நடைவெளிப் பயணம்



மாற்று உறுப்பு

தாட்சண்யம், பச்சாத்தாபம் ஆகியவை பொறுத்துக் கொள்ளக்கூடியவை என்றாலும், சில தருணங்களில் மிகுந்த வேதனைக்கு இடமளித்து விடுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் என்னால் இன்னொருவருக்கு அவப்பெயர் வந்து விடுகிறதே என்று நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கணம் தாட்சண்யம், நான் முடியாது என்று சொன்னால் யாரும் தவறு காண முடியாது. ஆனால் முடியாது என்று  சொல்லத் தெரிய வில்லை. இந்த அழகில் ஓர் அறுவை சிகிச்சை வேறு.

இரு மாதங்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே என் காலத்தைத் தள்ளி விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு பொது டாக்டரிடம் சொல்லி விட்டேன். அவர் உடனே ஒரு விசேஷ டாக்டரைப் பார்த்தே ஆக வேண்டும் என்றார். விசேஷ டாக்டர் எடுத்த எடுப்பிலேயே என்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார், ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள் என்று! ‘‘போங்கள், இந்த மூன்று பரிசோதனைகளைச் செய்து வாருங்கள்’’ என்றார். மூன்று பரிசோதனைகளுக்குப் பிறகு இன்னும் மூன்று, அப்புறம் நான்கு. மொத்தம் பதிமூன்று பரிசோதனைகள்.

அதில் ஒன்று, என் இதயத்தின் செயல்பாடு பற்றி. நான் பிறந்ததிலிருந்து உதிரத்தை உள்வாங்கி வெளியே தள்ளிக் கொண்டிருந்த இதயத்தின் ‘லப்டப்’பை காதால் கேட்டேன். இறுதியாக அந்த விசேஷ டாக்டரை இப்பரிசோதனை முடிவுகளுடன் பார்த்தேன். அடுத்த நாளே அறுவை சிகிச்சை. என் அரை மயக்க நிலையில் ஆபரேஷன் மேஜையில் இருந்தபடியே அந்த டாக்டரை, ‘‘நீங்கள் ஏன் எப்போதும் டி-ஷர்ட் போட்டுக்கொள்கிறீர்கள்?’’ என்று கேட்டேன். அவர் சிறிதும் கோபித்துக்கொள்ளாமல், ‘‘ஆபரேஷன் தியேட்டரில் முழுக்கைச் சட்டை போட்டுக்கொள்ள முடியாதல்லவா?’’ என்றார்.

பரிசோதனைகள் கழுத்திலிருந்து அடி வரை. இதயம் மிகவும் நன்றாக இருந்தது. நுரையீரல்கள் அப்படியே. நான் ஐம்பது ஆண்டு ஆஸ்துமாக்காரன் என்பதற்கு அடையாளம் இல்லை. கல்லீரலும் அப்படியே. நான் குழந்தையாக இருந்தபோது வயிற்றில் கட்டி விழுந்து ஜம்மியின் பத்து ரூபாய் மருந்து சாப்பிட்டவன். அப்புறம் சிறுநீரகங்கள். கடைசியாக, பான்க்ரியாஸ். இது ஒழுங்காக வேலை செய்யாததால் நீரிழிவு நோய் வந்து விடுகிறது.

எனக்கு உடனே தோன்றியது, ‘இரு உறுப்புகளை உடனே தேவைப்பட்டோருக்குக் கொடுத்து விடலாமே’! கல்லீரலில் பாதி, சிறுநீரகங்களில் ஒன்று கொடுத்து விடலாம். எனக்கோ வயது 83. எஞ்சியிருக்கும் நாட்களுக்கு மிஞ்சியதோடு இருந்துவிட்டு இறந்த பிறகு மற்ற உறுப்புகளைக் கொடுத்து விடலாம். இதை டாக்டரிடம் சொன்னேன். என் முகத்தைப் பார்த்துவிட்டுப் பதிலேதும் சொல்லவில்லை.

