இன்னும் எத்தனை அன்புகளுக்கு இது நேரும்!



அடித்துப் பெய்த பெருமழை, அந்த இடத்தில் படிந்து கிடந்த ரத்தக்கறையைக் கழுவிச் சுத்தமாக்கி விட்டது. ஒரு பாலித்தீன் பைக்குள் அடங்கிவிட்ட அந்தக் குடும்பத்தின் உடைமைகள், நிகழ்ந்த கொடூரத்துக்குச் சாட்சியாக சிதறிக் கிடக்கின்றன. அன்பு கையில் வைத்து விளையாடிய நான்கைந்து மீன் பொம்மைகள் மழைநீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. ஒரு மாடு, ஒரு நாய், மூன்று மனிதர்கள் என்கிறது காவல்துறையின் கணக்கு... 

‘‘இதோ இந்தப் பக்கம் நானும், மதுரையும் படுத்திருந்தோம். அந்த ஓரத்துல ஆறுவும், ஐஸும் படுத்திருந்தாங்க. அன்புவை அதோ அந்த தள்ளுவண்டியில படுக்க வச்சிருந்தாங்க. அதுக்குப் பக்கத்துல பாட்டிம்மா... அது எப்பவும் ஏதாவது உளறிக்கிட்டே இருக்கும். மனநலமில்லாத பாட்டி... ஆறு, தான் சாப்பிடுறதை அதுக்கும் கொடுப்பான். அதனால அவங்ககூடவே தங்கி யிருந்துச்சு.

ராத்திரி ஒரு மணி இருக்கும். ஒரே சத்தம்... முழிச்சுப் பாத்தா, ஆறுவும், ஐஸுவும் ரத்த வெள்ளத்துல கிடக்கிறாங்க. அடுத்தாப்புல படுத்திருந்த பாட்டிம்மாவை நசுக்கி இழுத்துக்கிட்டு போய் நடுரோட்டுல நிக்குது காரு. காருக்குள்ள இருந்த ரெண்டு பேரு ஓடிட்டானுங்க... ஒருத்தன் மட்டும் போதையில விழுந்துட்டான்.

ஆறுவையும், ஐஸுவையும் தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுனோம். ‘ஐஸுவைக் காப்பாத்துடா... எப்படியாவது ஐஸுவைக் காப்பாத்துடா’ன்னு கத்திக்கிட்டே வந்தான் ஆறு. ஆனா ரெண்டு பேரையும் காப்பாத்த முடியல. ஐஸு வயித்துக்குள்ள இருந்த புள்ளையையாவது காப்பாத்தலாமேன்னு முயற்சி செஞ்சாங்க...

அதுவும் முடியலே. மொத்தம் 4 உசுரு... குடிகாரப் பாவிங்க.. புள்ளைய அனாதையாக்கிப் புட்டானுங்க.... நல்லாவே இருக்க மாட்டானுங்க...’’ - கதறி அழுகிற குமாருக்கு இன்னும் மரண பயம் அகலவில்லை. லேசாக இன்னும் கொஞ்சம் ஸ்டியரிங் திரும்பியிருந்தால் குமாரும் இன்று இல்லை.

அக்டோபர் 14ம் தேதியன்று அந்தக் கொடூரம் நடந்தது. வேளச்சேரி-தரமணி லிங்க் ரோட்டில், பாரதி நகர் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே அகன்ற பிளாட்பாரத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தையும், அவரின் காதல் மனைவியான 8 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யாவையும், ஒரு ‘பெயரில்லா’ பாட்டியையும் நசுக்கிக் கொலை செய்து விட்டது ஒரு கார். அதை ஓட்டியவரும், உடன் இருந்த இருவரும் கடும் போதையில் இருந்தார்கள்.

விபத்துப் பதிவேட்டில் மற்றும் ஒன்றாக அதைப் பதிவு செய்துகொண்டு, அடுத்த பரபரப்பை நோக்கி நகர்ந்துவிட்டது காவல்துறை. தாயையும், தந்தையையும் பறிகொடுத்துவிட்டு, நிகழ்ந்த கோரம் புரியாமல் குழந்தைகள் இல்லத்தின் படிக்கட்டில் அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறான் ஆறுமுகத் தின் மகன், ஒன்றரை வயது அன்பு. 

பலியான ஆறுமுகம், திருவல்லிக்கேணி செங்கல்வராயன் தெருவைச் சேர்ந்தவர். அம்மா ஜெயா பழ வியாபாரம் செய்கிறார். அக்கா பாரதிக்கு பூ வியாபாரம். இருக்க வீடு, செய்ய தொழில் இருந்தும் ஆறுமுகம் வேளச்சேரி யில் பிளாட்பாரத்தில் தங்கி குப்பை பொறுக்கி தம் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்றினார். காரணம், காதல்!‘‘ஆறாவது வரைக்கும்தான் பள்ளிக்கூடம் போனான்.

படிப்பு தான் வரலே, தொழிலாவது கத்துக்கோன்னு மெக்கானிக் கடையில சேத்துவிட்டேன். அதுவும் சரியா வரலே. சத்திரத்து வேலை, ஹோட்டல் வேலைன்னு சுத்தினான். கடைசியா ஒரு மீன்பாடி வண்டி வாங்கிக் கொடுத்தேன். ஐஸ்வர்யாவைப் பாக்குற வரைக்கும் நல்லாத்தான் இருந்தான்.

