ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



சன்னி லியோனிடம் நற்சான்றிதழ் வாங்க பல நடிகர்கள் துடிக்கிறார்கள். ஆனால் அவரிடம் அப்படி ஒரு சான்றிதழ் வாங்கியவர், யாருமே எதிர்பார்க்காத ரன்வீர் சிங். ‘‘அழகாக இருக்கிறார். சிறந்த படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். நல்ல திரைக்கதை அறிவு இருக்கிறது. வருங்காலத்தில் ரன்வீர் சிங் ஒரு சூப்பர்ஸ்டாராக வருவார்’’ என ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சன்னி.

சமீபத்தில் தான் படித்த ஒரு நாவலின் உரிமையை வாங்கி படமாக்குகிறார் சோனம் கபூர். எப்போதும் மோதிக்கொள்ளும் இரண்டு மாற்றுக் கட்சிகளில் இருக்கும் இரண்டு இளம் தலைவர்களுக்கு இடையிலான இனிமையான காதல் கதைதான் ஸ்டோரி லைன்! ‘‘த்ரில்லிங்கான இந்த கேரக்டரில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்’’ என்கிறார் சோனம்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டாலும், இன்னமும் எனக்கு இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான் - என்கிறார் ஏஞ்சலினா ஜோலி. கருப்பை புற்றுநோயால் இறந்தார் ஏஞ்சலினாவின் அம்மா. ‘‘எளிய மனிதர்களிடம் மென்மை முகம் காட்டவும் அவருக்குத் தெரியும். எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், மலையையே புரட்டிப் போடும் வலிமையோடு மோதவும் அவரால் முடியும். சமூக சேவை, அறக்கட்டளைகள் என அக்கறையுள்ள ஒரு மனுஷியாக நான் உருவெடுக்க அம்மாதான் காரணம்’’ என உருகுகிறார் ஏஞ்சலினா.

மிலா குனிஸ் - அஷ்டன் குட்சர் நட்சத்திரத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ‘‘சிறந்த அம்மாவுக்கான விருதை இப்போதே மிலாவுக்குக் கொடுத்து விடலாம்’’ என சொல்கிறார்கள் அவரது தோழிகள். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைக்கு பணிவிடைகள் செய்கிறார் மிலா.

கேத்ரினா கைஃப் நடிக்கும் ‘ஃபிட்டூர்’ படத்தின் பல காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட இருந்தன. ஷூட்டிங் போயிருக்க வேண்டிய நேரத்தில் காஷ்மீரில் பெரும் வெள்ளம் பாய்ந்து, பல நகரங்கள் உருக்குலைந்து விட்டன. நிலைமை சீராக இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் என்பதால், வேறு வழியின்றி காத்திருக்கிறார்கள்.