நடைவெளிப் பயணம்



நான் வரலாறு படித்த வரலாறு 

நான் இரு கறுப்பு-வெளுப்பு ‘உத்தம புத்திரன்’களைப் பார்த்திருக்கிறேன்... இரு முறையும் படத்தின் ஆரம்பம் புரியவில்லை. ஒரு ராஜாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. சந்தோஷப்பட வேண்டியவன் ஏன் கலக்கமடைகிறான்? என் வரலாற்றறிவு போதாது.முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இளைஞன் வேலைக்கு முயற்சி செய்தால் ‘அவன் பத்தாவதாவது முடித்திருக்கிறானா’ என்று கேட்பார்கள்.

இந்தப் பத்து ஆண்டுகள் ஆரம்ப நிலை, இடைநிலை, உயர்நிலை என்று மூன்று பிரிவுகள். இதை ஆங்கிலத்தில் ‘பிரைமரி, மிடில், ஹைஸ்கூல்’ என்பார்கள். மொத்தம் பத்து ஆண்டுகள். இப்போது இந்த ஏற்பாடு சில மாற்றங்கள் அடைந்திருக்கிறது. ஆனால் இன்றும் பலர், ‘அவன் பத்தாவது முடித்தால் நன்றாக இருக்கும்’ என்றுதான் கூறுகிறார்கள்.

நான் படித்த ஆரம்பப் பள்ளி ஒரு கிறிஸ்தவப் பள்ளி. அதோடு அது ஒரு தெலுங்குப் பள்ளி. எனக்கு மூன்றாவது, நான்காவது வகுப்புகளுக்கு ஒரே வாத்தியார். அவர் பாடம் கற்பிப்பது புரியாது. எங்கள் வீட்டிற்கு அதுதான் நெருக்கமாக ஒரு மைல் தூரத்தில் இருந்தது. காலை பள்ளிக்குக் கிளம்பும்போது என் முகம் கறுத்திருக்கும்.

தாஸ் - அது எங்கள் ஆசிரியர் பெயர் - சொல்வது ஒன்றும் புரியாது போனாலும், அவர் அடிக்கடி ‘புரிகிறதா’ என்று கேட்டபடி வகுப்பை நடத்துவார். கதைகளாகச் சொல்லிக் கொடுக்கப்பட்ட விவிலியம் தவிர இதர பாடங்களில் நான் மிகுந்த குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத்தான் தேர்வு பெற்றேன்.

பிறகு நான் ஐந்தாம் வகுப்பு சேர்ந்தது ஒரு முதலியார் பள்ளி. எங்கள் ஊரிலேயே அதுதான் மிகப் பெரிய பள்ளிக்கூடம். தீர்க்கதரிசனத்துடன் அப்போதே அதை மெஹ்பூப் காலேஜ் என்று நிறுவனர் சோமசுந்தரம் முதலியார் பெயரிட்டிருந்தார். இன்று அது நிஜமாகவே ஒரு கல்லூரி!இங்கும் விடுதலை கிடைக்கவில்லை. உண்மையாக எட்டாவதிலிருந்துதான் எனக்கு பள்ளிக் கல்வி ஒருவாறு பிடிபட்டது.

அது பிரிட்டிஷ் அரசு காலம். அவர்கள் இந்திய வரலாற்றை மூன்றாகப் பிரித்திருந்தார்கள்- ஹிந்து காலம், முஸ்லிம் காலம், பிரிட்டிஷ் காலம். ஒரு வருடத்திற்கு ஒரு காலம். ஏதோ சதி போல எனக்கு முஸ்லிம் காலமே நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டியிருந்தது. எனக்கு இன்றும் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ் பற்றியெல்லாம் ஏதோ நிழல் போலத்தான் தெரியும்.முஸ்லிம் காலம் பற்றி நான் திரும்பத் திரும்பப் படித்ததால் அந்த ஆண்டுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லாத நிகழ்ச்சி ஒன்று தமிழ்ப் பாட நூலில் இருந்தது. அது தகப்பன் - மகன் உறவு பற்றி என்று வைத்துக் கொள்ளலாம்; அல்லது பிரார்த்தனையின் வலிமை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

