நடைவெளிப் பயணம்



பேட்டி

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு தலைவரையோ பிரமுகரையோ ஒரு பத்திரிகைக்காரர் கண்டு கேள்விகள் கேட்டு பதில்களைப் பிரசுரித்தால் அதைப் ‘பேட்டி’ என்றே அனைவரும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். இன்று சில பத்திரிகைகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நேர்காணல்கள் என்று அழைக்கிறார்கள். காணல் என்பது பேசப்படுவதற்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் நேருக்கு நேர் பார்த்தால் பேசாமல் இருப்பார்களா என்றும் கேட்கலாம். என் வரையில், பேசுபவர்கள் மிகக் குறைவு.

ஒன்று தவறாமல் நேர்ந்து விடுகிறது. எந்த அரசியல் பிரமுகரும் பேட்டி வெளியான பிறகு ‘‘நான் சொன்னதைத் தவறாக வெளியிட்டிருக்கிறார்கள்’’ என்று சொல்லாமல் இருப்பதில்லை. நான் வியந்ததுண்டு. தவறு ஒரு முறை நடக்கும், இரு முறை நடக்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் தவறாக நடக்க முடியுமா?

 ‘பல சந்தர்ப்பங்களில் பிரமுகர் உளறிக் கொட்டிவிட்டு தவறைப் பத்திரிகையாளன் மீது போடுகிறார்’ என்பதே இன்றும் என் எண்ணம். ஆனால் சில பத்திரிகைகள் வேண்டுமென்றே திருத்திப் போடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. நானறிந்து காந்தி பத்திரிகைக்காரர்கள் மீது தவறு என்று சொன்னதில்லை. ராஜாஜி சொன்னதில்லை. ஆனால் இன்று இது சர்வ சகஜமாகிவிட்டது.

எனக்குத் தெரிந்து நேர்காணல் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் ‘சுபமங்களா’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கோமல் சுவாமிநாதன் அவர்கள். அந்தப் பத்திரிகையின் தலையங்கம் போன்ற பல விஷயங்கள் தீவிர இடதுசாரி போல இருந்தாலும், அதன் ஆசிரியர் ஓர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக அறியப்படுவதையே விரும்பினார். அப்பத்திரிகையின் பேட்டிகள் - அதாவது நேர்காணல்கள் -  எழுத்தாளர்கள் சந்திப்பாகவே இருந்தன.

அந்த நேர்காணல்களின் தொகுப்பை ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என்ற தலைப்பில் அப்பத்திரிகையின் இணை ஆசிரியர்களில் ஒருவர் (இளையபாரதி) கொணர்ந்தார். ஆச்சரியகரமாக அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நூலின் வெற்றியோடு நேர்காணல் என்ற சொல்லும் தமிழ்ப் பத்திரிகைகளின் அகராதியில் இடம் பிடித்துவிட்டது.

நேர்காணல்கள் எல்லா நேரங்களிலும் பேட்டி காணப்படுபவரைப் பெருமைப்படுத்துவதற்காக என்று நினைக்கக்கூடாது. பல சந்தர்ப்பங்களில் அதன் அடிநாதம் விஷமமாக இருக்கும். அறியாமல் சிக்கிக் கொள்கிறவர்கள் நிறைய! என்னுடைய நீண்ட வாழ்க்கையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்த விஷமத்தனத்திற்கு ஆளாகி இருக்கிறேன்.

 ஒருவரை என் நண்பனாக நினைத்துப் பேசியதைப் பேட்டியாக மாற்றி, சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறேன். இதில் உள்நாடு, வெளிநாடு என்ற பாகுபாடு இல்லை. இன்னும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். என் படைப்புகள் நிறையவே இருக்கின்றன. அவற்றைப் பற்றி ஏதாவது சொன்னால் நியாயம். ஆனால் தாக்குகிறவர்களுக்குப் படிக்க நேரம் இருக்காது.  

