மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

நீயும் நானும்
வேறில்லை
என்றானபிறகு
பகிர்தல் என்றொன்று
உண்டா?
இல்லை...
நிச்சயம் இல்லை!
என் தேவை
உன் அன்பு அறியும்
உன் ஆசை
என் உள்ளம் உணரும்
நமக்கிடையே
வார்த்தைகள் இல்லை
என் வாழ்க்கையே
நீயானதால்..!

- என்பது போல இருந்தார்கள் குகனும் பாம்பன் சுவாமிகளும். காசி யாத்திரை முடித்து சென்னை திரும்பியவர் அடுத்து எங்கே எனக் கேட்டபோது அழகன் அமைதி காத்ததன் காரணம், அடுத்த சில நாட்களிலேயே தெரிந்தது. பாம்பன் சுவாமிகளின் தொடையில் இரண்டு கட்டிகள் தோன்றி துன்புறுத்தின. அடியெடுத்து வைக்க முடியாமல் அவதிப்பட்டார். பழைய வினைப் பயன் என அமைதி காத்தார்.

ஆனால், அப்படி சும்மா இருக்க முடியவில்லை முருகனால். முன்வினையாகவே இருந்தாலும் துயரப்படுவது தன் பக்தன் என்கிறபோது, கந்தவேள் கண்டுகொள்ளாமல் இருப்பானா?
அது முன்னிரவு. ஒரு சின்னஞ்சிறுவனாய் வடிவெடுத்து, பாம்பன் சுவாமிகளின் அறைக்குள் சென்றான். வலியில் தவித்தாலும், முருகனை நிறுத்தி தியானத்தில் இருந்தவரை ஆது
ரமாய்ப் பார்த்தான். கண்களால் உடல் வருடினான். கட்டிகளைப் பார்வை கடந்தபோது மெல்ல வலி மறைந்தது. கருணையோடு கொண்டு வந்த மருந்தைப் பூசினான். மெல்ல கட்டிகள் கரைந்து மறைந்தன. பாம்பன் சுவாமிகளுக்கு எல்லாம் கனவு போல் இருந்தது. கண்விழித்துப் பார்த்தார். கட்டிகளைக் காணவில்லை.

வாசியானகால் ஊரு மீது கோள்
மருவு கட்டிநை வுறந லற்புறை
பூசி நின்றவோர் பிள்ளையே இஙன்
புரிவிலார்கள்போல் மறைவ தேதரோ
- என்று ஸ்ரீமத் குமாரசுவாமியத்தில் இடையறாது நிற்க விழைதல்
 பதிகத்தில் முருகன் தன் மீது
கொண்டிருந்த அன்பை நன்றியோடு பதிவு செய்தார்.

இதற்கிடையே திருவனந்தபுரம் ந.சுப்ரமணியப் பிள்ளையிடமிருந்து சுவாமிகளுக்கு அழைப்பு வந்தது. அந்த ஆண்டு மகா கந்த சஷ்டியை வெகு சிறப்பாகக் கொண்டாட விரும்பினார் சுப்ரமணியப் பிள்ளை. அதற்காக தனது ஒரு மாதச் சம்பளத் தொகையான நூறு ரூபாயை செலவு செய்ய விரும்புவதாகவும் சொல்லி கோரிக்கை வைத்தார்.
குகனுக்கான கொண்டாட்டத்தைக் கோலாகலமாக நடத்த கசக்குமா என்ன?

குதூகலமாக பாம்பன் சுவாமிகள் திருவனந்தபுரம் விரைந்தார். சஷ்டி விழா வெகு சிறப்பாகத் தொடங்கியது. சஷ்டி பூஜையில் மிக முக்கியமான விஷயம், அன்ன தானம். குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து, அந்தி சாயும் வரை வந்தவருக்கெல்லாம் பசி தீர்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். குறித்த நேரத்தில் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் சுவாமிகள்; அது தொடர்ந்தது.