முதல் முகலாய மன்னன் பாபரின் மகன் ஹுமாயூனுக்கு உடல்நிலை சரியில்லை. அன்று பாபருக்குக் கிடைத்த வைத்தியர்கள், ‘‘பையன் பிழைக்க மாட்டான்’’ என்று கூறி விடுகின்றனர். அப்போது பாபர் இறைவனை வேண்டிக் கொள்கிறார். இறைவன் அவர் உயிரை எடுத்துக் கொண்டு, மகன் ஹுமாயூன் உயிரைக் காப்பாற்ற வேண்டும். அன்றிலிருந்து ஹுமாயூன் குணமடையத் தொடங்குகிறான். பாபர் நோயாளியாகிறார். அவர் உயிரை விட்ட நாளன்று ஹுமாயூன் முழு குணமடைந்து விடுகிறான்!

இது பாபரின் வரலாறாகிய ‘பாபர் நாமா’வில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அதில் உள்ளது முற்றிலும் வேறொரு வரலாறு. பாபருக்கு நோய் கண்டு விடுகிறது. அவருக்கே நம்பிக்கை போய் விடுகிறது. அப்போது அவருடைய மூத்த மகனாகிய ஹுமாயூனிடம் ஒரு சத்தியம் வாங்கிக் கொள்கிறார். பாபருடைய மறைவுக்குப் பிறகு, ஹுமாயூன் அவனுடைய தம்பிகளைக் கொன்று விடக் கூடாது.

ஹுமாயூன் சுபாவத்திலேயே நல்லவன். அவனுடைய தம்பிகளுக்கு பாபர் சாம்ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்து அவன் ஒரு பாகம் மட்டும் வைத்துக் கொள்கிறான். கடைசியில் அதற்கு ஆபத்து வந்து விடுகிறது.

அவன் நம்பிய அதிகாரியான ஷெர்ஷா ஆட்சியை அபகரிக்க, அரியணையைப் பறிகொடுத்து அவன் அகதியாக தம்பிகளிடம் போகிறான். ஆனால் தம்பிகள் இருவரும் துரத்தி விடுகிறார்கள். ஹுமாயூன் பதினைந்து ஆண்டுகள் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து, கடைசியில் தன் முயற்சியில் ஒரு படையைத் திரட்டி டில்லியைப் பிடிக்கிறான். ஆனால் அவன் அதிர்ஷ்டம், ஆறே மாதத்தில் ஒரு சிறிய விபத்து நேர்ந்து உயிரை விடுகிறான்.

எனக்கு இந்தக் கட்டத்தில் ‘உத்தம புத்திரன்’ புரிய ஆரம்பித்தது.ஹுமாயூனுக்கு ஒரே மகன். ஆதலால் பல மகன்களைப் பெற்றெடுத்த அரசனுக்கு உள்ள கவலைகள் இல்லை. ஹுமாயூன் மகன் அக்பருக்கும் ஒரே மகன்.

அதுவும் தவம் கிடந்து பிறந்த மகன். சலீம் என்ற பெயர், சலீம் சிஷ்டி என்ற சூஃபி யோகியுடைய பெயர். இந்திய விடுதலைப் போர் (1857) நடந்து பல ஆண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த ஃபதேபுர் சிக்ரியில் ஒரே ஒரு இடம் மட்டும் இன்றைக்கும் புதுக்கருக்கு போகாத நிலையில் இருக்கும்.