இப்படித்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் என் தம்பிக்கு மாற்றுச் சிறுநீரகம் வேண்டும் என்று சொன்னபோது, ‘‘என் சிறுநீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்’’ என்றேன். யாரும் ஒரு பதிலும் சொல்லவில்லை. என் தம்பி மத்திய அரசு ஊழியன். அவன் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்தவரையில் உடல்நிலை யில் முன்னேற்றம் இருந்தது. ஆனால் அங்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எந்த சலுகையும் கொடுக்காது என்று ஓர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தான். ஒரு வாரம் வரை ஒரு சிகிச்சையும் தரவில்லை. சென்னைப் பொது மருத்துவமனை முன்னாள் டீனின் மனைவி ஒரு மொழிபெயர்ப்பாளர். அவரிடம் சொன்னேன்.

அடுத்த நாளே என் தம்பிக்கு ‘பெரிடோனியல் டயாலிஸிஸ்’. உடலில் எங்கெங்கெல்லாமோ குத்திக் குழாய்கள் இணைத்து எங்கெங்கோ திரவம் போய்க்கொண்டிருந்தது. ஆனால் காலம் கடந்து விட்டது. அடுத்த நாள் அத்தனை குழாய்களுடன் என் தம்பி உயிர் பிரிந்தது.அரசு மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்துச் செல்வது அவ்வளவு எளிதல்ல. எனக்குத் தெரிந்த ஓர் உயர் காவல்துறை அதிகாரியிடம் சொன்னேன். அப்போது மொபைல் போன்கள் கிடையாது. ஒவ்வொரு முறையும் வெளியே வந்து ஒரு கடையிலிருந்து போன் செய்ய வேண்டும். கடைசியாக அவர் கிடைத்தார். உடனே ஒரு போலீஸ் வண்டியில் வந்தார்.

அன்று வார்டில் இறந்தாலும் உடலைச் சவக்கிடங்குக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து எடுத்துச் செல்லவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் பேரம். காவல் அதிகாரியின் உதவியால் நாங்கள் வார்டிலிருந்து எடுத்துப் போலீஸ் வண்டியில் வைத்தோம். அவர் ஓர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார். அப்போது மருத்துவமனையின் சவக்கிடங்குக்காரர்களுக்கும் வார்ட்காரர்களுக்கும் பெரிய சண்டை. ‘பிணத்தை எப்படி சவக்கிடங்குக்குக் கொண்டு  வராமல் வெளியே எடுத்துப் போக முடியும்?’ காவல் உயர் அதிகாரி இருக்கும்போதே இந்தச் சண்டை.

இதில் எனக்கு ஒன்று புரியவில்லை. ‘‘நான் சிறுநீரகம் தருகிறேன்’’ என்று சொன்னேன். ஏன் யாரும் காதில் போட்டுக்கொள்ள வில்லை? இப்போதும் நான் உறுப்பு தானம் தருகிறேன் என்றபோதும் யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மருந்து, மருத்துவம், மருத்துவர் ஆகிய மூன்றில் இளம் வயதினருக்குக் கூடத் தனி அபிப்பிராயம் இருக்கிறது. நான் தன்வந்தரி என்று நினைக்கும் டாக்டரின் பெயரைச் சொன்னவுடனேயே, ‘‘ஓ, அவரா?’’ என்று அலட்சியமாகச் சொல்லிவிடுகிறார்கள்.

ஒருமுறை நானும் என் தம்பியும் (அவன் உயிரை விட்ட) ஆஸ்பத்திரியின்) புற நோயாளிகள் பகுதியில் பகல் இரண்டு மணியள வில் நோயாளிகள் காத்திருக்கப் போடப்பட்டிருந்த பென்ச்சில் உட்கார்ந்திருந்தோம். எங்களுடன் இன்னும் பத்துப் பன்னிரண்டு பேர். ஒருவர் சர்வ சகஜமாக உள்ளே சென்று, நோயாளிகளின் தகவல் அட்டைகளை எடுத்து வந்து, ஒரு வரிசைப்படி வைத்தார். ‘‘நீங்கள் மருத்துவமனை உதவியாளரா’’ என்று கேட்டேன். ‘‘இல்லை. மருந்து வாங்க வந்தேன்’’ என்றார்.

