அழியாத கோலங்கள்



என் தந்தை சீனிவாசன், பரமக்குடியின் பிரபல வக்கீல். அரசியலில் கிங் மேக்கர் என்று பெயர் வாங்கியவர். காமராஜரின் நெருங்கிய நண்பர். பரமக்குடி பக்கம் வரும் அரசியல், சினிமா பிரபலங்கள் தங்குவதற்காகவே மாடியில் மேல்நாட்டுக் குளியல், கழிப்பறை வசதியோடு அறை கட்டி வைத்திருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகிய கலைஞர்கள் உலகநாயகன் தந்தை வீட்டில்தான் தங்குவார்கள்.

சீனிவாச அய்யங்காரின் மற்ற வாரிசுகள் மனம் புண்படும் என்ற ஒரே காரணத்தால், நான் என் ஒன்பது வயது வரை, அனா ஆவன்னா கூட தெரியாத, பள்ளிக்கூடம் போகாத, தின்று கொழுத்த தடியனாய் வாழ்ந்தேன் என்பதை முழுமையாக சொல்லாமல் விட்டு விடுகிறேன். 1939ல் எனக்கு வயது 9; என் தம்பி சந்திரஹாசனுக்கு வயது மூன்றரை. இருவரையும் அப்பாவின் குமாஸ்தா ஓ.பி.நாராயண அய்யர்தான் யாதவா ஸ்கூலுக்கு படிக்க வைக்கக் கூட்டிப் போனார். 

பிற்காலத்தில் நடிகை சுஹாசினி படித்ததும் அதே யாதவா ஸ்கூலில்தான். யாதவா ஸ்கூலின் தலைவர் ‘நொண்டி வாத்தியார்’ என்று பெயர் பெற்றவர். என்னிடமும், தம்பி சந்திரஹாசனிடமும் அவர் ஒரு நேர்முகத் தேர்வு நடத்தினார். தம்பி நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியிருப்பார் போல் இருக்கிறது! எங்கப்பா என்னைப் பற்றி அடிக்கடி சொல்வார், ‘‘இந்தப் பயலுக்கு ஒரு எழவும் தெரியாது’’ என்று! அது என் மூளையில் ஆழமாக ராமாயணம், மஹாபாரதம் போல் பதிந்து விட்டது. 

வாத்தியார் கேட்டார், ‘‘ஒன் பேரு என்னப்பா?’’
‘‘தெரிரிரிரியாது...’’
‘‘ஏண்டா, ஒனக்கு என்னடா வயசாச்சு?’’
‘‘தெரிரிரிரிரிரியாது...’’
‘‘அடே! உங்க அப்பா பேரு என்னடா?’’
‘‘தெரிரிரிரிரிரியாது!’’

அந்த வாத்தியார் தந்தையாரின் குமாஸ்தா ஓ.பி.நாராயண அய்யரிடம், ‘‘பெரிய பையன் ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கு. படிப்பு வருகிற மாதிரி தெரியலை’’ என்று சொல்லி அனுப்பி விட்டார். 

அந்தக் காலத்தில் சேட்டைக்கார பையன்களை காலில் ஒரு கட்டையும் விலங்கும் போட்டுத்தான் மதிய உணவுக்கு வீட்டுக்கு அனுப்புவார்கள். தம்பி சந்திரஹாசன் கட்டையும் விலங்குமாக மறுநாள் வீட்டுக்கு வந்ததும்தான் எனக்கு என் முட்டாள்தனத்தின் மகிமை தெரிந்தது.

பரமக்குடியில் நான் பின்னாளில் சேர்ந்த பள்ளிக்கூடம், ராஜா சேதுபதி போர்டு ஹைஸ்கூல். என் தந்தையார் ஒரு காந்தியவாதி. படிக்கும்போது சிறை சென்றவர். ஏதோ ஒரு கெட்டிக்காரத்தனத்தில் ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்று ஒரு இரட்டை அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர் என்பது என் அபிப்ராயம்.

