அவன் அவள் unlimited



பொண்ணுங்களை புரிஞ்சுக்கறது ஈஸி!

பெண்கள் அன்பு செய்யப்பட வேண்டியவர்கள்...
புரிந்துகொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல!
ஆஸ்கர் வைல்டு

ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிக்கிறார்கள்... கிட்டத்தட்ட ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை மாதிரி. ஒருவன் அவளிடம், ‘‘வாவ், இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு’’ என்கிறான். இன்னொருவன், ‘‘நீ சிரிக்கும்போது நட்சத்திரம் மின்னுது’’ என்கிறான். மூன்றாமவனோ, ‘‘நீ ஒரு புதிர். உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியல’’ என்கிறான். அவள் மனம் யார் பக்கம் சாயும்?

‘ஆழம் எது ஐயா... அந்த பொம்பள மனசுதான்யா’ என டயலாக் பேசினான் பாருங்கள்... அந்த மூன்றாமவன். அவனைத்தான் அந்தப் பெண் விரும்புவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள். காரணம், அந்தப் பெண்ணை அதிகபட்சமாகப் புகழ்ந்து பேசியது அவன்தான். யெஸ்... ‘உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலை’ எனக் காலம் காலமாக ஆண்கள் பெண்களிடம் சொல்வது புகார் அல்ல...

புகழ்ச்சி. ‘‘நாம் ஒவ்வொருவருமே முன்கூட்டியே கணிக்க முடியாதவராக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்களுக்கு அந்த உணர்வை இயற்கை அதிகம் கொடுத்திருக்கிறது’’ என்கிறார் இமொரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர், க்ரிகொரி பெர்ன்.

ஆக, ஒரு ஆணிடம் நேருக்கு நேராக, ‘‘நீ சிறந்த வீரன்... உன்னை வெல்ல யாருமில்லை’’ என்று சொன்னால் அவனுக்கு எப்படி குளுகுளுவென்று இருக்குமோ... அதே மாதிரிதான் ஒரு பெண்ணிடம் ‘‘உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலை’’ என்று சொல்வதும். நேரில் நெகட்டிவ் ரீயாக்ஷன் கொடுத்தாலும் அந்தப் பெண் உள்ளூர அந்த வார்த்தைகளால் மகிழ்வாள். ‘‘புரிஞ்சுக்க முடியலையா? ஹப்பாடா! அப்போ நாம கரெக்டாதான் இருக்கோம்’’ என நிம்மதி அடைவாள்.

‘‘நிஜத்தில் இந்த வார்த்தையை ஆண்கள் சொல்வதற்காக பெண்கள் நிறைய மெனக்கெடுகிறார்கள். ஹோட்டலில் போய் அமர்ந்ததும், ‘உனக்கென்ன..? வழக்கம் போல பர்கர் அண்ட் ஸ்வீட் லெமன்தானே?’ என்று கேட்டால், ‘நோ... நோ... இன்னிக்கு வெஜ் ரோல் ப்ளஸ் ஆரஞ்ச் ஜூஸ்’ என மாற்றிச் சொல்வதை பெரும்பாலான பெண்களிடம் பார்க்கலாம்’’ என்கிறார் பெர்ன்.‘‘கழுதை கெட்டா குட்டிச் செவுரு... நீ என்ன கலர்ல டிரஸ் பண்ணுவேன்னு எனக்குத் தெரியாதா?’’

எனப் பெண்களை சரியாக கெஸ் பண்ணிப் பாருங்களேன்... நிச்சயம் அதை அவர்கள் ரசிக்க மாட்டார்கள். மனிதர்கள் மட்டுமல்ல... எந்த விலங்குமே சுலபத்தில் கணிக்கக் கூடியதாய் இருப்பது அதற்குப் பாதுகாப்பானதல்ல. மீன் கொக்கியைக் கடிக்கும் என கணிக்க முடிவதால்தானே அதை சுலபமாய்ப் பிடித்து விடுகிறோம்?

