கர்வம்



‘‘இருந்தாலும் நம்ம அடையாறு பிராஞ்ச் மேனேஜர் பன்னீர் செல்வத்துக்கு ரொம்பத் திமிர்தான். நம்ம கம்பெனில இருவது வருஷமா வேலை பாக்கறான். போன வாரம் நம்ம அறுபதாம் கல்யாணத்துல எல்லா மேனேஜர்களும் ‘பொக்கே’ கொடுத்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குறாங்க... இவன் மட்டும் விறைச்சுக்கிட்டுப் போறானே!’’ - ஆதங்கத்தோடு சொன்னாள் முதலாளியம்மா.

‘‘அது மட்டுமில்ல... அவனோட புது வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு அப்பாவை ‘பெரிய முதலாளி’ங்கற மரியாதையிலயும் கூப்பிடல. வேலை கத்துக் குடுத்த ‘குரு’ங்கற முறையிலயும் கூப்பிடல!’’ - முதலாளி யின் மகன் தன் பங்குக்கு புலம்பினான்.

‘‘ச்சே... நன்றி கெட்டவன். போன தடவை அவன் கொடுத்த ராஜினாமாவை நீங்க வாங்க மறுத்துட்டீங்க. இந்த முறையும் வேலையை விட்டுடப் போறதா சொன்னானாமே? பேசாம அனுப்பிடுங்க. நமக்கு மரியாதை முக்கியம்!’’ - முதலாளியம்மா கண்டிப்புடன் சொன்னாள்.‘‘அவன் யாரையும் மதிக்காதது திமிர்ல இல்ல... இந்த இருவது வருஷத்துல எந்தக் கையாடலும் பண்ணல... கமிஷன் அடிக்கல... ஏன், லீவோ, பர்மிஷனோ கூட போட்டதில்ல! அந்த ‘நேர்மையின் கர்வம்’தான் அவனை குனிஞ்சு, வளைஞ்சு வணக்கம் போட விடுறதில்லை’’ - பெரிய முதலாளி சந்தோஷமாய் சொல்ல, பன்னீர் செல்வம்... முதலாளியம்மா மனதினுள் விஸ்வரூபமாய் உயர்ந்தான்.

பிரகாஷ்