பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 30 அருண்

பேரிளம் பெண்...

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை , பேரிளம் பெண் ஆகிய பெண்களின் ஏழு பருவ நிலைகளில், அவர்களுக்கு அதிக கவனிப்பு   தேவைப்படுவது, இறுதிப் பருவமான பேரிளம்பெண் பருவத்தில்தான். முதுமையின் தள்ளாட்டத்தில், அதிலும் கணவரை இழந்த பெண்கள் முதுமையில் படும் அவஸ்தை மிகக் கொடூரமானது.

போரில் கணவனையும், பிள்ளைகளையும் இழந்த பெண்கள் படும் அவஸ்தைகளை ‘புறநானூற்றின்’ பல பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். ‘நீர்ச்சோற்றுத் திரட்சியோடு எள்ளும் புளியும் சேர்த்துச் சமைக்கப்பட்டு வேளையிலையும் வேக வைத்து உணவாகக் கொண்டு, படுக்கப் பாய் இல்லாமல் கைம்மை நோன்பு நோற்று வருந்தும் நிலையைவிட இறத்தல் மேலானது என ஒரு பெண் வருந்துகிறாள்.

கணவன் இறந்தவுடன் பெண்ணின் சமூக இருப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவள் எதிர்கொள்ளும் சமூக அவலம் குறித்த பெருங்கோப்பெண்டுவின் கவிதை வரிகள் அழுத்தமான சமூகப் பதிவுகள். தலைமயிரைக் களைந்து, அல்லி அரிசியை உண்டு, அணிகலன்களை இழந்து, கைம்மை நோன்பு கொண்டு வாழ்தல் இயலாது. (புறநானூறு: 246)

ஆனால், சமூகம் சர்வ வளர்ச்சிகளின் உச்சத்தில் நிற்கிற இந்தக் காலச் சூழலில் கூட, முதுமையின் வாசலில், கணவன் இல்லாமல் பெண்கள் சுதந்திரமாக, நிம்மதியாக வாழ்வதென்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பொருளாதாரச் சூழல், பிள்ளைகளின் கவனிப்பின்மை போன்ற பிரச்னைகள் வயதான காலத்தில் பெண்களுக்கு ஏற்படுத்தும் நிம்மதியில்லா வாழ்வு பெரும் அச்சம் தரக் கூடியதாக இருக்கிறது.

எல்லாவற்றையும்விட, தனிமையும், புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் உளவியல் பிரச்னையும் காலத்தால் தீர்க்க முடியாதது. பெண்களின் - குறிப்பாக இளம்பெண்களின் - அவல நிலை குறித்து பேசும் ஊடகங்களும், படைப்பிலக்கியங்களும் கூட, வயதான பெண்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ‘தேடல்’ என்கிற சிறுகதை, பெற்ற பிள்ளையால் நிராதரவாக சாலையில் விடப்படும் ஒரு தாயின் அவலநிலை பற்றிப் பேசுகிறது. பொதுவாக மனைவியின் பேச்சைக் கேட்டு பிள்ளைகள் அம்மாவைக் கைவிடும் உதாரணங்களே அதிகம். ‘தேடல்’ சிறுகதையில், மனைவிக்குத் தெரியாமலே கணவன் அவனது அம்மாவை சாலையில் அனாதையாக விட்டு மறைந்து விடுவான்.

மகன் வருவான் என்கிற எதிர்பார்ப்பில், தாய் காத்துக்கொண்டிருப்பாள். படைப்புகள் மனிதனை, அவனது தவறான முடிவுகளை, மறுபரிசீலனை செய்யச் சொல்லி சதா வேண்டுகோள் வைத்தபடி இருக்கும். அப்படியான படைப்புகளில் ஒன்று ‘மா’ குறும்படம்.

