அதிர்ஷ்டசாலிதான்!



‘தள்ளுபடியா... தலைவலியா?’ ஃப்ளிப்கார்ட் இணையதளத்தின் அக்கப்போரைப் படித்து அதிர்ந்தேன். இனி ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு எச்சரிக்கை மணியே!
- ஏ.சங்கரதாஸ், சேலம்.

சூப்பர் ஸ்டாரிடமே தன் துடுக்குத்தனத்தைக் காட்டிய சந்தானத்தின் அனுபவம் அனைத்தும் சூப்பர். ரஜினியோடு சந்தானம் கலக்கும் லிங்கா சீக்ரெட்ஸ், சந்தனமும் ஜவ்வாதும் கலந்த மணம் வீசியது.
- ஜி.கே.அருணாராணி, தஞ்சாவூர்.

சமர்த்துப் பொண்ணு சமந்தா, சித்தார்த்துக்குப் பிடித்த உணவு வகைகளைத் தன் வருங்கால மாமியாரிடம் கேட்டு சமையல் கற்று வருகிறாரா? சித்தார்த் ரொம்ப அதிர்ஷ்டசாலிதான்!
- எச்.மோகன்குமார், சிவகங்கை.

பெண்களின் காதல் சிக்னலை கண்ணதாசனின் பாடல் வழி விளக்கிய விதம், அருமை. அந்தக் காலப் பெண்களுக்கு இருந்த வெட்கம், இந்தக் காலத்தில் இல்லை என்பது ஆராயப்பட வேண்டிய உண்மை!
- இரா.அருமைநாயகம், செஞ்சி

‘புதுத்துணி தைக்கிறதில்லை!’ என கண்டிஷன் போட்டு, பழைய துணிகளை மட்டுமே தைக்கும் வினோத தையல் கடை வியக்க வைத்தது. இப்படிப்பட்டவர்கள் எல்லா மாவட்டத்திலும் நாலு பேரு இருந்தால், அடிக்கடி துணி எடுக்கும் செலவு மிச்சம்.
- பி.கே. மேகலாராஜன், மதுரை.

வைரமுத்து பேட்டி வைரமேதான். இன்றைய கிராமியத்தையும் நகரத்தையும் கவிப்பேரரசு வேறுபடுத்திச் சொன்ன விதம் அதி தீவிர அவதானிப்பு! ‘இதுவரை நான்’ இரண்டாம் பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்... குங்குமத்தில்!
- வே.தமிழரசன், திருச்செந்தூர்.

காதல் தன் அந்தரங்கத்தை இழந்து விட்டதாக கவிப்பேரரசு வைரமுத்து சொல்லியிருப்பது நூறு சதவீதம் உண்மை. இன்றைய காதலும் திருமணமும் சீக்கிரமே திகட்டிப் போவதற்கு இதுதான் காரணமாக இருக்கக் கூடும். வைரமுத்து வின் அனுமானங்களில் இளமை ததும்பி வழிகிறது.
- கோ.அரசு, பாஞ்சாலம்.

என்னது... தமன்னா அப்பா வைர வியாபாரம் செய்கிறாரா? அவங்க சிரிக்கும்போது மின்னல் கீற்று தெறிச்சப்பவே நினைச்சோம்! அம்மணி வைரத் தொட்டிலிலேயே வளர்ந்திருப்பாங்களோ!
- டி.நவீன்குமார், சீர்காழி

இன்றைய ஹவுஸ் ஓனர்களின் கறார் கண்டிஷன்களை காமெடியாய் கலாய்த்து, உண்மையையும் உரக்கச் சொல்லிவிட்டது உங்கள் கட்டுரை!
- சி.பி.கண்ணபிரான், செங்கம்