ரஜினிக்கும் எனக்கும் போட்டி இதுவரைக்கும் இருக்கு!



கமல் ஸ்பெஷல் பேட்டி

சென்ற இதழ் தொடர்ச்சி...

 ‘‘ஒரு கட்டத்தில் கமல், ரஜினி ரெண்டு பேரும் ஒரே மாதிரி படம் தான் பண்ணிக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு ‘நாயகன்’, ‘குணா’, ‘மகாநதி’ன்னு புது ட்ராக் எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’’
‘‘ஆரம்பத்திலேயே அப்படித்தான். எனக்கு ஞாபகமிருக்கு. ஒரு வேப்ப மரத்தோட நிழலில் நானும் ரஜினியும் காரசாரமா பேசிக்கிட்டு இருந்த நேரம். இன்னிக்கும் அப்படித்தான். ‘நீ... வா... போ...’ன்னு பேசிக்கிறதை நிறுத்தி நாளாச்சு. 60 வயசில எனக்கு வியப்பு என்னன்னா, எங்க ரெண்டு பேருக்கும் வயசு அப்ப 25தான்.

‘பெரிய ஆளா வரப்போறோம்’னு தன்னம்பிக்கை அப்பவே ரெண்டு பேருக்கும் இருந்தது. நாம ரெண்டு பேரும் ‘வாடா... போடா...’ன்னு சத்தம் போட்டுப் பேசினால், பார்க்கிறவங்களும் அப்படிப் பேசுவாங்கன்னு, புரிஞ்சி, நிறுத்தினோம். வேறு ஒரு சம்பவத்திற்குப் பிறகு, ‘எதுவா இருந்தாலும் நாமதான் பேசிக்கணும், இன்னொருத்தர் தூது வரக்கூடாது’ன்னு பேசிக்கிட்டோம்.

அதனால் 30 வருஷமா எங்க நட்பு நிற்குது. இத்தனைக்கும் நாங்க சக போட்டியாளர்களே. ஒரு சமயம் ‘எல்லாப் படத்திலும் ஸ்டைல் பண்றீங்களே... மாத்திக்கலாமே’ன்னு கேட்டப்போ, ‘இந்த வேலையெல்லாம் வேண்டாம்.

 நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியும். அதை நீங்க பண்ணுங்க, இதை நாங்க பண்றோம்’னு சொன்னார். சிரிச்சேன் நான். ‘என்ன?’ன்னு கேட்டார். ‘இல்லை... புரிஞ்சது எனக்கு’ன்னு சொன்னேன். ‘கெட்டிக்காரத்தனமா’ன்னு கேட்டேன். ‘பாருங்க! இதுவும் ஜெயிக்கும், அதுவும் ஜெயிக்கும்’னு சொன்னார். அந்தப் போட்டி இதுவரைக்கும் இருக்கு.

இந்த நட்பில் பொறாமையை விட உத்வேகம் வரும். நல்லா இருந்தா ‘மிகச்சிறப்பு’ன்னு சொல்வேன். அதே மாதிரி அவரும் என் படங்களைச் சொல்வார். சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு, மாலையெல்லாம் போட்டு இருக்கார். திடீர்னு காலையில் மாலையோடு வந்து நின்னிருக்கார். அவரைப் பத்தி ஏதாவது விமர்சனம் இருந்தால், நேரா போன் எடுத்து சொல்வேன். அவர் மறுப்பார்.

‘இல்லை, நான் பண்ணினது ரைட்’னு சொல்வார். அதனால்தான் எங்க நட்பில் கொஞ்சமும் குறைவு இல்லை!’’‘‘சில நல்ல படங்களை எடுத்து, என்ன காரணத்தாலோ வேற டைரக்டர்களுக்கு அந்தப் படங்களுக்கான சிறப்பை கொடுத்திட்டீங்க. சினிமாவை ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு வேண்டுமானால் உங்க பங்கு புரியும். ஏன் அப்படி செய்தீங்க?’’

‘‘எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். எனக்கு சினிமான்னா வீட்டில சமைக்கிற மாதிரி. அக்கா உப்பு போட்டாங்க, தங்கச்சி நறுக்கிக் கொடுத்தா, அம்மா சமையல் பண்ணுவாங்க. எப்படி
யிருந்தது சமையல்னா அம்மாவைத்தான் காட்டுவாங்க. ஒரு நாளைக்கு அப்பாகிட்ட மட்டும் ‘இன்னிக்கு உங்க பொண்ணு சமைச்சது’ன்னு சொல்லுவாங்க. இதையெல்லாம் நான் கத்துக்கிட்டது கே.பி.கிட்ட. அங்கே ரிஃப்ளெக்டர் பிடிச்சிருக்கேன். எடிட்டிங் போயிருக்கேன். ‘புன்னகை மன்னனி’ல் கதாநாயகன் விழுகிற மலை உச்சிக்கு லொகேஷன் பார்க்கப்போனது நான்தான்.