பக்கவாதத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் தன் தாயை கவனித்துக்கொள்ள முடியாமல், ஒரு காப்பகத்தில் விட்டுச் செல்ல வந்திருக்கும் மகன், சிறிது நேரம் அம்மாவோடு பேசிக்கொண்டிருக்கிறான். ‘‘உங்க மருமகள் உங்களை சரியாக கவனித்துக்கொள்ள மாட்டாள். உங்களுக்கு இதுவே சிறந்த இடம்’’ என்று மகன் சொல்ல, ‘‘இல்லப்பா, நான் கொஞ்ச நாள்ல செத்துப் போயிடுவேன். அதுவரைக்கும் உன்கூடவே இருந்துடறேன்’’ என்று தாய் கெஞ்சுவாள். மகன் அதனை மறுத்துப் பேசிக்கொண்டே இருப்பான்.

இடையில் மகன், அவனது சிறுவயதில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறான். அவன் சிறுவனாக இருக்கும்போது, போர்டிங் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், மகனுக்கு அதில் விருப்பமிருக்காது. ஆனாலும், கணவனின் கட்டளைக்கும், பிள்ளையின் நல்ல எதிர்காலத்திற்கும் பணிந்து, அவனை போர்டிங் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்கிறாள் அம்மா.

பள்ளியில் எல்லா சம்பிரதாய வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் பாசம் தடுக்கவே, பிள்ளையை விட்டுப் பிரிய முடியாமல், ‘‘நீ என்கூடவே வந்துடுப்பா, உனக்காக நான் என்னோட வேலையை விட்டுடறேன், உன்கூடவே இருக்கேன்’’ என்று கதறுவாள் அம்மா. இதனை நினைத்துப் பார்த்து மகன் இறுதியில் எடுக்கும் முடிவு, பார்வையாளர்களையும் தங்களை மறுபரிசீலனை செய்துகொள்ளக் கோருகிறது.

மிகச் சாதாரணக் கதைதான். ஒரு பள்ளிக்கூடம், ஒரு பூங்கா என இரண்டே இடங்கள்தான். ஆனால் ஒரு கதையை சினிமாவாக எப்படி பார்வையாளர்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற உத்தியைக் கையாண்ட விதத்தில், இந்தக் குறும்படம் முக்கியமானதாக மாறி விடுகிறது.

 பிள்ளைகளை கவனிக்க முடியாமல் அவர்களை போர்டிங் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கும் பெற்றோருக்கு பாடம் சொல்லித்தரவேண்டும் என்கிற நோக்கில், தவறான கருத்துகளை முன்வைத்து - அதாவது பிள்ளைகளின் பழிவாங்கும் உணர்ச்சியை நியாயப்படுத்தி - இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்கிற எண்ணம் மனதில் உதிக்கும்.

ஆனால் அப்படி எதிர்மறையான எண்ணம் உதித்த அடுத்த கணத்தில், ‘அதுவல்ல எங்கள் நோக்கம்; பெற்றோர்களுக்குத் தேவையான அரவணைப்பை இறுதிக் காலத்தில் அவர்களின் பிள்ளைகள்தான் கொடுக்க வேண்டும்’ என்கிற உயர்ந்த கருத்தை பார்வையாளர்களின் மனதில் விதைக்கிறது இந்தக் குறும்படம்.பார்வையாளர்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்து, அவர்கள் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத முடிவைக் கொடுக்கும் உத்தியும், அதற்காக படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் விதமும் திருப்தியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

‘இன்டர்கட்’ என்கிற படத்தொகுப்பு உத்தியை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கும் வெகுசில குறும்படங்களில் இதுவும் ஒன்று. சிறு வயதில் பிள்ளையை போர்டிங் பள்ளியில் சேர்க்கும் காட்சி முதலில் காட்டப்படுகிறது. அடுத்த காட்சி யில், அம்மாவை காப்பகத்தில் சேர்க்க வரும் பிள்ளையைக் காட்டுகிறார்கள்.

‘‘எனக்கு இந்த ஸ்கூல் வேண்டாம்மா’’ என்று மகன் கெஞ்சுவதும், ‘‘நான் உன்கூடவே இருந்துடறேன்பா’’ என்று தாய் கெஞ்சுவதும் அடுத்தடுத்து காட்சிகளாக விரிகின்றன. ‘மகன் அவனது தாயை பழிவாங்கப் போகிறான்’ என்று நினைக்கும் அடுத்த கணத்தில், படத்தின் முடிவு வேறாக இருக்கிறது. தாயைக் காப்பகத்தில் விடாமல், ‘‘நானே உன்ன பாத்துக்கிறேன்மா’’ என்று மகன் நெஞ்சுருகக் கதறுகிறான்.

