நியூஸ் வே



*‘ஆப்பிள் பெண்ணே’ ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டைப் பார்த்து கன்னடத்தில் ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காமெடி த்ரில்லரான ‘யாமிருக்க பயமே’ படத்தின் ரீமேக் அது.

*‘ஒரு குழந்தை பிறந்தால், பிரிந்த குடும்பங்கள் கூடும்’ என்பது உண்மைதான் போலிருக்கிறது. வருண் காந்திக்கு மகள் பிறக்க, குழந்தையைப் பார்க்க அன்போடு போயிருக்கிறார் வருணின் அண்ணன் ராகுல் காந்தி. இனிய விருந்தோடு நெகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டார்கள் அரசியல் எதிரிகள்! மேடைகளில் துவேஷம் பொழிந்தது பழைய காலம் ஆகிவிட்டது.

*பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்து, ஃபெஸ்டிவல் ஹாலிடேஸ் முழுவதும் கலெக்ஷனை அள்ளியது ‘வீரம்’. இதை மனதில் வைத்து, தனது 55வது படத்தையும் அதே போல் பொங்கலுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்போகிறார் அஜித்.

ஸ்ருதி ஹாசன் இவ்வளவு படப்பிடிப்புகளுக்கு இடையில் மியூசிக் ஆல்பம் தயாரிப்பதற்கான வேலையில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக முழுமூச்சாக ஈடுபட்டு வருவதால், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து விடுகிறார்.

*ஒரு சமோசாவுக்காக யாராவது வழக்கு நடத்துவார்களா? ஆனால் பாகிஸ்தானில் நடந்தது. அங்கிருக்கும் பஞ்சாப் மாகாண அரசு, ‘சமோசாவுக்கு அதிகபட்சமாக ஆறு ரூபாய்தான் விலை வைக்க வேண்டும்’ என உத்தரவு போட, அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போய் ஜெயித்திருக்கிறார்கள் ஹோட்டல் உரிமையாளர்கள்.

*தமிழில் அறிமுகப் படமே ஹிட் என்பதால் குஷியில் இருக்கிறார் கேத்ரின் தெரசா. இப்போது அதர்வாவுடன் ஒரு படம், அடுத்து ‘மஞ்சப்பை’ படத்தின் தெலுங்கு ரீமேக் என டபுள் ட்ரீட் ஹேப்பியில் மிதக்கிறார் கேத்ரின்.

ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ ஜோடி நிக்கி கல்ரானி, பெங்களூரு மாடல் பொண்ணு.நிக்கியின் அக்காவும் நடிகையே! ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் நடித்த அர்ச்சனா கல்ரானிதான் அந்த அக்கா. ஜி.வி.பிரகாஷ் படம் தவிர, ஆதியுடன் ஒரு படத்திலும் நடிக்கிறார் நிக்கி.

*ரஜினியின் பெயரைக் கொண்ட ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இதற்காகவும், ஒரு ஆசீர்வாதத்திற்காகவும் ரஜினியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ரஜினி மைசூரிலி ருந்து திரும்பிய பிறகு சந்திப்பு நடக்குமாம்.

*‘ஐ’ படத்தை எல்லா வேலைகளையும் முடித்து நவம்பர் 14ம் தேதி வெளியிட முயற்சி நடக்கிறது. பிறகு ‘லிங்கா’வும் வந்து விட முயற்சி நடப்பதால் விரைவாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். இரண்டு வார வித்தியாசத்தில் இரண்டு படங்களும் வெளி வரும் என்கிறார்கள்.

*‘சிகப்பு ரோஜாக்கள்’ வெளிவந்த சமயத்தில், பாரதிராஜாவின் புதுமைப் படைப்புக்காக கொண்டாடப்பட்டது. அதில் இளையராஜாவின் பின்னணி இசையும் பேசப்பட்டது. நிறைய டைரக்டர்கள் அதை மறுபதிப்பு செய்யக் கேட்டும் கொடுக்காமல், தன் மகன் மனோஜ் பாரதிக்கே அந்த உரிமையைக் கொடுத்துவிட்டார் பாரதிராஜா. ஹீரோ தேடிக்கொண்டிருக்கிறார் மனோஜ்.

*கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் டாக்கி போர்ஷன் ஷூட் முழுவதும் முடிந்துவிட்டது. பாடல்கள் எதுவும் இன்னும் ஹாரிஸ் ஜெயராஜிடமிருந்து வரவில்லை என்கிறார்கள். இதனால் ‘அனேகன்’ பொங்கல் ரேஸில் குதித்தாலும் ஆச்சர்யமில்லையாம்!

*ப்ரியாமணியை நினைவிருக்கிறதா? இப்போது கன்னடத்தில் 3 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இடையே ஒரே ஒரு மலையாளப் பட வாய்ப்பும் வர, அதையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் ப்ரியாமணி!

*பாலாஜிமோகன் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் காஜல் அகர்வால். தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தில் திவ்யா ஸ்பந்தனாவிற்கு முன்பாக ஒப்பந்தம் ஆனவர் காஜல். அதன்பின் ஏதோ காரணத்தினால் காஜல் நடிக்கவில்லை. இப்போது காலம் கனிந்து வந்திருக்கிறது. இந்தப் படத்தின் போட்டோஷூட் நவம்பர் இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.

*‘‘நடிப்பு முக்கியம். பட், அதைவிட படிப்பு ரொம்ப முக்கியம்’’ என்ற கொள்கையோடு இருக்கிறார் நந்திதா. கர்நாடகாவில் அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்குது பொண்ணு!

*‘பாபநாசம்’ படத்தை அப்படியே அசல் மொழிமாற்றமாக இல்லாமல் தமிழ்த் தன்மைக்கு ஏற்ற மாதிரி மாற்றங்களை கமலே செய்திருக்கிறார். அந்த மாற்றங்கள் சரியாக இருப்பதாக இயக்குநரும் ஏற்றுக்கொண்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

*பர்சனல் வேலைகளுக்காக மிக அதிக ஊழியர்களை வைத்திருக்கும் அமைச்சர் என்ற விநோதப் பெருமையைப் பெற்றிருக்கிறார், ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா. இவருக்கு 66 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். பிரதமர் மோடிக்கே பர்சனல் ஊழியர்கள் எண்ணிக்கை இதைவிடக் குறைவு, 64 பேர்.

*கமலின் ‘உத்தமவில்லன்’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பது தெரிந்ததுதான். கமலுடன் ஜிப்ரான் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று கமலுக்கு வரிகள் தோன்ற, உடனே அதை பாடலாகக் கொண்டு வந்திருக்கிறார் ஜிப்ரான். படத்தின் சில பாடல்களின் முதல் வரிகள் இப்படித்தான் கிடைத்திருக்கிறதாம்.

*மீன் பிரியரான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திடீரென சைவத்துக்கு மாறி விட்டார். சைவத்தில் என்ன வெரைட்டி தருவது எனப் புரியாமல் திணறிப் போயிருக்கிறார்கள் ஜனாதிபதி மாளிகை சமையல்காரர்கள்.

*விக்ரம், சமந்தா நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் ஒரு வாரம் சென்னையில் நடந்தது. இரண்டாவது, மூன்றாவது ஷெட்யூலை லடாக்கிலும் சிக்கிமிலும் தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக நடத்தி முடித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.

*சிம்பு விசாகப்பட்டினம் போய் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அரசியல் காரணமில்லை. தங்கையைப் பார்க்கப் போனவர் அங்கே மோகன்பாபு மகனைப் பார்த்துவிட்டு அவரோடு சேர்ந்து மக்களைப் பார்க்கப் போயிருக்கிறார். மக்களின் ஆரவாரத்தில் மனம் நெகிழ்ந்து விட்டார் சிம்பு.

*‘மாரீசனி’ல் விஜய் இறங்குவதற்கு முன்பே அட்லியின் புதுப்படத்திற்கு ஓகே சொல்லி விட்டார். காத்திருந்த கலைப்புலி தாணுவிற்கே தயாரிக்கிற வாய்ப்பு.

*ஏ.ஆர்.ரஹ்மானின் மேல்நாட்டுப் பயணங்கள் தற்சமயம் இல்லையாம். அவர் இசையமைக்கும் படங்கள் ஆறு மாதத்திற்குப் பிறகே ஷூட்டிங் ஆரம்பம். இதனால் நிறைய இந்திப் படங்களில் இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.