கழுகு பிந்து மாதவி To அழகு பிந்து மாதவி!



‘எத்தனை கவிஞன்
எழுதிப் பார்த்துட்டான்..
எத்தனை நடிகன்
நடிச்சுப் பார்த்துட்டான்..
காதல் போர் அடிக்கல...’

 -தமன் இசையில் ஹீரோ அசோக்செல்வனும், ஹீரோயின் பிந்துமாதவியும் சுவிட்சர்லாந்தில் காதல் வளர்க்கிறார்கள்... ‘‘ஃபாரீன்ல பாட்டுன்னதும் காதல் படம்னு நினைச்சிடாதீங்க. மனோபாலா, நாசர், ஊர்வசி, கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெகன்னு நிறைய பேர் கலகலக்குற காமெடி படம் இது’’ - தன் லேப்டாப்பில் பாடல் காட்சியை மினிமைஸ் செய்து விட்டு, கண்கள் விரிக்கிறார் சத்யசிவா. ‘கழுகு’க்கு அடுத்து, ‘சிவப்பு’, ‘சவாலே சமாளி’ என நல்ல லிஸ்ட் வைத்திருக்கும் இயக்குநர்.

‘‘நான் இயக்கிய படங்கள் மூன்றுமே வேற வேற களம். ‘சவாலே சமாளி’ சிரிப்புக்கு கேரன்ட்டி. ஹீரோ அசோக்செல்வன், ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ படங்களில் நடிச்சவர். அதிலெல்லாம் அமைதியா வந்தவர், இதில் நிறைய பேசியிருக்கார்.

ஒரு நாள் ஷூட்டிங் அப்போ, ‘எனக்கு காமெடி புதுசு. இந்த கேரக்டர் எனக்கு சரிவரலைன்னா... இவனுக்கு இவ்ளோதான்னு நினைச்சு என்னை விட்டுடாதீங்க... ஃபைனல் வெரிகுட்டா வர்றவரை எத்தனை டேக் போனாலும் ஒத்துழைக்கறேன்...’னு சொன்னார். இந்த ஈடுபாடே காமெடியில அவரை கலக்க வச்சிருக்கு!’’‘‘பிந்துமாதவி..?’’

‘‘ ‘கழுகு’ படத்துல மேக்கப், மாடர்ன் காஸ்ட்யூம் போடாமல் நடிச்சாங்க. அதிலேயே அவ்வளவு அழகு. இதில் அவங்க பக்கா சென்னை பொண்ணு... படத்தோட கதை என்ன, கேரக்டர் என்னனு எதைப் பத்தியும் கேட்டுக்காம உடனே நடிக்க ஒத்துக்கிட்டாங்க. ‘கழுகு’ மாதிரியேதான் இதிலும் கிராமத்து கெட்டப்னு நினைச்சிட்டாங்க போல. முதல் நாள் அவங்களோட காஸ்ட்யூமைக் கொடுத்ததும், ‘இது என் காஸ்ட்யூமா இருக்காது... டைரக்டர்கிட்டே நல்லா கேட்டுக்குங்க...’னு நம்பவே இல்லை. பிந்து மாதவி இதில் ரொம்ப அழகா தெரிவாங்க!’’

‘‘டைட்டில் பழசா இருக்கே..?’’

‘‘காமெடி ஸ்கிரிப்ட்னு முடிவானதும், சட்னு தோணின தலைப்பு இது. ஒவ்வொரு காமெடி ஆர்ட்டிஸ்ட்களும் ஒவ்வொரு எபிசோட் மாதிரி வந்துட்டுப் போவாங்க. ஊர்வசி மேடத்துக்கிட்ட பத்து நாள் கால்ஷீட் வாங்கியிருந்தேன். ஆனா, அஞ்சே நாள்ல அவங்க போர்ஷனை ஷூட் பண்ணிட்டேன். ‘உங்களை யாருங்க அஞ்சு நாள்ல எடுத்து முடிக்கச் சொன்னா..?’னு உரிமையா கோவிச்சுக்கிட்டாங்க.