உணவுக் கூடத்தை கவனிக்கும் பொறுப்பை சுப்ரமணியப் பிள்ளை தன் உறவினர் சுந்தரலிங்கம் பிள்ளையிடம் கொடுத்திருந்தார். அவரும் அசராமல் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். நிகழ்ச்சி எல்லாம் முடிந்த பிறகு, ‘‘எத்தனை முறை சமையல் நடந்தது’’ எனக் கேட்டார் சுப்ரமணியப் பிள்ளை.

‘‘சாதம் ஒருமுறைதான் சமைத்தோம். அடியார்கள் காலை முதல் கணக்கில்லாமல் வந்துகொண்டே இருந்தார்கள். சாதமும் எடுக்க எடுக்க அமுதசுரபி போல வந்துகொண்டே இருந்தது. சாம்பார், பொரியல் போன்ற பதார்த்தங்கள் மட்டும்தான் மீண்டும் செய்ய வேண்டி இருந்தது’’ என்று பதில் சொன்னார் சுந்தரலிங்கம்.உணவருந்திச் சென்றவர்களின் எண்ணிக்கையை நினைத்துப் பார்க்கும்போதே மலைத்துப் போனார்கள். இது குகனின் கருணை. பாம்பன் சுவாமிகளுக் காக அவன் நடத்திய அற்புதம் என உணர்ந்து சிலிர்த்தார்கள். 

சுப்ரமணியப் பிள்ளை பக்தியோடு பாம்பன் சுவாமிகளின் பாதத்தில் விழுந்தார். தம் மீது கொண்ட பக்தியால் தன் இளைய மகனுக்கு குமரகுருதாசன் என பெயரிட்டு மகிழ்ந்த பெருமைமிகு சீடனை உள்ளம் நிறைந்து வாழ்த்தினார். ‘‘குகன் இருக்கிறான்; குறையில்லாது காப்பான்’’ என்று வாயார வாழ்த்தினார். சென்னை திரும்பிய சுவாமிகள், கடற்கரையையொட்டி இருந்த அனைத்துத் தலங்களையும் தரிசித்தார். நிறைய எழுதினார். அதில் ‘திவோதய ஷடக்ஷரோபதேசம் என்னும் சிவஞான தேசிகம்’ என்கிற பொதுத் தலைப்பில் 32 வியாசங்கள், குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதற்கிடையே ஒருநாள் இரவு 8 மணியளவில் சுவாமி வீட்டின் மாடியில் இருந்தார். வீட்டின் உரிமையாளர் பாலசுப்பிரமணிய முதலியார் மாடிக்கு வந்து, ‘‘சுவாமி’’ என அழைத்தார்.
தீப வெளிச்சமில்லை. ஆகவே, ‘‘யாரது?’’ எனக் கேட்டார் சுவாமிகள்.

‘‘நான்தான் பாலசுப்ரமணியன். தங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது சுவாமி’’ என்று பதில் சொன்னார்.‘‘அது என் மூத்த மகன் இறந்த செய்தியே... படித்துப் பார்’’ என்றார். அதோடு தனக்குச் செய்தி சொன்ன சீடரிடம், ‘‘செய்ய வேண்டிய காரியங்களைச் செய்க’’ என ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு நகர்ந்தார்.நிலவொளியில் அமர்ந்து தியானத்தில் கரையத் தொடங்கினார் சுவாமிகள். மகனின் மறைவு அவர் மனதில் துளிகூட சலனத்தை ஏற்படுத்தாதது கண்டு, சீடர்கள் அமைதியாக நகர்ந்தனர்.

பாம்பன் சுவாமிகள் மனதில் அவ்வப்போது, ‘இந்த உலக வாழ்க்கை போதும்’ என்கிற எண்ணம் உதித்த வண்ணம் இருந்தது. ஒருநாள் கடற்கரையில் நின்று எல்லை தெரியாது விரிந்து பரந்து கடக்கும் கடலைப் பார்த்தார். அந்த நீலம் அவர் மனதை தெய்வீகத்தின் உச்சிக்கு நகர்த்தியது. பூமி தனக்கு அந்நியமாகிவிட்டது போல உணர்ந்தார். திடீரென தனியாகிவிட்டது போன்ற உணர்வு எழ, அவர் கண்களில் கண்ணீர் பொங்கியது. ‘‘குமரா... குகனே...’’ என அழைத்தார்.