ஜஸ்டிஸ் பார்ட்டி தொடர்புள்ள, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கப்பம் செலுத்தியதால் கம்யூனிஸ்ட் தேசியவாதிகளால் ‘பூட் லிக்கர் ஆஃப் தி பிரிட்டிஷ் கவர்ன்மென்ட்’ என்று பெயர் பெற்ற ராமநாதபுரம் ராஜா நாகநாத சேதுபதியுடன் படித்து டென்னிஸ் விளையாடி, அதே நேரம் காங்கிரஸ் கட்சியில் ஜில்லா போர்டு தேர்தலில் வெற்றி பெற்று, ராமநாதபுரம் ஜில்லா ஆரம்பப் பள்ளிகள் மேற்பார்வைப் பொறுப்பில் இருந்தவர்.

பின்னாளில் ராஜாஜி மந்திரிசபையில் ராமநாதபுரம் ராஜா மந்திரியாக அமர்ந்தார். இவருக்குக் கிடைக்க வேண்டிய மந்திரி பதவியைத்தான் ராஜாஜியிடம் சிபாரிசு செய்து ராமநாதபுரம் ராஜாவுக்குக் கொடுக்கச் செய்தார் என்று பேசிக் கொள்வார்கள். 1957 தேர்தலில் பரமக்குடி தொகுதியில் நிற்க எங்கள் தந்தையார் டி.சீனிவாசனை தேர்வு செய்த காங்கிரஸ் மேலிடம், பிறகு பழைய எம்.எல்.ஏ பெயரையே அறிவித்தது.

 ‘பரமக்குடியில் சீனிவாசனை சட்டசபை உறுப்பினர் ஆக்கினால், அவர் ராமநாதபுரம் ராஜாவை முதலமைச்சர் ஆக்கும் வேலையில் ஈடுபடுவார்’ என்று பரவலாக டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டதே இதற்குக் காரணம். ஆனால் பரமக்குடியில் என் தந்தை, தன் ஜூனியர் வக்கீல் ராமச்சந்திரனை சுயேச்சையாக நிற்க வைத்து காங்கிரஸைத் தோற்கடித்தார்.

அதற்காக அவர் ஐந்து வருடம் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அடுத்து வந்த 1962 தேர்தலில் என் தந்தையின் மைத்துனர் சீ.சீனிவாச ஐயங்கார் என்கிற அட்வகேட்டை வேட்பாளராக காமராஜர் தேர்ந்தெடுத்தார். இரண்டு சீனிவாசன்களுக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் ஓட்டளித்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. இவை பின்னால் நடந்தவை.   
         
இந்த 9 வயது சாருஹாசன்... ஜில்லா போர்ட் வைஸ் பிரஸிடென்ட் மகன், உடல்நலமற்ற பையன், ஹெட் மாஸ்டர் கிருஷ்ண நாயர் நண்பர் மகன், உள்ளூர் சர்க்கார் வக்கீல் கோபால அய்யங்கார் பேரன் போன்ற அடைமொழிகள் எல்லாம் பிஹெச்.டி, எம்.ஆர்.சி.பி, எஃப்.ஆர்.சி.எஸ் பட்டங்களை விட ஒரு மில்லி மீட்டர் உயரம் பரமக்குடி யுனிவர்சிடியில் அதிகமாக இருந்திருக்கலாம்...

 இல்லாவிட்டால் ஒரு அனா ஆவன்னா கூட தெரியாத கொழுத்த பூனைக்கண் குட்டையனை ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்வார்களா? பையன்கள் எல்லோரும் கூட்டமாகச் சேர்ந்து கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்காததால் ‘பூனைக்கண் குட்டையன்’ என்ற பெயர் வெகு நாள் எனக்கு தங்கிவிட்டது.

அந்த வருடம்தான் ராஜா சேதுபதி ஹைஸ்கூலுக்கு ஒரு புதிய மெஷின் வந்தது. ‘சைக்ளோஸ்டைல்’ என்ற முறையில் சங்கரசுப்பு வாத்தியார் தான் எழுதிய ஒரு கேள்வித்தாளை அந்த மெஷினில் 30 நகல்களாக்கி ஒரு பரீட்சை வைத்தார். பள்ளியில் சேர்ந்த ஒரு மாதத்தில் என் முன்னேற்றமே, அனாவிலிருந்து அக்கன்னா வரை காப்பி அடிக்க கற்றுக் கொண்டதுதான்!

