இளவரசி ரெடி... நாடு கொடுங்க!



‘அடடே’ அமெரிக்க தந்தை!

‘நீதான் செல்லம் என் குட்டி இளவரசி’ என மகளைக் கொஞ்சாத அப்பாக்களே இல்லை. ஆனால், அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு ‘எங்கே என் ராஜ்ஜியம்’ என எந்த இளவரசியும் கிளம்புவதில்லை. அமெரிக்காவின் விர்ஜினியாவைச் சேர்ந்த ஜரெமியா ஹீட்டனின் குடும்பம் கொஞ்சம் வேற மாதிரி.

நிஜமாகவே உலக நாடுகள் எதுவும் உரிமை கொண்டாடாத ஒரு பிரதேசத்தைத் தேடிப் பிடித்து, அதன் ராஜகுமாரியாக தன் ஏழு வயது மகள் எமிலிக்கு முடி சூட்டியிருக்கிறார் ஹீட்டன். அதற்கு சட்டபூர்வமான அங்கீகாரமும் கேட்கிறார். ‘ப்ப்பா... யார்ரா இவன்?’ எனக் குழம்பிக் கிடக்கின்றன அண்டை நாடுகள்.

‘‘அப்பா, என்னை ஒருநாள் நிஜமாவே இளவரசியா ஆக்குவீங்களா?’’ - ஒருநாள் தூங்கப் போகும் சமயம் எமிலி இப்படிக் கேட்க, அன்று ஹீட்டனுக்குத் தூக்கமே இல்லை. ‘அதெப்படி ஒரு நல்ல தகப்பனாக என் மகளிடம் நான் பொய் சொல்ல முடியும்’ என மனசாட்சி மண்டையில் குட்ட, அவர் நெட்டைத் தட்டியிருக்கிறார். உலகில் யாருமே உரிமை கொண்டாடாத நிலப்பகுதி எனத் தேடியபோது முதல் இடத்தில் வந்து நின்றிருக்கிறது, பிர் டவில்.

கட் பண்ணி ஓப்பன் பண்ணினால், அந்த பிர் டவிலில் நிற்கிறார் நம்ம ஹீட்டன். ஆப்ரிக்கக் கண்டத்தில் எகிப்துக்கும் சூடான் நாட்டுக்கும் பார்டரில் கிடக்கும் பாலைவனம் இது. 2060 சதுர கி.மீ பரப்புள்ள பெரிய நிலம்தான். ஆனால், மக்கள் யாருமே வசிக்க முன்வராததால் எகிப்து, சூடான் இரு நாடுகளுமே தண்ணீர் இல்லா அந்தக் காட்டை தண்ணீர் தெளித்து விட்டுவிட்டன. ஹீட்டனுக்கு அந்த இடத்தில் நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் காண்பதா லட்சியம்? தன் மகளை இளவரசி என அறிவிக்க ஒரு நிலப்பகுதி வேண்டும்...

அவ்வளவுதானே. சட்டென ஒரு கொடியை டிசைன் செய்தார் மனிதர். நீல நிறப் பின்னணியில் மேலே ஒரு நட்சத்திரம், கீழே வரிசையாக மூன்று நட்சத்திரங்கள், நடுவில் ஒரு கிரீடம்... இதுதான் கொடி. அதை பிர் டவில் மணல் வெளியில் நட்டு வைத்தவர், ‘‘இது இனிமேல் வடக்கு சூடான் சாம்ராஜ்ஜியம் என அன்போடு அழைக்கப்படும்’’ என்றும் அறிவித்திருக்கிறார். இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வேண்டி, சூடான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு மனுப்போட்டு காத்திருக்கிறார் இந்த அபூர்வ அப்பா.

‘‘உலக வரலாற்றில் இப்படி தன்னிச்சையாக ஒரு நிலப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடிய சம்பவமெல்லாம் போரில்தான் முடிந்திருக்கிறது. நவீன காலத்தில் இப்படி ஒருவர் கொடி, கொத்தளத்தோடு கிளம்ப சான்ஸே இல்லை’’ என்கிறார் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் ஷைலா கெராபிகோ. இப்படி
பலரும் சொல்கிறார்கள்.

ஆனால், ஹீட்டனை இந்தக் கருத்துகள் எதுவும் தடுத்து நிறுத்தவில்லை. தானே பார்த்துப் பார்த்து ஆர்டர் கொடுத்து தன் மகளுக்காக ஒரு கிரீடம் செய்தவர், அதை எமிலிக்கு சூட்டி ராஜகுமாரி எமிலியாக்கியிருக்கிறார். கூடவே தன் மகன்களுக்கும் மகுடம் வைத்து, இளவரசர் ஜஸ்டின், இளவரசர் காலேப் என நாமகரணம் சூட்டியிருக்கிறார். (மூன்று பிள்ளைகள் மற்றும் இவர்தான் சாம்ராஜ்ஜியத்தின் கொடியில் நட்சத்திரங்களாம்) இவர்கள் ராஜாங்கத்துக்கான லெட்டர் ஹெட், முத்திரை கூட தயாராகிக் கொண்டிருக்கிறது.

‘‘அதிகாரத்தால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள்தான் போர் செய்வார்கள். நான் எளிமையானவன். அன்புக்காக இந்த சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்ப நினைக்கிறேன். வருங்காலத்தில் இந்தப் பாலை நிலத்தையும் விவசாய மையமாக மாற்ற நாங்கள் பாடுபடுவோம். ஆக, இதற்கு ஆதரவும் அங்கீகாரமும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்’’ என்கிறார் ஹீட்டன் தடாலடியாக! நம்ம ஊர்ல சொன்னா, பத்திரம் ரெடி பண்ணிடலாமே பாஸ்!

- நவநீதன்