இது வரைக்கும் பெண்களை திட்டித்திட்டித்தான் பாடல்கள் வந்திருக்கு. முதல் தடவையா பெண்களைத் திட்டாமல் ஒரு குத்துப்பாட்டு வச்சிருக்கோம். இதுல ஐஸ்வர்யா சோலோவா ஆடியிருக்காங்க. எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருக்காங்க. பெங்காலி படங்கள்ல பிஸியா இருக்கற செல்வக்குமார் ஒளிப்பதிவு பண்றார்.

இந்தப் படத்தோட கதையை பெரிய தயாரிப்பாளர்கள் நிறைய பேர்கிட்ட சொல்லியிருப்பேன். ‘நல்லா இருக்கு... ஆனா, சின்னச் சின்ன மாற்றங்கள் பண்ணிடுங்க’னு ஒவ்வொருத்தரும் தனித்தனியா கதையில நிறைய கத்திரி போட்டாங்க. அந்தச் சமயத்துலதான் அருண் பாண்டியன் சாரே, ‘ஸ்கிரிப்ட் வச்சிருக்கியா?’னு கேட்டார். இந்தக் கதையைச் சொன்னேன். சின்னச் சின்ன சேஞ்சஸ் இருந்தா சொல்லுங்க... ஸ்கிரிப்ட்டை சரி பண்ணிக்கறேன்னு சொன்னேன். ஆனா, அவர் எந்தத் திருத்தமும் சொல்லலை.

ஒருநாள் கூட அவர் ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் வந்ததில்லை. அவரோட மகள் கவிதா பாண்டியனும், அருண்பாண்டியனோட ஃப்ரெண்ட் ராஜராஜனும்தான் ஸ்பாட்ல இருந்தாங்க. அவங்களும் தயாரிப்பாளர்கள்தான். ‘அயன்’ படத்துக்கு அப்புறம் ஜெகன் செகண்ட் ஹீரோ மாதிரி இதுல பேசப்படு வார். முழுக்க முழுக்க சென்னையில தான் எடுத்து முடிச்சிருக்கோம். அவர் லாங்குவேஜ்... அவர் ஏரியா... பின்னியிருக்கார்!’’

‘‘தமன் மியூசிக் எப்படி?’’‘‘என் முதல் படத்துல யுவன் மியூசிக் பண்ணியிருப்பார். பாடல்கள் செம ஹிட். இப்போ கூட்டணி மாறிட்டேன். தமன் பண்ணியிருக்கார். சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் பறந்துக்கிட்டே இசையமைக்கிறார். அவர்கிட்ட டைம்க்கு பாட்டு வாங்குறதே பெரிய எக்ஸ்பீரியன்ஸ். ஆனாலும் எல்லா பாடல்களும் முத்து முத்தா கெத்தா கொடுத்திருக்கார். இசை வெளியீட்டை டிசம்பர்ல வைக்கலாம்னு ப்ளான். பொருத்தமா இருக்கும்ல!’’

‘‘இலங்கை அகதிகளைப் பத்தின ‘சிவப்பு’ படம் இன்னும் ஏன் ரிலீஸ் ஆகலை?’’

‘‘புரொடியூசர் ஒருத்தர் இறந்துட்டார். அதனால ரிலீஸ் தாமதம் ஆகிடுச்சு. அந்தப் படம் எப்போ வந்தாலும் பேசப்படும். யார் மனசையும் புண்படுத்தலை. ஆனா, உணர்வுபூர்வமா ஒரு
உண்மையைச் சொல்லியிருக்கேன்.

பவர்ஃபுல்லா ஒரு கேரக்டர்ல ராஜ்கிரண் நடிச்சிருக்கார். இயல்பாவே ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ள மனிதர் அவர். அதனால, இந்தப் படத்தை வாங்கி வெளியிட அவர் விரும்பினார். இப்போ வேற ஒரு புரொடியூசர் கையில மாறிருக்கு. சீக்கிரமே ரிலீஸை எதிர்பார்க்கலாம்.’’

-மை.பாரதிராஜா