கத்தி



மிக எளிய மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கிராமங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி அதிகார வர்க்கங்களின் துணை கொண்டு குதறிப் போடுகின்றன என்பதை கமர்ஷியல் மசாலா தடவிச் சொல்வதுதான் ‘கத்தி’. இரட்டை விஜய்யை வைத்துக்கொண்டு, அக்கிரமத்திற்கு துணை போகிறவர்களை வேட்டையாடுவதுதான் நீளும் ‘கத்தி’ க்ளைமாக்ஸ். வெறும் ஆக்ஷனும், காமமும், கேளிக்கையும் மட்டுமே அதிகம் புழங்கும் தமிழ் சினிமாவில், விழிப்புணர்வுக்கு வரவேற்பு குடை விரித்ததற்கு ஏ.ஆர்.முருகதாஸுக்கு பூங்கொத்து!

பக்கா ‘டபுள்’ கேரக்டர்களில் விஜய் கச்சிதம். சின்ன திருட்டுக்களைச் செய்துவிட்டு சிறையிலிருக்கும் விஜய்... சமுதாயத்திற்காக தன்னை முன்நிறுத்தும் விஜய்... இப்படி இரண்டு வேறுபட்ட வடிவங்களைக் கொண்டு வந்ததால் கதையில் கவனம் சேர்கிறது. தோற்றத்தில் மகா வித்தியாசங்கள் இல்லையென்றாலும், திருடன் விஜய்க்கும், மக்களுக்காக உழைக்கும் விஜய்க்கும் கேரக்டரை வித்தியாசப்படுத்தி அட்டகாசமாக உயிர் கொடுப்பதில் அள்ளுகிறது விஜய்யின் மேனரிசங்கள்.

நிஜமாகவே விஜய்யின் கேரியரில் ஒரு நல்ல படம். ஜாலியாக சிறையில் இருக்கிற காலம் தொட்டு, சமந்தாவை முதல் பார்வையிலேயே ‘ரூட்’ விட்டு பின்தொடர்வது, இறுதி யில் கிராமத்து மக்களுக்காகப் பொங்கி எழுவது வரை, விஜய் டிஸ்டிங்ஷனில் தேர்வாகிறார்.ஆரம்பக் காட்சியில் போலீஸாரோடு சேர்ந்து விஜய் தப்பிக்கிற காட்சி அநியாயப் பூச்சுற்றல் என்றாலும், அதை நம்ப வைப்பதில் ஜெயிக்கிறார் இயக்குநர். எந்த சந்தேகம் வந்தாலும் பரபர திரைக்கதையில் அதை நினைவில் வைக்காமல் மறக்கடிக்கிறது முருகதாஸின் இயக்கம்.

சமந்தா... செம ஜில்! ஆட்டம் பாட்டங்களுக்கும் கொஞ்சம் காதலுக்கும் மட்டுமே தொட்டுக்கொள்கிற இடத்தில் இருக்கிறார். ஆனால், ஆலாய்ப் பறக்கிற திரைக்கதையில் அவருக்கு இருக்கிற கொஞ்சமே கொஞ்சம் இடத்தில் உற்சாகமாய் நிறைகிறார் அவர். ‘செல்ஃபி புள்ள...’ பாடல் அந்த அசத்தல் அழகிக்கு டெடிகேட்!ஹீரோ லுக்கோடு வில்லத்தனம் காட்டுகிறார் நீல் நிதின் முகேஷ். தமிழ் முகம் அவருக்கு இல்லாத காரணத்தால் தப்பிக்கிறார் விஜய். கதைப் போக்குடன் சேர்ந்து இயங்கும் வசனங்களில் உயிர் காட்டுகிறார் இயக்குநர்.

மீடியா முதற்கொண்டு, விஜய்யே விளம்பரத்தில் நடித்த கோலா வரை எதையும் தாக்குவதில் விட்டு வைக்கவில்லை இயக்குநர். ‘‘என் பசி தீர்ந்த பிறகு நான் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது’’ என கம்யூனிசத்திற்கு ‘சுருக்’ விளக்கம் கொடுக்கும் இடத்தில், நச்! காமெடியில் சதீஷ் இன்னும் தேற வேண்டும். அவர் வேலையையும் சேர்த்து விஜய் பார்த்து விடுவதால் அட்மாஸ்பியர் சமாளிக்கப்படுகிறது.

பின்பகுதி கதைக்கு நம்மைத் தள்ளுவதற்குள் முன்பகுதியில் கொஞ்சம் அலுப்பைத் தருகிறார் இயக்குநர். ஆழ ஆழக் குத்திய பிறகும் விஜய் உயிர் துறக்காமல் இருப்பது, இப்போதைய ஆக்ஷன் இலக்கணப்படி ரொம்ப ஓவர்.

அதேபோல, நினைத்த நேரத்திற்கு கைதிகள் தப்பிப்பதும், அத்தனை எதிரிகளையும் தனி ஆளாய் விஜய் சமாளிப்பதும் டூ மச்! அனிருத் பாடல்கள் புது தினுசு. ‘நீ யாரோ...’, ‘பக்கம் வந்து...’ பாடல்கள் மிளிர்கின்றன. ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா, கண்ணுக்கு அழகு. இந்தக் ‘கத்தி’, விஜய்யின் மகுடத்தில் ஓர் இறகு!

- குங்குமம் விமர்சனக் குழு