கை மேல் வித்தை!



நதி நீர் இணைப்புத் திட்டம் எல்லாம் எதற்கு? ஏரி, குளம், குட்டைகளைத் தூர் எடுத்து, தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுத்தாலே போதும்... தண்ணீர் பிரச்னைக்கு குட் பைதான்!
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

சோமாலியா கடற்கொள்ளையர்களிடமிருந்து மீண்டு வந்ததே புது ஜென்மம் எடுத்தது போலத்தான். டனிஸ்டனுக்கு அரசு உதவினால் அவரது வாழ்க்கை துளிர்க்கும்!
- இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி.

உலக நாயகனின் அசத்தல் பேட்டியை வெளியிட்டு அவரது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்த்து கௌரவித்து விட்டீர்கள்! அட்டையில் கமலுக்கு இன்னும் இளமை ஊஞ்சலாடுகிறது!
- கே.வி.திவ்யபாரதி கோவிந்தன், திருச்சி.

‘நான் டீசன்ட் குக்’ என்கிற காஜல் அகர்வாலுக்கு கை மேல் வித்தை இருக்கிறது. மார்க்கெட் இல்லையென்றால் கூட இனி கவலையில்லை போல!
- மு.மதிவாணன், அரூர்.

இந்திய சினிமாவின் காதல் காட்சிகள் குறித்து பிரான்ஸ் நண்பருக்கு சாருஹாசனின் பதில் அற்புதமானது. அந்த விளக்கத்தில் ‘கமல் டச்’ இருந்ததென்னவோ நிஜம்!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

சரியாக ‘மெட்ராஸ் ஐ’ சீஸனில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவ சேவையாக கட்டுரை அமைந்திருந்தது. அதுவும், எளிய தமிழில் சொல்லிய விதம் பாராட்டுக்குரியது!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கல்விக் கடன் தர காலம் கடத்திய வங்கியால் உயிரை விட்ட மாணவன் கண்ணதாசனின் நிலை பரிதாபத்துக்குரியது. வங்கிகள் எப்போதுதான் திருந்துமோ தெரியவில்லை!
- வி.எஸ்.முத்தையா, கூத்தப்பாக்கம்.

திருநங்கைகளின் அபார வளர்ச்சி, நெகிழ்ச்சி! சாதித்திருக்கும் பத்மினி, பாரதி, செல்வி போன்றவர்களைப் பார்த்தாவது சமூகம் இனி திருநங்கைகளை அரவணைத்து ஊக்குவிக்க வேண்டும்.
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

சச்சின் எழுதியிருக்கும், ‘பிளேயிங் இட் மை வே’ புத்தகம் விற்று வரும் பணத்தை எல்லாம் குழந்தைகள் நலனுக்காக வழங்கும் சச்சின் ரியலி கிரேட்!
- ஜெ.இக்பால், சேலம்.

கேரளாவில் முத்தத்திற்காக ஒரு போராட்டம் நடத்தியதைப் படித்து அதிர்ந்தேன். இந்த ‘உம்மா’ விழாவுக்கு உலகநாயகனை தலைமை தாங்க கூப்பிடாமல் விட்டுவிட்டார்களே என்பது தான் பெருங்கவலை!
- எஸ்.நாகராஜன், திருச்சி

ஜெயமோகனின் ‘வெண்முரசு’க்கு சண்முகவேலின் ஓவியங்கள் உயிரோட்டம். புத்தகத்துக்கான ராயல்டி தொகை முழுவதையும் ஓவியருக்கே ஜெயமோகன் சமர்ப்பித்திருப்பது வியப்பு.
- இரா.அந்தோணிராஜ், தூத்துக்குடி.