சகுனியின் தாயம்



நாடி, நரம்புகள் அதிர, செய்வதறியாமல் பைத்தியம் பிடித்தது போல் தேன்மொழி அமர்ந்திருந்தாள். நடந்த ரத்தக் களறி அனைத்துக்கும் அவளே சாட்சி. அவள் கண் முன்பாகத்தான் அனைத்தும் நடந்தன.

என்ன நடக்கிறது இங்கே..?புரியவில்லை. கண்ணீர் வழிய சுற்றிலும் பார்த்தாள். தீப்பிழம்பாக கண்கள் சிவக்க, தோழர் தமிழரசன் மடமடவென்று எதையோ எழுதிக் கொண்டிருந்தார். ரங்கராஜன் உடனுக்குடன் அதை கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்தபடி இருந்தான். எடுத்த புகைப்படங்களை கதிர் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

‘‘தோழர், இது சரியான்னு பாருங்க...’’ரங்கராஜன் எடுத்த பிரின்ட் அவுட்டை தேன்மொழி படிக்கத் தொடங்கினாள். சில மணி நேரங்களுக்கு முன் நடந்து முடிந்த சம்பவத்தின் நேரடி ரிப்போர்ட் அது. இளவரசனின் கிராமத்துடன் சேர்ந்து தீக்கிரையான மூன்று கிராமங்கள் குறித்த விவரங்கள் கொந்தளிப்புடன் பதிவாகியிருந்தன.இமைகள் நடுங்க அதை வாசிக்கத் தொடங்கினாள்...

உயிரை மட்டும் மிச்சம் வைத்து விட்டு, வாழ்க்கையை உருத் தெரியாமல் அழிப்பது என்பதற்கு நடைமுறை எடுத்துக்காட்டுதான், நவம்பர் 7ம் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தின் 3 கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வெறியர்கள் நடத்தியிருக்கும் வன்கொடுமைத் தாக்குதல். தர்மபுரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இளவரசனின் கிராமம். நக்சல்பாரி இயக்கத்தின் அரசியல் செல்வாக்கு காரணமாக, சாதிவெறி தலையெடுக்காமல் தடுக்கப்பட்டிருந்த மாவட்டம் தர்மபுரி. தோழர் பாலன் தலைமையில் தனிக்குவளை முறை போராடி ஒழிக்கப்பட்ட இடம். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அடிமைத் தொழில்கள் ஒழிக்கப்பட்டிருப்பது அந்த வட்டாரம்.

நக்சல்பாரி இயக்கத்தின் முன்னணித் தியாகிகளான தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோரது நினைவுச் சின்னம் நிறுவப்பட்டிருக்கும் இடமும், தமிழகத்தில் நக்சல்பாரி அமைப்புகள் செல்வாக்குப் பெற்றிருந்த ஊருமான அந்த நிலம், இன்று ஆதிக்க சாதிவெறியின் அடையாளமாகியிருக்கிறது. நக்சல்பாரி இயக்கம் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, சாதி அமைப்புகள் என்னும் நச்சுப் பாம்புகள் திட்டமிட்டுத் தூண்டி வளர்க்கப்பட்டதன் விளைவே, நவம்பர் 7 அன்று நடந்திருக்கும் சாதி வெறித் தாக்குதல்.

பைக், வேன், டெம்போ, மினி லாரியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திரண்டுள்ளனர். ஒரு கும்பல் சடலத்தின் அருகில் இருக்க, இன்னொரு கும்பல் மரங்களை அறுத்துப் போட்டுச் சாலைகளை மறித்தது. மீதமுள்ளவர்கள் நானூறு, ஐநூறு பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து அருகருகே இருந்த மூன்று கிராமங்களுக்குள் வெறிக் கூச்சலுடன் புகுந்திருக்கின்றனர்.

கடப்பாரை, சம்மட்டி, கோடாரி, பெட்ரோல் கேன், பெட்ரோல் பாம் பாட்டில்களுடன் பாய்ந்துள்ளனர். ஒவ்வொரு வீடாகச் சென்று, கதவினை உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை நொறுக்கி, நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். துணிமணிகள், புத்தகங்கள், குடும்ப அட்டைகள், சான்றிதழ்கள், நிலப்பத்திரங்கள், மெத்தை, சோபா போன்றவற்றைக் கிழித்தெறிந்து மொத்தமாக எரித்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர்களைக் கழற்றி தாங்கள் கொண்டுவந்த வாகனங்களில் ஏற்றியுள்ளனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெயின்ட் அடிக்கும் ஸ்ப்ரேயரில் பெட்ரோலை நிரப்பி வீடு முழுவதும் பீய்ச்சி அடித்துள்ளனர். பிறகு வெளியிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசித் தீக்கிரையாக்கியுள்ளனர்.

