போனஸ்



‘‘சந்தோஷ், கல்யாணமாகி ஏழு வருஷத்துக்குப் பின்னாடி உன் சம்சாரம் மாசமாயிருக்கிறா... சந்தோஷப்படாம ஏன்டா சோகமாவே இருக்கே?’’ - நண்பனைக் கேட்டான் வினோத்.
‘‘ப்ச்... ஊர்ல அவளும் எங்க அம்மாவும் தனியா கஷ்டப்படுறாங்க. ‘செலவுக்குப் பணம் எடுத்துக்கிட்டு தீபாவளிக்கு வந்து சேரு’னு அம்மா போன் பண்ணினாங்க.

ஆனா, எங்க முதலாளி இந்த வருஷம் யாருக்கும் தீபாவளி போனஸ் இல்லைனுட்டாரு. கையில பணம் இல்லாம ஊருக்கே போகலை! கடன் கேட்டுப் பார்க்கலாம்னு உன்கிட்ட வந்தா, நீயே கஷ்டப்படுறதை நேர்ல பார்க்கறேன். அதான்...’’ - கவலையாகச் சொல்லி விட்டு விடைபெற்றான் சந்தோஷ்.

இரண்டு நாள் கடந்தது...சந்தோஷின் செல்போன் சிணுங்கியது. எதிர்முனையில் அவன் அம்மா...‘‘டேய் உன் பொஞ்சாதிக்கு சுகப்பிரசவம் ஆகியிருக்குடா... கடவுள் உனக்கு போனஸா ரெட்டை ஆம்பளப் புள்ளைகளைக் கொடுத்திருக்காரு. நீ ஏன்டா இன்னும் ஊருக்கு வரலை? பணம் இல்லாட்டி பரவாயில்ல... லீவைப் போட்டுட்டு உடனே வா!’’ என்றாள் அம்மா.
மகிழ்ச்சியோடு முதலாளிக்கு போனடித்து, ‘‘நான் ஊருக்குப் போறேன் சார்’’ என்றான் சந்தோஷ்.

‘‘என்ன விஷயம்?’’ - முதலாளி கேட்டார். ‘‘கடவுள் எனக்கு தீபாவளி போனஸ் கொடுத்திருக்கார்!’’

சகுபுத்ரா