அவளுக்கு ஆந்திராவுக்கு பக்கத்துல ஏதோவொரு ஊரு. பெத்தவங்க இல்லை. தி.நகர்ல ஹாஸ்டல்ல தங்கி படிச்சுக்கிட்டு இருந்திருக்கா. எப்பிடியோ ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சுப் போயி பழகிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்கு வர்றதையும் குறைச்சுட்டான். ‘இதெல்லாம் வேணாம்டா’ன்னு சொன்னேன். கேக்கல... கோயில்ல வச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். நிறைமாசமா இருக்கும்போது கூட்டியாந்தான். நான்தான் ஆஸ்பத்திரியில சேத்து பிரசவம் பாத்தேன். படிச்சவங்கிறதால வாய்த்துடுக்கா பேசுவா.

பதிலுக்கு நான் ஏதாவது சொன்னா ஆறுமுகம் கோபப்படுவான். அந்தப் புள்ள மேல அவ்வளவு உசுரு... ஒரு நிமிஷம் விட்டுட்டு இருக்க மாட்டான். ‘ஏண்டா இப்பிடி குப்பைக்குள்ள கிடந்து அல்லாடுறே’ன்னு கேட்டா, ‘அவளுக்கு அங்க வர்றது பிடிக்கலே... எனக்கு அவதான் முக்கியம்’னு சொல்லுவான். ‘அன்புவையாவது எங்ககிட்ட விட்டுடு’ன்னு சொன்னேன். கேட்கல. இப்ப எங்க எல்லாரையும் விட்டுட்டுப் போய் சேந்துட்டான்...’’ - அம்மா ஜெயாவின் கண்கள் நிறைகின்றன. 

‘‘பெயின்ட் அடிக்க, மண்ணு வெட்டன்னு யாரு கூப்பிட்டாலும் அந்தப் பையன் போவான். கூடவே போய் பக்கத்துல குந்தியிருப்பா அந்தப் பொண்ணு. வேலை இல்லைன்னா குப்பை பொறுக்குவாங்க. முதல்ல வேளச்சேரி சபா ஹாஸ்பிட்டலாண்ட தான் இருந்தாங்க. இந்த இடத்துக்கு வந்து ரெண்டு மாசமாச்சு... எங்கே போனாலும் ரெண்டு பேருமாத்தான் போவாங்க. அக்டோபர் 27ம் தேதி குழந்தை பிறக்கும்ன்னு அந்தப் பொண்ணுக்கு தேதி கொடுத்திருந்தாங்க... ‘டெலிவரி செலவுக்கு காயிலான் கடை பாய்கிட்ட எட்டாயிரம் கொடுத்து வச்சிருக்கேன்...

குழந்தை பிறந்த உடனே இந்தத் தொழிலை விட்டுட்டு அம்மாகிட்ட போயிருவேன்’னு சொன்னான். பாவம், குடிகாரப் பசங்க அதுக்குள்ள உயிரைப் பறிச்சுட்டானுங்க...’’ என்று வருந்துகிறார் வேளச்சேரி நியூ காலனி பகுதியைச் சேர்ந்த தனம். விபத்து நடந்த சமயத்தில் தன்னிடம் ஒட்டிக்கொண்ட அன்புவை தானே வளர்க்க ஆசைப்படுகிறார் தனம். காவல்துறை ஏற்றுக் கொள்ளவில்லை.

அன்பு, இப்போது தேனாம்பேட்டை கருணப்பிரியா குழந்தைகள் இல்லத்தில் இருக்கிறான். எவரோடும் ஒட்ட மறுக்கிறான். பொம்மைகள், உடனிருக்கும் பிற குழந்தைகள் எதுவும் அவனை தாயின் நினைவுகளிலிருந்து பிரிக்க முடியவில்லை. அழுகையும் உறக்கமுமாகவே கழிகிறது அவன் பொழுது. நிறைய பேர் உதவி செய்ய வருகிறார்கள். பாட்டி ஜெயாவும், அத்தை பாரதியும் அவனை வளர்க்க விரும்புகிறார்கள்.

 தர விரும்பவில்லை காவல்துறை. ‘‘அரசுத் தரப்பில் தரப்படும் இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகையை அன்புவின் பெயரில் போட்டு, காப்பகத்தின் மூலமாகவே கல்வி தந்து வளர்க்க விரும்புகிறோம்’’ என்கிறார் கிண்டி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர். ஆனால் அம்மா, அப்பா?

தமிழகத்தில் நடக்கும் 80 சதவீத விபத்துகளுக்கு மதுவே காரணம் என்கிறது ஒரு ஆய்வு. பணம் இருக்கும் வரை மது வாங்கலாம். அருகில் பாரில் மூக்கு முட்டும் வரை குடிக்கலாம். ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் குற்றம்... இதுதான் தமிழகத்தில் இருக்கிற விசித்திர நிலை. டாஸ்மாக்கில் பணம், பார் ஏலத்தில் பணம்...

குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அதற்கும் அபராதம்! ஆறுமுகத்தையும் ஐஸ்வர்யாவையும் கொன்று, அன்புவை அனாதையாக்கிய விபத்துக்கு அடுத்த நாள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சிலரைப் பிடித்து அபராதம் வசூலித்திருக்கிறது காவல்துறை. அந்தக் கொடூர விபத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடம் அவ்வளவுதான்! எப்போதும் போலவே டாஸ்மாக்கில் கூட்டம் நெரிகிறது. பார்கள் நிரம்பி வழிகின்றன. வாகனங்கள் தள்ளாடிக் கிளம்புகின்றன. போதையில் தள்ளாடும் சக்கரங்களால் இன்னும் எத்தனை அன்புகள் அனாதைகள் ஆகப் போகிறார்களோ?

 வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்