‘கணிக்க முடிகிறவர்களாக இருந்தால் மீனைப் போல தன்னையும் பிடித்துவிடுவார்கள்’ என்றெல்லாம் பெண்கள் ஓவராக சிந்திப்பதில்லை. முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்கள் தங்கள் உள்ளுணர்விடம் விட்டுவிடுகிறார்கள். தன்னைக் கணிக்க முடிகிற ஆணை பெண்களின் உள்ளுணர்வு விரும்புவதில்லை.

ஸோ சிம்பிள்!

ஆனால், ஆண்களின் உள்ளுணர்வும் சாதாரணமில்லை. பெண்களை ஓவராகப் புரிந்துகொள்வதும் நிராகரிப்புக்குக் காரணமாகிவிடும் என அது உணர்ந்திருக்கிறது. எனவேதான் அவள் எந்த நேரத்தில் என்ன செய்வாள்... எப்படிப் பேசுவாள் என எல்லாம் தெரிந்தாலும், ‘உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல’ என சும்மானாச்சும் சொல்லி பத்து மார்க் வாங்கிவிடுகிறது ஆண் வர்க்கம். நம்மை அறியாமலேயே 2 லட்சம் வருடமாக இதை நாம் செய்து வருகிறோம்!

உண்மையில், ஆண் மனதை விட பெண் மனதைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். ஏனெனில், காதல் விளையாட்டுகளில், ‘ஹார்ட் டூ கெட்’ என்ற வித்தையை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். அதாவது, தன்னைக் கிடைத்தற்கரிய பொக்கிஷமாய்க் காட்டிக் கொள்வது. இது எதிர்பாலினரைக் குழப்பும் விளையாட்டு!’’ என்கிறார் டாக்டர் எம்.எம்.மூர் எனும் ஆராய்ச்சியாளர்.

‘‘உதாரணத்துக்கு, ‘ஈவ்னிங் வெளிய போகலாமா’ என ஒருவன் அழைத்ததும் ‘வா போகலாம்’ எனக் கிளம்புவது, தன்னை மலிவாக்கும் எனப் பெண்கள் நினைப்பார்கள்.

ஸோ, ‘யோசிச்சு சொல்றேன்’ என்பார்கள். மாலை வரை தகவல் வராது. கிளம்ப வேண்டிய நேரத்தில் சரியாக போனடித்து, ‘எங்கே போறோம்?’ எனக் கேட்பார்கள். உண்மையில் அத்தனை நேரமும் அவர்கள் செம எதிர்பார்ப்போடு மேக்கப் செய்து கொண்டிருந்திருக்கலாம்.

 ‘நீ வரலன்னு நினைச்சேன்’ என பையன் இழுத்தால், கோபித்துக் கொள்வார்கள். இதனால்தான் பெண்களைப் புரிந்துகொள்ள முடியாது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடுகிறோம். ஆனால், ‘யோசிச்சு சொல்றேன்’ எனச் சொல்லும் தொனி, உடல்மொழி, காதல் சிக்னல்... இவற்றைப் புரிந்துகொள்ளத் தெரிந்தவனுக்கு பிரச்னை இல்லை!’’ என்கிறார் அவர்.

அதைப் புரிய வைக்கும் விதமாக, மூர் அடுக்கும் பெண்களின் காதல் சிக்னல்கள் சில...தோற்றம்ஆண்களுக்கு காதல் வந்தால் டென்ஷனாக இருப்பார்கள். பெண்களுக்கு காதல் வந்தால் டென்ஷனை மறைப்பார்கள்.

கால்களைப் பின்னி அமர்வது, தலைமுடிக் கற்றையை விரலில் சுற்றுவது, நகம் கடிப்பது, விரலில் நெட்டை உடைப்பது, ஆடையை அடிக்கடி திருத்துவது, செல்போனில் தேவையே இல்லாமல் ஆப் லிஸ்ட்டைப் புரட்டிக் கொண்டிருப்பது போன்றவை டென்ஷன் குறைக்கும் டெக்னிக்குகள். அந்த டென்ஷனுக்கு காரணம் நீங்கள் என்றால், அவள் உங்களவள்.