ஓட்டு வீடுகளின் மேலே ஏறி, பெரிய கல்லால் அவற்றினை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். மின்சார மற்றும் தண்ணீர் பைப் லைன்களையும், மீட்டர் பெட்டிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். வெளியே நின்றிருந்த சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

உடைக்க முடியாத பீரோக்களையும், ஆடுகளையும் தங்களது வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். இளவரசனின் கிராமத்திலுள்ள கொடகாரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 5 கிலோ தங்கம் மற்றும் 22 கிலோ வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகளை, அவை பாதுகாக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்துக் கொள்ளையடித்திருக்கின்றனர். மூன்று கிராமங்களிலுமாக மொத்தம் முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும், இரு நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள்களும், சுமார் முப்பதுக்கும் குறைவான நான்கு சக்கர வாகனங்களும் உருத்தெரியாமல் எரித்துச் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அருகிலிருக்கும் பல ஊர்களிலிருந்து இதற்காக சாதி வெறியர்கள் திரட்டப்பட்டிருக்கின்றனர். நெடுஞ்சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிலிருந்து பெட்ரோலும், மூன்று ஊர்களிலும் இருக்கும் ரேஷன் கடைகளிலிருந்து மண்ணெண்ணையும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

தாக்குதல் தொடங்கிய நேரம் மாலை 4 மணியாதலால், ஊரில் ஆண்கள் இல்லை. பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு கரும்புக்காட்டுக்கு உயிர் தப்பி ஓடி, இரவு முழுவதும் அங்கேயே ஒளிந்திருக்கின்றனர். தீயும் புகையும் சூழ்ந்து மூச்சடைத்துப் போன குழந்தைகளை, மற்ற குழந்தைகளின் சிறுநீரைக் குடிக்க வைத்து பெண்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்.சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளா தார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என உறுதியாகச் சொல்கிறார்கள்.

இளவரசன் பிறந்த கிராமத்திலும், அதனை ஒட்டி இருக்கும் காலனியிலும் மாலை நான்கு மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். மூன்றாவது கிராமத்தில் இரவு 11 மணி வரை தொடர்ந்து வீடுகளை எரிப்பதும், பொருட்களைக் கொள்ளையடிப்பதும் நடந்துள்ளது.

ஒரு பக்கம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு குழு ரம்பத்தால் மரங்களை அறுத்து தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில் தடுப்பரண்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் காவல் துறையையும் தீயணைப்புத் துறையையும் நெருங்க விடாமல் செய்ததுடன், உள்ளே நுழைய முயன்ற ஒரு சில காவல்துறை வாகனங்களையும் கற்களை எறிந்து தாக்கியிருக்கிறார்கள்.

நடக்கவிருக்கும் தாக்குதல் பற்றி போலீசுக்கு ஏற்கெனவே தெரியும். இளவரசனின் கிராமத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் நக்சல் பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீசாரிடமும், இன்ஸ்பெக்டரிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக புகார் செய்து, தாக்குதலைத் தடுக்குமாறு மன்றாடியிருக்கின்றனர். ஆனாலும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. அழிவு வேலையைக்கூட நுணுக்கமாகவும் வக்கிரமாகவும் நிதானமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள்.

தரைக்கு டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடுகளில் அவை தூள் தூளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. மாடி வீட்டின் மொட்டை மாடி உட்பட அனைத்தும் சேதமாக்கப்பட்டு, சுவர்களும் கூரையும் பிளக்கப்பட்டிருக்கின்றன. பெட்டிக்கடை, சவுண்டு சர்வீஸ், மரச்சாமான் வியாபாரம், பாத்திர வியாபாரம் போன்ற தொழில் செய்வோரின் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் மகளின் திருமணத்திற்காக யார் யாரெல்லாம் நகைகளையும், சீதனப் பொருட் களையும் வாங்கி வைத்திருந்தார்களோ... அவை அனைத்தும் குறி பார்த்துக் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இந்த தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டதல்ல. மிகவும் நிதானமாக சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆதிக்க சாதியினரைத் திரட்டி, ஆயுதங்கள் - எரிபொருள் ஆகியவற்றைக் கையாளும் முறை பற்றி சொல்லிக் கொடுத்து, திருட்டில் கைதேர்ந்தவர்களை வைத்துக் கொள்ளையடிக்கவும் ஏற்பாடு செய்து, உயிர்ச் சேதத்தை மட்டும் தவிர்த்து நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு வெளிநாட்டு நபர் கடத்தப்பட்டதற்காக நடந்த தாக்குதல் அல்ல. போலவே ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணும், தாழ்த்தப்பட்ட சமூகத்து ஆணும் காதலித்து மணந்ததால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடும் அல்ல.