‘‘இன்னும் எனக்கு இங்கு என்ன வேலை வைத்திருக்கிறாய் வேலவா?’’ எனக் கேட்டார். ‘‘மழையாய்ப் பொழியும் உன் அன்பில் நனைந்து கரைவது எனக்கு சம்மதம்தான்... ஆனாலும் எனக்கு இது போதவில்லை. இந்த வாழ்க்கை ஆறு, உன் கருணைக் கடலில் நிரந்தரமாய் கலக்கும் நாளுக்காக ஏங்கித் தவிக்கிறேன்’’ என்று நீலக் கடலைப் பார்த்துப் பேசினார். ‘‘நான் பேசுவது உனக்கு கேட்கிறதா? எங்கிருக்கிறாய்? நான் தனியே நிற்கிறேன். என் தவிப்பு உனக்குப் புரியவில்லையா?’’ எனக் கேவினார்.

சின்னப் புன்னகையோடு மலர்ந்தான் சிங்காரவேலன். கையில் வேலுக்குப் பதிலாக தண்டம் வைத்திருந்தான். மெல்ல அருகில் வந்து விரல் சேர்த்துக்கொண்டான். கன்னத்தில் வழிந்த கண்ணீரை ஒற்றை விரலால் துடைத்தான். ‘‘வா என்னுடன்...’’ எனக் கடல் மணலில் கால் புதைய கரம் கோர்த்து நடந்தான். ‘‘மொட்டவிழ்வது போலத்தான் ஞானம். அந்த தருணம் வந்தால் யாரால் தடுக்க முடியும். முக்தியும் அப்படியே. என்னைத் துளி நேரம் கூட பிரியாதிருக்க வேண்டும்...

அவ்வளவுதானே? பொறு. இன்னும் செய்ய வேண்டிய சில பணிகள் இருக்கின்றன. முடிந்ததும் வந்துவிடலாம். நாளை சிதம்பரம் செல்’’ என்றான் குகன். குமரனின் ஸ்பரிசம் அவரது வருத்தத்தை ஆனந்தமாக்கி இருந்தது. ரயிலேறி சிதம்பரம் சென்றார். இந்த முறை குயவன்பேட்டையில் தங்காமல் பின்னத்தூர் சென்றடைந்தார்.

அந்த அதிகாலையில் கூரையில் ஏறி நின்ற சேவலின் கூவலில் ஊர் விழித்துக்கொண்டது. விவசாயிகள் தங்களது எருதுகளை ஓட்டிக் கொண்டு தோளில் ஏர் சுமந்து வயல் காட் டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். பெண்கள் ஊர் பொதுக் கிணற்றில் தண்ணீர் இறைத்து, தலையிலும் இடுப்பிலுமாக சுமந்துகொண்டு நடந்தார்கள். தெருக்களில் தெளிக்கப்படும் பசுஞ்சாண வாசனையும் மெல்லிய குளிரும் சூழலை ரம்மியமாக்கின.

பாம்பன் சுவாமிகள் ஊரின் மையத்தில் இருந்த அரச மரத்தடிக்கு அருகே சென்று அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தபோது சூரியனின் பொன்கதிர் மெல்ல அவரது பாதங்களை வருடியது.
‘‘நம்ம ஊருக்கு யாரோ ஒரு மகான் வந்திருக்கார்’’ என காது காதாய் செய்தி பரவ, ஊர்ப் பெரியவர்கள் வந்து மரியாதையோடு கை கட்டி நின்றார்கள்.