இப்படியெல்லாம் சேர்ந்து வேலை செய்திருக்கோம்னு பெருமை கிடையாது. சொன்னதைக் கேட்டு அதை எடுக்க ஒருத்தர் தயாராக இருந்ததுதான் பெரிய விஷயம். எல்லாத்திலும் பங்கு இருக்கு, இல்லைன்னு சொல்லிடலாம். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் ‘கல்யாணம் கச்சேரி’ பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன்.

அதை ‘படியில் இறங்கிட்டே ஆடுறியா’ன்னு கேட்டது கே.பி. ஆட முடியும் என்ற திறமையைக் காட்டினது மட்டும் நான். அப்ளாஸ் எனக்குத்தான் வந்தது. யாரும் கே.பியை நினைச்சு கை தட்டலை. நான் டாலர் தெரிய போன் பண்ணிப் பேசும்போது, இளைஞர்களுக்கு அது குதூகலம்தான். அது என் நடிப்பில்லை. கே.பி. எழுத்தில் அப்படி இருந்தது. அது அவர் பண்ணின காதல். ஆனால் எனக்கு ‘காதல் இளவரசன்’னு பட்டம் வந்துச்சு.

இப்படி எனக்கு வாய்ப்பைக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. இப்ப ‘பாபநாசத்தை’ ஜீத்து ஜோஸப் டைரக்டர் பண்றார். என்னுடைய கல்வியில் ஜீத்து செய்யும் நல்ல விஷயங்களும், அவர் செய்யும் தவறுகளும் என் பாடப் பட்டியலில் வந்துடுது. சினிமா ஒரு ஜனநாயகக் கலை. பெயின்டிங் மாதிரி ‘கேன்வாஸ் ஆச்சு, ஓவியர் ஆச்சு’ன்னு ஒதுங்கிட முடியாது. கவிதைன்னா பேனா, பேப்பர், வைரமுத்து... அவ்வளவுதான்! வேற யாரும் அங்கே விளையாட முடியாது. ஆனால், சினிமா அப்படியில்லை.

வைரமுத்து, இளையராஜா எல்லாரும் சேர்ந்தது தான். அந்தப் பாடலை ஒருத்தர் நல்லாவும் படம் பிடிக்கணும். காட்சிகள் வரிசையா போகணும். எல்லாம் பண்ணிட்டு ஹீரோவும், ஹீரோயினும் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிட்டு நிற்கக் கூடாது. கம்பனின் ராமாயணம் மாதிரி யாராவது ஒரு ஆளுக்குத்தான் பெயர் நிக்கும். கூட இருந்து படி எடுத்தவன் எல்லாம் காணாமல் போயிடுவான். பரவாயில்லை, அவங்க இல்லாமல் கம்பன் இல்லை!’’

‘‘நடிப்பு மாதிரியே உங்க எழுத்தும் தனிமொழி. நாவல் எழுதப்போவதாக செய்தி கசிந்தது. அப்படியா?’’

‘‘ஜெயகாந்தனைத் தொட்டுப் பார்த்திருக்கேன். கை குலுக்கியிருக்கேன். கண்ணதாசனைப் பார்த்திருக்கேன். பாரதியாரைப் பார்த்ததில்லை. இவங்களோடு இருந்ததெல்லாம் கிட்டத்தட்ட பாரதியைத் தொட்ட மாதிரிதான். திருவல்லிக்கேணி யானைக்குக் கிடைச்ச சந்தோஷம் எனக்கும் உண்டு. இரண்டு பேரையும் ஒண்ணா தொட்டது பாரதியாரை முட்டினதுக்கு சமம். நாவல் எழுதுவது பெரிய விஷயம்.

 நானும் ஜெயமோகனும் பேசிக்கிட்டு இருந்தோம். 956 பக்கமுள்ள அவர் நாவலைத் திருப்பிப் பார்ப்பேன். வயிற்றைக் கலக்கும். எவ்வளவு பெரிய வேலை! அதைப் பார்த்து அவர்கிட்ட வியக்கும்போது, ‘உங்களுக்கு ஸ்கிரீன்ப்ளே எழுத எத்தனை பக்கம்?’னு கேட்டார். ‘ஒரு ஸ்கிரிப்ட் எழுத 1000 பக்கம் ஆகும்’னேன்.

‘மர்மயோகி’ எழுதும்போது 20 டிராப்ட் எழுதியிருக்கேன். அதுக்கு முக்கியமான பயிற்சி... கவிதை எழுதுறதுதான். ‘எதுக்கு எழுதறீங்க’ன்னு கேட்டா, ‘காதல் பண்றது எதுக்கு?’ன்னு கேட்கிற மாதிரிதான். காதல் இருக்கு, இளமை இருக்கு... இதுதான் பதில். கவிதை எழுதுவதால் திரைக்கதை சிறக்கிறது; சிக்கனப்படுகிறது; முறுக்கேறுகிறது. சுந்தர ராமசாமி இறந்த பிறகு, ‘இந்த மாதிரி ஒருத்தர் இருந்தார்’னு பேசிக்கிறதில் அர்த்தம் இல்லை. இருக்கும்போது நான் எப்படி நாகேஷை சொல்லிக்கிட்டு இருந்தேனோ, அப்படி ஜெயமோகனையும் சொல்லுவேன்.