பதிலாக, நீண்ட காலமாக கனன்று கொண்டிருந்த சாதி வெறிதான் இந்த வெறியாட்டத்துக்கு அடிப்படைக் காரணம். இப்பகுதியில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் கோவையிலும், திருப்பூரிலும், பெங்களூருவிலும் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் ஓரளவு வசதிகளோடு வாழ்ந்துள்ளனர்.

தங்களிடம் கை கட்டி நிற்காமல், சுயமாக அவர்கள் அடைந்திருந்த வாழ்க்கைத் தரம்தான் சாதி வெறியர்களின் ஆத்திரத்தில் எண்ணெய் வார்த்திருக்கிறது. தங்களுடைய வீட்டில் சாப்பிட்டவர்கள்தான் வீட்டின்மீது பெட்ரோல் குண்டுகளை எறிந்ததாகவும், காலையில் தன்னிடமிருந்து பைக்கை வாங்கி ஓட்டியவன், மாலையில் அதனை எரித்திருப்பதாகவும் கூறுகின்றனர் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்க்கைத் தரம் சற்று மேம்பட்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காமல், வயிறெரிந்து கொண்டிருந்த ஆதிக்க சாதிவெறி, தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தருணத்திற்காக காத்திருந்ததையே இந்த வெறியாட்டம் காட்டுகிறது. கடுமையாக உழைத்துச் சேர்த்த பணத்தில் அம்மக்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக எட்டியிருந்த பல வசதிகளை, ஒவ்வொன்றாகத் தேடிக் கண்டுபிடித்து அழித்திருக்கின்றனர்.

ஓலைக்குடிசை, அலுமினியப் பாத்திரம் என்ற வாழ்நிலைக்கு மீண்டும் அம்மக்களைத் துரத்த வேண்டும் என்ற வன்மத்தை மனதிற் கொண்டுதான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களில் ஒன்றில் இருக்கும் அருந்ததியர் காலனிக்கு நிலம் ஒதுக்கீடு செய்தபோது, காலனி வந்தால் தங்கள் நிலத்துக்கு சுற்றித்தான் செல்லவேண்டும் என்பதால், அங்கு வீடுகள் கட்டக்கூடாது என்று ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். எதிர்ப்பை மீறி இடம் ஒதுக்கப்பட்டு காலனி வீடுகள் கட்டப்பட்டு விட்டன. அந்த வெறியில், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, இப்போது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் ஆத்திரம் கொள்வதற்கு அவரவர்க்கு உரிய காரணங்கள் இருந்திருக்கின்றன. குறிப்பான காரணம் ஏதும் இல்லையென்றாலும், தங்களைச் சார்ந்திராமல், சொந்தக்காலில் அம்மக்கள் நிற்பதும், கௌரவமான வாழ்க்கை வாழ்வதுமே ஆத்திரம் கொள்ளப் போதுமான காரணமாக இருந்திருக்கிறது. இளவரசன் - திவ்யா காதல் திருமணமும், ஸ்காட் வில்லியம்ஸ் என்ற ஜெர்மானியனை அவர்கள் கடத்தியிருப்பதாக எழுந்திருக்கும் தகவலும் இத்தாக்குதலுக்கான ஒரு முகாந்திரம் மட்டுமே.

இந்தச் சாதிவெறியர்கள் பெரும் நிலவுடைமையாளர்கள் இல்லை என்றபோதிலும், இவர்கள் ஒரு புதிய வகை ஆதிக்க சக்திகள். இட ஒதுக்கீட்டுக்காகப் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றும்; சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அரச சாதியினர் என்றும் தம்மை அழைத்துக் கொள்ளும் ஆதிக்க சாதிகளில் தனியார்மய - தாராளமயக் கொள்கைகள் புதிய ஆதிக்க சக்திகளை உருவாக்கியிருக்கின்றன.

சுயநிதிக் கல்லூரி, ரியல் எஸ்டேட், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜென்சிகள், செக்யூரிட்டி ஏஜென்சிகள், கந்துவட்டி பைனான்ஸ், பிற ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொழுத் திருக்கும் இந்தச் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள்தான், சாதிக்கட்சிகளின் தூண்கள். தத்தம் சாதிகளில் தமக்குத் தேவைப்படுகின்ற சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டு, அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள்தான், இப்போதைய சாதிவெறி நடவடிக்கைகளின் பின்புலத்தில் இருப்பவர்கள்.