முதல் பரீட்சையில் அப்படியே போட்டோ காப்பி போல் கேள்வித்தாளையே திரும்ப எழுதி வைத்தேன். மற்ற மாணவர்களுக்கு 8/10, 7/10, 6/10, 5/10 என்று ஒரு தாராள மனப்பான்மையுடன் மதிப்பெண்களை அள்ளி வீசிய கிளாஸ் டீச்சர் சிதம்பர சுப்பு அவர்கள், எனக்கு மட்டும் ஒரு முட்டை போட்டிருந்தார்.

வெள்ளைக்காரன் ஜெராக்ஸ் மெஷினை கண்டுபிடிக்கு முன் அதன் வேலையைத் திறம்படச் செய்த இந்த இளம் விஞ்ஞானி சாருஹாசனை அந்த வாத்தியாரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தலையில் இரண்டு குட்டு குட்டி, ‘‘போய் அப்பாவிடம் காட்டி கையெழுத்து வாங்கிட்டு வாடா!’’ என்று உத்தரவு போட்டார்.   

இவரிடம் வாங்கிய குட்டை இன்னொரு முறை என் அப்பாவிடம் வாங்கக்கூடாதே! ‘என்ன செய்யலாம்’ என்று யோசித்தபோது அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. கணித மேதை ராமானுஜன், என் அம்மாவுக்கு தூரத்து உறவினராம். வீட்டிலே அம்மாதான் கணக்கிலே புலி; அப்பா கணக்கிலே வெறும் ‘புளி’யாம்.

ராமானுஜனை வணங்கி, மடிக்கப்பட்ட என் விடைத்தாளின் வெளிப் பக்கத்தை ஒரு ராமானுஜனின் வாரிசாக சிந்தித்து, (ஒன்று விட்டுத்தான், நேரடி இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்) உற்றுப் பார்த்தேன். 0/10 என்பது தெரிந்தது. பென்சிலால் ஒரே ஒரு கோடுதான் போட்டேன்... அது 10/10 என ஆயிற்று. 

எனக்கு நானே ‘சபாஷ்’ சொல்லிக் கொண்டு, பெரிய கட்சிக்காரர்களிடம் அப்பா பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நீட்டினேன். அவர் உள்ளே திறந்து பார்க்காமல் எழுதிய ஓர் ‘வெரி குட்’டை வாங்கிக் கொண்டேன்.

அதுவரை எனக்கு ஆவியாக இருந்து உதவிய கணித மேதை எங்கோ காணாமல் போய்விட்டார். அதனால், இந்த ‘வெரி குட்’டை வாத்தியாரிடம் காட்டக் கூடாது என்பதையோ, அல்லது நான் போட்ட அந்த 1 என்பதை எச்சிலைத் தொட்டாவது அழித்து விட வேண்டும் என்பதையோ சொல்லாமலேயே கணித மேதை மறைந்துவிட்டார்.

‘வெரி குட்’டை வாங்கிப் பார்த்த வாத்தியார், என்னை பெஞ்ச் மேலேறி நிற்க வைத்து, ‘‘இந்தப் பயல் கள்ள நோட்டு அடித்தோ, அல்லது ஃபோர்ஜரி செய்தோ கண்டிப்பாக ஜெயிலுக்குப் போவான்’’ என்று ஆசீர்வாதம் செய்தார்.

பின் குறிப்பு: மேற்படி சிதம்பர சுப்பு வாத்தியாரின் பேரப் பிள்ளை அதன்பின் என் மருமகன் மணிரத்னத்தின் உதவியாளராக வேலை பார்த்தபோது இந்தக் கதையைக் கேட்டுவிட்டு ‘‘வெளியே யார்கிட்டயும் சொல்லாதீங்க... வெட்கக்கேடு!’’ என்று சொல்லிவிட்டுப் போய் தெலுங்கிலே ஏதோ வேறு புனைப் பெயருடன் பெரிய டைரக்டர் ஆகிவிட்டாராம்!வாத்தியார் என்னை பெஞ்ச் மேலேறி நிற்க வைத்து, ‘‘இந்தப் பயல் கள்ள நோட்டு அடித்தோ, அல்லது ஃபோர்ஜரி செய்தோ கண்டிப்பாக ஜெயிலுக்குப் போவான்’’ என்று ஆசீர்வாதம் செய்தார்.

(நீளும்...)

சாருஹாசன்