இலக்கியப் பேட்டிகளை ஒரு விசேஷ கலையாகச் செய்தவர் கள் ‘பாரிஸ் ரிவ்யூ’ என்ற சிறு பத்திரிகையின் ஆசிரியர்கள். பெயர்தான் பாரிஸ். பத்திரிகை முழுக்க முழுக்க ஆங்கிலம். அவர்களுக்குப் பெரிய எழுத்தாளர்களின் படைப்புளை வெளியிட வேண்டும் என்று ஆவல். ஆனால் பெரிய எழுத்தாளர்களுக்குரிய சன்மானம் தர இயலாது. இந்தச் சூழ்நிலையில் ஒரு உதவி ஆசிரியருக்கு, ‘எழுத்தாளர்களின் பேட்டி வெளியிடலாம்’ என்ற யோசனை தோன்றியது.

அதன்படி ஓர் எழுத்தாளரின் எல்லாப் படைப்புகளையும் பேட்டி காண்பவர் நன்கு படித்து விடுவது. பேட்டியின் முக்கிய பாகம், அவரது படைப்புகள் பற்றி இருக்கும். பின்குறிப்பாக எழுத்தாளர் எப்படி எழுதுகிறார் என்பது பற்றிக் கேள்விகள் இடம்பெறும். முதலில் யாருக்கும் அந்த பேட்டிகளுக்குப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் அந்த பேட்டிகள் வரத் தொடங்கியதிலிருந்து வாசகர்கள் நூல்களைத் தேடித் தேடி வாங்கிப் படித்தார்கள்.

பேட்டி காண்பவர்கள் அந்த ஆசிரியரின் படைப்புகளை எல்லாம் படித்து இருந்தபடியால், பேட்டி இருபது, முப்பது, ஐம்பது பக்கங்கள் கூட நீண்டன. இவை படிப்போருக்கு நிறைய தகவல்கள் தந்ததோடு, எழுதத் தொடங்குவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஆங்கில, அமெரிக்க எழுத்தாளர்களுக்குப் பிறகு அவர்கள் ஐரோப்பிய எழுத்தாளர்களையும் பேட்டி கண்டார்கள். இதன் மூலம் மொழிபெயர்ப்புகள் பெருகின.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபிறகு பல ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளில் ஒருவித வெறுமை நிலவியது. இளைஞர்கள் வாழ்வதற்குரிய உற்சாகம், காரணம் கிடைக்காமல் திசையற்று உலவிக்கொண்டிருந்த வேளையில், இலக்கியம் ஒரு புதிய அர்த்தம் கொடுத்தது. எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் நாடக ஆசிரியர்கள், திரைப்பட இயக்குனர்களுக்கும் அழிவிலும் இடிபாடுகள் மத்தியிலும் ஒரு புதிய பாதை வகுக்க முடிந்தது.

யுத்தம் ஒன்று ஆறு ஆண்டுகள் நடந்து, பல நாடுகளை 95 சதவீதம் அழித்திராவிட்டால், கோதார்த், டி சிகா, துரூஃபா போன்ற கலைஞர்கள் உருவாகியிருப்பார்களா என்பது ஒரு கேள்வி. அந்தத் தலைமுறைக்காரர்களுக்கு அமெரிக்கப் போர் வீரர்கள் தின்று போட்ட சாக்லெட் காகிதத்தைப் பொறுக்கியெடுத்து உண்பது அசாதாரணமல்ல. நாஜிகள் ஐரோப்பாவை நிர்மூலமாக்கியபோது அவர்களையும் அழித்துக் கொண்டார்கள்.

னக்கு அந்தத் தலைமுறையினரையும் பார்த்துப் பழக வாய்ப்புக் கிடைத்தது. என்னை ஏதேதோ காரணங்களுக்குப் பேட்டி கண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று, இந்தி மொழி பற்றியது. நான் முதலில் படித்தது ஒரு கிறிஸ்தவ, தெலுங்குப் பள்ளி. ஆனால் மூன்றாம் வகுப்பில் வரலாறு, உலகியல் ஆங்கிலத்தில். விவிலிய வகுப்பு தெலுங்கில்! அந்தப் பள்ளியை விட்டு மாறியபோது எனக்குப் பெரிய விடுதலை என்று நினைத்தேன். ஆனால் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டியிருந்தது.