சிறப்பான உத்தியைக் கையாண்டிருந்தாலும், இறுதிக்காட்சிக்கு முந்தைய காட்சி மெலோட்ராமா வகையாகவே இருக்கிறது. காட்சி பிம்பங்கள் உணர்ச்சிப்பிழம்பாக மாறி பார்வையாளனை கதறி அழ வைத்து ஆகப்போவது ஒன்றுமல்ல. பார்வையாளனை அழ வைக்கும் படைப்புகள், அந்தக் கணத்திலேயே அவனது நெஞ்சி லிருந்து அகன்றுவிடும். மாறாக, அழுவதற்கும் சிந்திப்பதற்கும் இடையில் இருக்கும் புள்ளியில் பயணிக்கும் படைப்புகளே, மனதில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

படத்தின் இறுதிக் காட்சியில் எந்த கதாபாத்திரத்தையும் காட்டாமல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் பயன்படுத்திய சக்கர நாற்காலியை கொஞ்சம் கொஞ்சமாக அண்மைக்காட்சிக்குக் கொண்டு வந்து முடித்திருப்பார்கள். பார்வையாளன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான இடமாக இருக்கிறது அந்தக் காட்சி.

‘மா’ குறும்படத்தை சிறப்புறச் செய்வது, அதன் கதைசொல்லும் உத்திதான். படைப்புகள் எப்போதும், மனிதனைத் தவறாக வழிநடத்தாது. அது உயரிய சிந்தனையை, செழுமையான வாழ்க்கை முறையை மனிதனுக்குள் விதைக்கவே தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கும்.

மருமகள் உங்களை சரியாக கவனித்துக்கொள்ள மாட்டாள். உங்களுக்கு இதுவே சிறந்த இடம்’’ என்று மகன் சொல்ல, ‘‘இல்லப்பா, நான் கொஞ்ச நாள்ல செத்துப்
போயிடுவேன். அதுவரைக்கும் உன்கூடவே இருந்துடறேன்’’ என்று தாய் கெஞ்சுவாள்.

படம்: மா                        இயக்கம்: லோகி
நேரம்: 7.55 நிமிடங்கள்         ஒளிப்பதிவு: ரீபன் கிஷோர்
இசை: சாந்து ஓம்கார்         படத்தொகுப்பு: விமலன் தமிழன்
பார்க்க: www.youtube.com/watch?v=Bo0pLzECrJw-feature=youtu.be

என்னுடைய அப்பா அவரது பெற்றோரை காப்பகத்தில் விடவில்லை. இறுதிவரை தன்னோடு வைத்தே அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருந்தார். அவரால்தான் இந்தக் கதையை குறும்படமாக எடுக்கத் தோன்றியது’’ என்று கூறும் ‘மா’ படத்தின் இயக்குனர் லோகி, பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர். முழுக்க முழுக்க தன் குடும்ப உறுப்பினர்களை வைத்தே, சினிமாவிற்கே உரித்தான எந்தவித ஆடம்பரத்தையும் நோக்கிச் செல்லாமல், ஒரு நல்ல குறும்படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

அவரது பாட்டி, தந்தை என குடும்பத்தினரே நடித்திருக்கிறார்கள். குறும்படத்தை எடுப்பதற்கு தனியாக எந்தவித செலவும் செய்யவில்லை. படத்தில் வரும் ட்ராலி ஷாட் கூட குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்கேட்டிங் பலகை மூலமே எடுக்கப்பட்டிருக்கிறது. குடும்பம் ஒத்துழைத்தால், சிறப்பான கதை சொல்லும் உத்தியைக் கற்றுக்கொண்டால், சினிமா எடுக்க பொருளாதாரம் ஒரு தடையே அல்ல என்பதை லோகி நிரூபித்திருக்கிறார்.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி