சண்டை



‘‘அதென்னமோ மீனாச்சி, உனக்கு வாய்ச்ச மருமக, தங்கம். என் மருமவதான் சண்டைக்காரி’’ என்று ஆரம்பித்தாள் பக்கத்து வீட்டு சுப்பம்மா.மீனாட்சி புன்னகைத்தாள். ‘‘எதுக்கு சண்டை வருதுன்னு யோசி சுப்பு... சண்டையே வராது!’’‘‘ ‘கோயிலுக்குப் போய்ட்டுவர வேண்டியதுதான, ஏன் வீட்டுலயே அடைஞ்சு கெடக்கீங்க’ங்குறா என மருமவ. வீட்ல நான் இருக்குறது புடிக்கலைன்னுதானே அர்த்தம்?’’ - சுப்பம்மா வாதிட்டாள்.

‘‘நமக்கே வயசாச்சு. கோயிலுக்குப் போறதால புண்ணியம் கிடைக்கும். காலார நடந்தா உடம்புக்கும் நல்லதுதானே. அதனால அவ சொல்லியிருக்கலாமே!’’
‘‘ ‘மட்டன், சிக்கன்லாம் அளவோட சாப்பிடுங்க. ஒரேயடியா முழுங்காதீங்க’னு அதட்டுறா...’’‘‘சரிதானே? வயசான பிறகு கொழுப்பையும் குறைக்கணுமே!’’

‘‘எனக்கு காபியில அரை சீனிதான் போடுறா. காபி கசப்பா இருக்கு...’’‘‘சக்கரை நோயில இருந்து தப்பிக்கத்தான் அது!’’‘‘அதெல்லாம் சரி... ‘இங்கேயே கிடைக்காம உங்க மூத்த மகன் வீட்டுக்குப் போக வேண்டியதுதானே?’னு ஒருநாள் கேக்குறா.’’

‘‘அதுல என்ன தப்பு? மூத்தவனையும் அவன் புள்ளைகளையும் அடிக்கடி நீ போயி பாத்தாத்தான், அவங்களுக்கும் உன் மேல் பாசம் வரும். கொஞ்சம் யோசிச்சுப் பாரு. எதையும் குதர்க்கமா எடுக்காதே. உன் வீட்டிலும் சண்டையே வராது!’’ - தெளிவுபடுத்தி அனுப்பினாள் மீனாட்சி.                              

மு.திருஞானம்