நாங்கள் மேற்கொண்டு பேசினோம். அவருக்கு அவர் மனைவி ஒரு சிறுநீரகம் தானமாகக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த அரசு ஆஸ்பத்திரி யில் அவர் இனாமாக மருந்து வாங்கிக் கொள்ள வழியுண்டு. அதுதான் அவரை அந்த ஆஸ்பத்திரியின் ஓர் ஊழியன் போலப் பணியாற்ற வைத்தது.

திடீரென்று அவர் ஆவேசம் வந்தது போலக் கத்த ஆரம்பித்தார். ‘‘வேண்டாம், சார். உங்க தம்பிக்கு ஒரு ஆபரேஷனும் செய்யாதீங்க. அப்படி உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வேண்டாங்க. அவனும் என் மாதிரி வாரா வாரம் இந்த பென்ச்சுல ஒக்காந்து அந்த அயோக்கியன் கிட்டே பிச்சை மாதிரி மருந்து வாங்கிக்கணும். இது என்ன பொழைப்புங்க? வேண்டாங்க. இருக்கிற வரைக்கும் நிம்மதியா இருந்துட்டுப் போகச் சொல்லுங்க’’ என்று கத்தினார். பெரிய கும்பல் கூடிவிட்டது. நானும் என் தம்பியும் பிரமித்து உட்கார்ந்திருந்தோம்.

அவர் சொன்ன காரணத்துடன் ஏராளமான செலவு செய்து மாற்று உறுப்பு பொருத்திக் கொள்கிறோம், சாலை விபத்தில் இறந்த இளைஞனின் இதயம், சிறுநீரகம் இளமையுடன் இருக்கும். நான் வயோதிகன்தானே.இன்னொரு காரணமும் இருக்கலாம். நாங்கள் பார்க்கக் காத்திருந்த டாக்டர், என் தம்பிக்கு வைத்தியமே புரியாமல் உயிர் விட வைத்தவர்தான்!

உங்க தம்பிக்கு ஒரு ஆபரேஷனும் செய்யாதீங்க. அப்படி உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வேண்டாங்க. அவனும் என் மாதிரி வாரா வாரம் இந்த பென்ச்சுல ஒக்காந்து அந்த அயோக்கியன் கிட்டே பிச்சை மாதிரி மருந்து வாங்கிக்கணும். இது என்ன பொழைப்புங்க?

படிக்க

மா.அரங்கநாதன் தேர்ந்த வாசகர்களிடையே பெரு மதிப்பு பெற்றவர். ஐம்பது ஆண்டுகளாக எழுதிவந்தாலும் 1985 அளவில்தான் நிஜ கவனம் பெற்றார். அவருடைய ஒரு நூலுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். (இப்போது என்னால் பத்து வரி சேர்ந்தாற்போல் படிக்க முடியவில்லை.) அரங்கநாதனின் புகைப்படங்களுடன் ஒரு நூல் வெளியாகியிருக்கிறது. ராஜாஜி ‘மணிக்கொடி’ பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று சந்தா கட்டிப் படித்தவர். அதில் ஒரு கதையைப் படித்துவிட்டு, ‘‘எழுதியவர் சு.ம.வா?’’ என்று கேட்டிருக்கிறார். அரங்கநாதனின் ஆவணப்படத்தைக் கவிஞர் ரவி சுப்பிரமணியன் எடுத்திருக்கிறார். அதன் வெளியீட்டு விழாவிலும் நான் பங்கு பெற்றிருக்கிறேன்.

(வெளியீடு: ஆம்பல் அறக்கட்டளை, அஞ்சல் பேழை 696, சென்னை-600014. பேச: 9940045557.)காவ்யா பதிப்பித்த இந்த எண்பது கதைகள் எப்போது எழுதப்பட்டன என்று அறிய முடியாது. ஆனால் கதைகள் வித்தியாசமானவை, விசேஷமானவை. முத்துக்கறுப்பன் எண்பது, மா.அரங்கநாதனின் மாற்றுருவம். (முத்துக்கறுப்பன் எண்பது, காவ்யா, 16, 2வது குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-600024. பேச: 044-23726882. விலை ரூ.400/-)

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்