வட இந்தியாவில் பெரிய பதவிகளுக்கு மாற்றலாகிப் போகிறவர்கள் அதிகம் சிரமப்படுவதில்லை. ஆனால் எழுத்தர், உதவியாளராகப் போகிறவர்கள் வேற்று மொழியில் அவதிப்படுகிறார்கள்.

ஆறு மாத காலத்தில், அவர்கள் வாழ்க்கையை அதிகம் சங்கடப்படாமல் வைத்திருக்கும் அளவுக்குப் புது மொழியைக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். ஆதலால் மொழி தேவையையும் சார்ந்திருக்கிறது. நான் ஏராளமான பேட்டிகளை எதிர்கொண்டிருக்கிறேன்.

‘‘போதும்... போதும்...’’ என்றபோதும் மீண்டும் ஒரு பேட்டி. பல தவறுகள் அதில் இருந்தன. நான் யோசித்தேன். என் இடது காது கேட்கும் ஆற்றலை இழந்துவிட்டது. அது காரணமோ?! ‘கேள்விகளை எழுதித் தாருங்கள், பதில்களை எழுதித் தந்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். யாருக்கும் சங்கடமில்லை. ஆனால் கேள்விகள் எழுத உழைப்பு தேவைப்படுகிறது.

பேட்டிகளில் வரும் செய்திகள் எல்லாமே உண்மையென்று நம்பி விடக்கூடாது. பல பேட்டிகள் ஏதோ நீதிமன்றக் குறுக்கு விசாரணை போல அமைந்து விடுகின்றன. பல நிருபர்கள் ஒலிப்பதிவு இயந்திரங்களை முடுக்கிவிட்டு, அதுவே எல்லாப் பொறுப்பு களையும் ஏற்றுக்கொண்டு விடும் என்று நம்புகிறார்கள். நாம் பல சந்தர்ப்பங்களில் அன்புடன் கண்டிப்பதையோ அல்லது நம் தொனியையோ பேட்டி எழுத்து பிரதிபலிக்க முடியாது. புனைகதையில் இது சாத்தியம்.

நேர்காணல்கள் எல்லா நேரங்களிலும் பேட்டி காணப்படுபவரைப் பெருமைப்படுத்துவதற்காக என்று நினைக்கக்கூடாது. பல சந்தர்ப்பங்களில் அதன் அடிநாதம் விஷமமாக இருக்கும்.

படிக்க...

மா என்கிற பத்மா அவர்கள் படிப்பு முடித்ததிலிருந்து, அதிக வசதியற்ற பெண்கள், குழந்தைகள் ஆகியவர்களின் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் பாடுபடுகிறவர். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். சுய முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு பல நூல்கள் எழுதியவர். அவருடைய சமீபத்திய நூல், ‘கேள்வி கேள்! பதில் தேடு!’

நான் சிறுவனாக இருந்த நாட்களில் இத்தகைய நூல்கள் கிடையாது. சிறுவர்களுக்காக எழுதிய வரலாற்று வீரர்கள் கதைகளையும், புராண இதிகாசங்களையும் எங்களுக்குத் தோன்றிய வகையில் அர்த்தப்படுத்திக் கொண்டு நாங்களாகச் சில மதிப்பீடுகளை ஏற்படுத்திக்கொண்டோம்.

‘கேள்வி கேள்! பதில் தேடு!’ நூலுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் அவர்கள் பொருள் பொதிந்த அணிந்துரை தந்திருக்கிறார். நூலை வெளியிட்டவர்கள், எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி-621112. சென்னையில் பிரதிகள் கிடைக்குமிடம்: மாயா படைப்பகம், 39, அழகிரிசாமி சாலை, கே.கே.நகர், சென்னை-600078. தொ.பேசி: 94440 02725.

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்