சாதி, உட்சாதி அடையாளங்களை அங்கீகரிக்க வேண்டுமென்றும், கம்யூனிஸ்டுகள் அவற்றை அங்கீகரிக்க மறுப்பதாகவும் கூறி கம்யூனிச எதிர்ப்பு அரசியலை முன் நின்று நடத்தியவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். அடையாள அரசியல் என்பது சாதி அடையாளங்களை உறுதிப்படுத்தவும், சாதி - உட்சாதிப் பிளவுகளை அதிகப்படுத்தவும்தான் பயன்பட்டிருக்கிறது. அது அவ்வாறு மட்டுமே பயன்பட முடியும். சாதி என்ற நிறுவனமே ஜனநாயகத்துக்கு எதிரானது.

சாதியின் அடிப்படையில் திரட்டப்படும் மக்களை வைத்து சாதி ஒழிப்பையோ, ஜனநாயகத்தையோ ஒருக்காலும் கொண்டுவர முடியாது. எந்த முற்போக்கான கோரிக்கையையும் சாதிக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர் மத்தியிலான சாதிகள் - உட்சாதிகளுக்கும் இது பொருந்தும்.

நக்சலைட் அரசியலின் செல்வாக்கு இருந்தவரை சாதி ஆதிக்கம் இல்லை என்பது, பாதிக்கப்பட்ட கிராமங்களின் - ஊர்களின் மக்கள் மட்டுமின்றி, முதலாளித்துவ ஊடகங்களும் இன்று ஒப்புக்கொள்ளும் உண்மை. இது வெற்றுப் பெருமை அல்ல, வர்க்க அரசியலின் வலிமை. புரட்சிகர அரசியலை நசுக்கி விட்டு, அந்த இடத்தில் சாதிய அரசியலையும், ஓட்டுச்சீட்டு பிழைப்புவாதத்தையும் மாற்றாக நுழைத்ததன் விளைவுதான் இந்த சாதிவெறியின் செல்வாக்கு.

சாதி வெறியர்களுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணமும், நீதியும் கிடைக்கப் போராடுகின்ற அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் தலையெடுத்து வரும் சாதிய அரசியலை நேருக்கு நேர் மோதி முறியடிப்பதும் அவசரக் கடமையாக இருக்கிறது...தோழர் தமிழரசன் எழுதிய அறிக்கையைப் படித்து முடித்ததுமே தேன்மொழி அந்தக் கேள்வியை கேட்டாள்.
‘‘தாக்குதல் நடத்தினது போலீஸ்தானே?’’

‘‘இல்ல. ஆதிக்க சாதி வெறியர்கள். நாம எதிர்க்கறது போலீஸ் என்கிற அமைப்பைத்தானே தவிர ஒட்டுமொத்தமான காவலர்களை அல்ல. நீங்களும்தானே பார்த்தீங்க? கிராமங்களை எரிச்சது பேன்ட் சட்டை - லுங்கி கட்டின ஆசாமிகள்...

இந்த சாதி வெறியர்களை தன்னோட திட்டத்துக்கு வால்டர் ஏகாம்பரம் பயன்படுத்தியிருக்கார்...’’‘‘அது என்ன திட்டம்?’’ ‘‘தெரியலை...’’ என்ற தமிழரசன், ‘சோர்ஸ்’ மூலம் தனக்குக் கிடைத்த பேப்பரைப் பிரித்தார். முழங்கை அளவுக்கு கொம்புகளை கொண்ட ஆட்டின் உருவம் அதில் பென்சிலால் வரையப்பட்டிருந்தது.

‘‘அவன் கருமின்னு சொல்றியே... எப்படி?’’
‘‘ஃபேஸ்புக்லே வர்ற ஸ்டேட்டஸைக் கூட ஷேர் பண்ணிக்க மாட்டான்!’’   

‘‘காது குத்து விழாவிலே தலைவர் சொந்தக் கட்சியையே திட்டுறாரே... ஏன்?’’
‘‘இது ‘உள் குத்து...’’     

‘‘நம்ம கட்சிக் கொடியை ‘பிங்க்’ கலர்ல மாத்தணும்ங்கிறாரே தலைவர்... ஏன்?’’
‘‘அதுதான் ஹன்சிகாவுக்குப் பிடிச்ச கலராம்..!’’                          
- தாமு, தஞ்சாவூர்.

(தொடரும்)

கே.என்.சிவராமன்