பேச்சு

வழக்கத்தை விட மெதுவாகவோ, வேகமாகவோ, தடுமாற்றம் நிறைந்ததாகவோ இருந்தால்... ‘ம்ம்... ஆங்...’ போன்ற இடைச்செருகல்கள் இருந்தால்... அது பதற்றம்... காதல் பதற்றம்! பொதுவாக, தோழிகள் சூழ்ந்திருக்கும்போது தன் நேசத்துக்குரியவர் வந்தால், பெண்கள் பேச்சைக் குறைத்துவிடுவார்கள். ‘ஏதும் தப்பாய் பேசிவிடக் கூடாது’ என்ற கவனம் அது. அப்படியொரு கவனம் அவரிடம் வருகிறதா என்றும் கவனியுங்கள்.

பார்வை

குழு அரட்டையின்போது உங்களையே பார்த்துப் பேசினாலும் சரி, உங்களைக் கொஞ்சமும் ஏறிடாமல் மற்றவர்களைப் பார்த்தாலும் சரி... ‘என்னவோ இருக்கிறது’ என அலர்ட் ஆகுங்கள். அதுவரை உங்களைப் பார்த்துக்கொண்டிருந்த பெண், நீங்கள் பார்க்கும்போது சட்டென விழியை அகற்றுகிறாரா? அது லவ் சிக்னல் என்பதைத்தான் வள்ளுவரே சொல்லிவிட்டாரே!

பொருள் அறிக சாட்டிங்கின்போது எதிர்முனையில் ரொம்ப நேரமாக டைப் செய்தும்... ‘யா...’, ‘கரெக்ட்’, ‘நைஸ்’ என குட்டி குட்டி வார்த்தைகளே வருகின்றனவா? உங்களுக்காக பார்த்துப் பார்த்து வார்த்தைகளைக் கோர்க்கிறார் என்று அர்த்தம்.

‘நான் ரொம்ப குண்டாயிட்டேனா?’, ‘இந்த கலர் எனக்கு சூட் ஆகலைல்ல?’ என உங்களிடம் கருத்துக் கேட்கிறாரா? உங்கள் பாராட்டுக்களை எதிர்பார்க்கிறார் என்று பொருள்.தன்னால் செய்ய முடிகிற சப்பை மேட்டருக்கெல்லாம் உங்கள் உதவியை நாடுகிறாரா? எனக்குத் தெரியாது, என்னால முடியாது,

எனக்குப் பசிக்குது, தூக்கம் வருது என்றெல்லாம் கெத்து பார்க்காமல் உங்களிடம் இறங்கி வருகிறாரா? ‘அவன் எனக்கு லைக்ஸ் கொடுத்தான்... இவன் லிஃப்ட் கொடுத்தான்’ என்றெல்லாம் மிகையாகச் சொல்லி உங்கள் பொறாமையைத் தூண்டிப் பார்க்கிறாரா? நிச்சயம் அவர் மனதில் நீங்கள் ஸ்பெஷல்!சரி, பெண்களைப் புரிந்துகொள்வதில் இப்படிப்பட்ட மனத்தடை மட்டும்தான் உள்ளதா? அவர்களைப் புதிராக்குவதில் உடலின் பங்கு என்ன?

நீங்கள் யார்?

இந்த இரண்டு பூக்களில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது? ஊதாவா? ஆரஞ்சா? பதிலைக் குறித்துக்கொண்டு பலன்களை தலைகீழாக்கிப் படியுங்கள்.

கத்தரி கலரு பூதான் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், நீங்கள் செயல்வீரர். விதிமுறைகளை மதிப்பவர். மனிதர்களை விடவும் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பீர்கள்.
ஆரஞ்சு விருப்பம் என்றால் நீங்கள் ஜாலியானவர். பேச்சுத்திறன் உள்ளவர். எதிலும் வெரைட்டி தேடும் உங்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல!

அட போங்க சார்... கோச்சிக்கிட்டுப் போன அவர் சம்சாரம் எப்ப வரும்னு தெரியாம அவரே தலையைப் பிச்சிக்கிட்டிருக்கார்!

-தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்