தை அழித்த பின்னணி உள்ளவை. எனவே அனைவரும் ஒருங்கிணைந்து இந்த விபரீதத்தைத் தடுக்க வேண்டும்’’ என்கிறார்,

மரபணு பயிர்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம். ‘‘ஒரு மரபணு இன்னொரு மரபணுவோடு புதிதாக சேரும்போது அது என்னவாக மாறும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் விளையும் உணவைச் சாப்பிடுவது இதுவரை அறிமுகமில்லாத புதிய உணவைச் சாப்பிடுவதைப் போலத்தான். எதுவும் நடக்கலாம். ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் ஒவ்வாமை ஏற்படலாம். உடல்நலம் பாதிக்கலாம். பயிரிடப்படும் நாட்டின் உயிர்ச்சூழல் மாற்றமடையலாம்’ என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரிக்கிறது.

அறைக்குள் நடக்கவேண்டிய ஆய்வே முழுமையடையாத நிலையில் வயற்காட்டில் அனுமதிப்பது விபரீதமானது. மகரந்த சேர்க்கை மூலம் மரபணு மாற்றம் பிற வயல்களுக்கும் பரவலாம். அதன்மூலம் உணவுப் பாதுகாப்பே கேள்விக்குறியாகி விடும்...’’ என்று எச்சரிக்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் சிவராமன். 

‘‘பெரும் உணவுச்சந்தையைக் கொண்ட நாடு இந்தியா. அதைக் கைப்பற்றுவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் பல முயற்சிகளை செய்து வருகின்றன. ரசாயன உரங்களைக் கொட்டி நம் வயலை மலடாக்கியவர்கள் இப்போது கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதம் விதை. நம் விவசாயிகள் பொதுவாக விளைச்சலிலிருந்து விதைக்குக் கொஞ்சம் எடுத்து வைப்பார்கள். மரபணு மாற்றப் பயிர்களில் விதை எடுக்கமுடியாது. மரபணுவை மாற்றும்போது விதையை மலடாக்கும் மரபணுவையும் சேர்த்தே புகுத்தி விடுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் விதையை விலை கொடுத்து வாங்க வேண்டும். விதைச் சந்தையைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவின் உணவுச்சந்தையை கைக்குள் கொண்டுவருவதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் திட்டம். இதன்மூலம் விலைக் கட்டுப்பாடும் அவர்கள் வசம் போய்விடும். பி.டி.பருத்தி அறிமுகமான நேரத்தில் ஒரு கிலோ நாட்டுப்பருத்தி விதை 40 ரூபாய். இப்போது நிறுவனங்கள் விற்பனை செய்யும் பி.டி.பருத்தி விதை 450 கிராம் 1800 ரூபாய்.

மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தையே நாங்கள் எதிர்க்கவில்லை. பென்சிலின் போன்ற அரிய பொருட்களை அந்த தொழில்நுட்பம்தான் கொடுத்தது. உணவுப்பயிர்களில் அந்த தொழில்நுட்பத்தைப் புகுத்துவதைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் இதை அனுமதிக்க எந்தத் தேவையும் இல்லை. இங்கு உணவுப் பற்றாக்குறை இல்லவே இல்லை.

 பகிர்தலில்தான் பிரச்னை. பொருட்களை பாதுகாக்க போதிய வசதிகள் இல்லை. 15% உணவு எலியால் அழிந்து கொண்டிருக்கிறது. மரபணு மாற்றத்தை அனுமதிப்பதன் பின்னால் பெரும் உள்நோக்கம் இருக்கிறது. மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் இந்த மரபணு மாற்றம் தின்றுவிடும். அனைவரும் ஒருகை கோர்க்க வேண்டிய தருணம் இது...’’ என்கிறார், வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன்.

ஆக்கிரமிப்பு

இந்தியாவில் 2002ல் மரபணு மாற்றப்பட்ட பி.டி.பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பருத்தி, உணவுப்பயிர் இல்லை என்பதால் இதை வணிக ரீதியில் அனுமதிப்பதாகத் தெரிவித்தது மத்திய அரசு. பி.டி.பருத்தி அறிமுகமானபோது 62% நாட்டுப் பருத்தியும் 38% ஹைப்ரிடு பருத்தியும் இந்தியாவில் பயிரிடப்பட்டது. இப்போது 96% நிலப்பரப்பை பி.டி.பருத்தியே ஆக்கிரமித்திருக்கிறது.

ஆட்டுவித்தால்...


உலகத்தையே ஆட்டி வைப்பது அமெரிக்கா என்றால் அந்த அமெரிக்காவையே ஆட்டுவிக்கின்றன மரபணு மாற்ற நிறுவனங்கள். சில உதாரணங்கள்...

* பி.டி.பருத்தியை ஆந்திர அரசு கறுப்புப் பட்டியலில் சேர்த்தது. அந்தத் தருணத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க அதிபர் கிளின்டன் திடீர் பயணமாக ஐதராபாத் சென்று முதல்வரை சந்தித்துப் பேசினார். சில நாட்களில் கறுப்புப் பட்டியலில் இருந்து பி.டி.பருத்தி நீக்கப்பட்டது.

* மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை வணிகரீதியில் பயிரிட அனுமதிப்பது பற்றி சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தினார். விவசாயிகள், வல்லுனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். 2010 பிப்ரவரி 9ம் தேதி காலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனின் செயலாளர் அவசரப் பயணமாக டெல்லி வந்திறங்கினார். அன்று காலையில், ‘‘மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளைப் பயிரிட அனுமதியில்லை’’ என்று அறிவித்தார் ஜெய்ராம் ரமேஷ். சில நாட்களில் அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.

* ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது மரபணு மாற்ற விதைகள் உற்பத்திக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது அதற்கான பரிசீலனைக்குழு. அனுமதிக்க மறுத்தார் ஜெயந்தி. சில நாட்களில் அவரது பதவி பறிக்கப்பட்டு, வீரப்ப மொய்லியிடம் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவர் அனுமதித்தார்.

* ‘மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிர்களை வயல்வெளிகளில் சோதிக்கலாம்’ என்று மரபணு மாற்று மதிப்பீட்டுக்குழு அனுமதி அளித்தபோது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியாவில்தான் இருந்தார்.

வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்