ஒல்லி



தமயந்தி நடுங்கினாள்... பெரிய அத்தை நாளை காலை வருகிறாளாம். ‘‘போம்மா! காபியும் வேணாம்... ஒண்ணும் வேணாம்’’ என்று தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அம்மாவுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. தமயந்தியின் பூசிய உருவத்தைக் கேலி செய்து அவளை அழ வைக்காமல் இருக்க மாட்டாள் பெரிய அத்தை. என்ன ஆகுமோ!
மறுநாள் காலை, பெரிய அத்தை வந்து ஹாலில் உட்கார்ந்திருந்தாள். அறையிலிருந்து வந்த தமயந்தியைக் கண்டதும் அவளுக்கு ஷாக்!

‘‘என்னடீ தமா... இப்படி இளைச்சுப் போயிட்டே!’’ - பெரிய அத்தையின் இந்தக் கத்தலை யாருமே எதிர்பார்க்கவில்லை. அம்மா அதிர்ந்தாள். ஒரே ராத்திரியில் இளைப்பதா? ஆனால், நிஜம்தான். அம்மா கண்களுக்கே தமயந்தி வெடவெடவென இளைத்தது போலத்தான் தெரிந்தாள். மாலையில் ஊருக்குக் கிளம்பும் வரை, தமாவுக்கு சத்துள்ள ஆகாரம் தரும்படி அம்மாவுக்கு அட்வைஸ் மழை பொழிந்து தள்ளிவிட்டாள்.

‘‘நல்லவேளைம்மா! போன முறை மாதிரி ஒரு வாரம் பெரிய அத்தை தங்கியிருந்தா, நான் மாட்டியிருப்பேன். என்கிட்ட இருந்த ரெண்டு ஜாக்கெட்டை மட்டும் தையல் பிரிச்சி லூஸாக்கிப் போட்டதும் இளைச்சுட்டதா அவங்க நம்பிட்டாங்க. நிம்மதி!’’ - தாயைப் பார்த்து குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தாள் தமயந்தி.               

ஜே.செல்லம் ஜெரினா