அதில் ஒருவர் ரத்தினசாமிப் பிள்ளை. ரத்தினசாமிப் பிள்ளையைப் பார்த்த மாத்திரத்தில் சுவாமியின் முகத்தில் புன்னகை துளிர்த்தது. அருகில் அழைத்தவர், ‘‘ஐயா... இது அற்புதமான ஊர்.

 மாணிக்கவாசகேசுவரம் என்பது இந்த சிவத்தலத்தின் பெயர். மாணிக்கவாச சுவாமிகள் இலங்கை மன்னனின் கோரிக்கையை ஏற்று, பேசும் திறனற்ற அவனது பெண்ணுக்கு பேசும் வரம் அளித்த ஊர் இது. பிறவியிலேயே ஏற்பட்ட பின்னத்தை சிவனருளால் நீக்கியதால் இந்த ஊரை பின்னத்தூர் என்கிறோம். ஆயிரம் ஆண்டு வரலாறு இதற்கு உண்டு. ஈசனின் பூரண அருள் நிறைந்த இந்த ஊரில் சில காலம் தங்கி இருப்பதே தவம். அதனால்தான் இங்கு வந்தேன்’’ என்றார்.

‘நீங்கள் வந்தது எங்கள் பாக்கியம்’ என ஊர் கை கூப்பியது. ‘இந்த சாமியார் யார்? இவர் சொல்வது உண்மையா?’ ரத்தினசாமி மனம் கேள்வி கேட்டது. சோதிக்கவும் தயாரானார் ரத்தினசாமி. முருகன் சிரித்துக்கொண்டான். சோதனை என்னவாகும்?

வீடு கட்ட வரம் தந்தார்

‘‘எனக்கு சொந்த ஊர் பூதவராயன்பேட்டை. கட்டிடத் தொழில். ஒரு மகன், மகள்னு ரொம்ப சின்ன குடும்பம். திடீர்னு உடம்புக்கு முடியாம போச்சு. பார்க்காத வைத்தியம் இல்லை. தெரிஞ்சவங்க மூலமா கேள்விப்பட்டு சிதம்பரம், பாம்பன் சுவாமிகள் கோயிலுக்குப் போய், பௌர்ணமி பூஜையில கலந்துக்கிட்டேன். விபூதி வாங்கிப் பூசினேன். நல்ல மாறுதல் தெரிஞ்சது. தொடர்ந்து பௌர்ணமி பூஜையில கலந்துக்கிட்ட பிறகு, உடம்பு பூரணமா குணமாச்சு.

அதன் பிறகு பாம்பன் சுவாமிகளோட தீவிர பக்தனா மாறிட்டேன். பல பேருக்கு வீடு கட்டித் தர்றேன். எனக்கு சொந்தமா நல்ல வீடு இல்லையே. மழை பெய்தா வீடு ஒழுகி குழந்தைங்க தூங்கக் கூட முடியாம தவிக்கறாங்களேன்னு சுவாமிகிட்ட குறைப்பட்டுகிட்டேன். சில மாதங்கள்லயே புவனகிரி பக்கம் பெருமாத்தூர்ல இடம் வாங்கி வீடு கட்டும் அளவுக்கு வேலையும் வசதி வாய்ப்பும் அதிகமாச்சு. இந்த வாழ்க்கையும் வீடும் பாம்பன் சுவாமிகள் எனக்குப் போட்ட பிச்சை’’ என உருகுகிறார் திருமங்கை மன்னன்.

நல்வாழ்வு தரும் மந்திரம்


எங்குமொரு கருத்தனென விருக்குமுனைக்
குலக்கடவு ளென்றே கொண்ட
புங்கவர்க ளொருகாலும் வேறுதெய்வங்
குரங்கார்கள் புகரொன் றின்றி
மங்கலமுற் றுய்ந்திகத்தி லுயர்சீவன்
முத்திதன்னை மருவி நின்றே
துங்கபர முத்தியையு மேபெறுவ
ரிந்துளப்பூந் தொடைமார் போனே.
- பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ‘திருத்
தொடையல்’ பாடலைப் பாட, குகன் அருளால் நல்வாழ்வு கிடைக்கும்!

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்