அது சலீம் சிஷ்டியின் தர்கா. ஃபதேபுர் சிக்ரி சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது. ஆனால் தர்கா பளிங்குக் கற்களில் கட்டப்பட்டது. மிகவும் அழகாக இருக்கும். மத வேறுபாடு இல்லாமல் எல்லாரும் வணங்கக் கூடிய இடம். சுமார் அறுநூறு ஆண்டுகள் வரலாறு உடைய தர்கா.அக்பருக்குப் பின் அரியணை ஏறிய சலீம், ‘ஜஹாங்கீர்’ என்று பெயர் வைத்துக் கொள்கிறான். அவனுக்கு நூர்ஜஹான் மூலம் ஒரு மகன்.

ஓர் ராஜபுத்திரப் பெண்ணின் மூலம் ஒரு மகன். ஜஹாங்கீர் இறந்ததும் போட்டி. இதில் ஒரு வினோதம்... எந்தப் பெண்ணுக்காக அவன் ஏழாண்டு காத்திருந்து மணந்தானோ, அந்தப் பெண்ணின் மகனுக்கு மகுடம் கிடைக்கவில்லை. குர்ரம் என்ற அரை இந்து, அரை முஸ்லிம் மகனுக்குக் கிடைத்தது. அவன்தான் பின்னர் ஷாஜஹான். நூர்ஜஹானின் மகன் ஷாரியருக்கு? கேட்க வேண்டியதில்லை. மரணம்.

ஷாஜஹானின் மகன்களில் இளையவன், ஔரங்கசீப்! அவனுக்கே ஷாஜஹானை சிறைப் பிடித்து காவலில் வைத்து அரியணை ஏறும்போது வயது நாற்பது. அவன் துரத்தித் துரத்தி மூன்று சகோதரர்களையும் குருடாக்கி, கை, கால்களை வெட்டிய பிறகுதான் கொன்றான். இப்போது ‘உத்தம புத்திரன்’ தொடக்கம் முழுமையாகப் புரிந்தது.

‘கார்சிகன் சகோதரர்கள்’ என்று அலெக்ஸாண்டர் டூமாவின் மகன் எழுதினார். அவர் பெயரும் அலெக்ஸாண்டர் டூமா. அவர் எழுதியதில் இது ஒன்றுதான் தொடர்ந்து வாசகர், திரைப்படத் தயாரிப்பாளர் கவனத்தில் இருந்து வருகிறது.

பெரியவரும் இப்படி இரட்டை இளவரசர்கள் கதை எழுதியிருக்கிறார். அது ‘மேன் இன் தி அயன் மாஸ்க்’. அதுதான் ‘உத்தம புத்திரன்’. இரு கதைகளுக்கும் சில சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஜெமினி ஸ்டூடியோ எடுத்த ‘அபூர்வ சகோதரர்கள்’, டூமாவின் மகன் எழுதியதைத் தழுவி எடுக்கப்பட்டது.

 இரு இந்திய இதிகாசங்களும் யாருக்கு அரியணை என்பது பற்றித்தான். அரச வம்சத்தில் பிறப்பதுதான் எவ்வளவு அபாயங்கள் கொண்டது! இந்திய விடுதலைப் போர் (1857) நடந்து பல ஆண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த ஃபதேபுர் சிக்ரியில் ஒரே ஒரு இடம் மட்டும் இன்றைக்கும் புதுக்கருக்கு போகாத நிலையில் இருக்கும். அது சலீம் சிஷ்டியின் தர்கா.

படிக்க

பைரப்பாவின் ‘ஆவரணா’ (2007) என்ற நாவல் தமிழில் ‘திரை’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பதிப்பகத்தி லிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான் ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக் கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக இருந்திருக்கிறது.

ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதியில் சரியாகத் திருத்தங்கள் செய்திருக்கலாம். (திரை - கன்னட மூலம் எஸ்.எல்.பைரப்பா, தமிழில்: ஜெயா வெங்கட்ராமன், வெளியீடு: விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப் பட்டு, சென்னை-600031. விலை: ரூ.300/-)

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்