நான் ‘இளையராஜாவை நல்ல மியூசிக் டைரக்டர்’னு சொல்றது அவருக்கே கேட்கணும். எனக்கே யாராவது ஒருத்தர் ‘நல்ல நடிகர்’னு சொல்லிக் கேட்கணும். அப்பதான் என் நடிப்பு நல்லாயிருக்கும். இப்ப வேண்டாம், கர்வமாகிடுவான்னு சொல்லுவாங்க.

உங்க பாராட்டுதான் என்னை கர்ப்பமாக்கும். அடுத்த பிரசவத்திற்கு அதுதான் விதை!’’‘‘இப்பவும் நீங்கதான் மேக்கப்பிற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறீங்க...’’‘‘துரோணராக நடிக்கும்போது ஏன் தாடி வைக்கணும்? காந்தியாக வரும்போது கண்ணாடி எதுக்கு... கைத்தடி எதுக்கு? சினிமாவில் எல்லா தொழில்நுட்பமும் வரும்.

பழமைவாதிகள்தான் இதெல்லாம் ‘ஏன்’னு யோசிப்பாங்க. முன்னாடி 14 பாட்டு பாடி, நடிச்சிட்டு இருந்தாங்க. ‘அதை ஏன் நீக்கலை’ன்னு யாரும் கேட்கலை? இன்னும் ஏன் பாட்டு பாடிக்கிட்டிருக்கீங்க? வக்கீலும் டான்ஸ் ஆடுறான்... கணக்குப் பிள்ளையும் டான்ஸ் ஆடுறான். அதை யாரும் விமர்சனம் பண்ணலை. அகத்தியரா நடிக்கிறவர் குள்ளமா இருக்கிறதில் தப்பு கிடையாது. அவருக்கு கையில் கமண்டலம் இருந்தால்தான் புரியும்.

சிவனா நடிச்சா நெத்தியில் ஒரு கண்ணை வரைஞ்சுதான் ஆகணும். அதையெல்லாம் கேள்வி கேட்கிறது மேட்டுக்குடித்தனம். சிவனா நடிச்சா கையில் திரிசூலம் வேணும். நீலக்கலர் அடிக்கணும். திரிசூலம் இல்லைன்னா ராமரா, சிவனான்னு தெரியாது. எல்லாம் சினிமாவுக்கு அவசியம்தான்!’’

‘‘இவ்வளவு பிடிவாதமா நாத்திகத்தை அனுசரிக்கும் விதம் எப்படி கை வந்தது? யாரையும் புண்படுத்தாத நாத்திகம் உங்களோடது...’’‘‘நாத்திகம் கொஞ்சம் புண்படுத்தத்தான் செய்யும். செருப்பு கூட புதுசா இருந்தா புண்படுத்துது. கலவியிலேயே கூட புண் ஆகுது. காரம் கொஞ்சம் அதிகமானா, நாக்கு புண்ணாகும். பாதிப்பு இருக்கத்தான் செய்யும். காலராவுக்கு என்ன காரணம்னா ‘தண்ணீர்’னு முடிக்கிறாங்க. தண்ணீர் விரோதியில்லை; அழுக்கான தண்ணீர்தான் காரணம். ராமானுஜரும், பெரியாரும் அண்ணன் தம்பிதான்.

இருக்கும் சம்பிரதாயங்களை எல்லாம் தூக்கி எறிந்து கோபுரத்தில் ஏறி ‘எல்லோருக்கும் கத்துக் கொடுப்பேன்’னு சொன்னார் ராமானுஜர். ‘யாரடா சூத்திரன், யாரடா தீண்டத்தகாதவன், யாரடா மிலேச்சன், கொண்டு வா அவனை’ன்னு பூணூல் போட்டு பிராமணன் ஆக்கினது நாத்திகம் இல்லையா?

கலைஞர் ‘பராசக்தி’யில் தந்த வசனமும், பைபிளில் இருக்கிற வரியும் ஒரே வரிதான். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது’ என சொன்னது. Tent of  thievesங்கிற  வார்த்தையே அதில் வருது. அவரும் நாத்திகர்தான். என் கணிப்பு இது. அவரை ஆரம்ப கம்யூனிஸ்ட்னு சொல்லலாம்.

புத்தரும் ஒரு காலத்தில் நாத்திகர். பிறகு அவரே மதமாகப் போகிறார்னு அவருக்கு தெரிஞ்சிருக்காது. நாளைக்கு பெரியார் களஞ்சியம் பைபிளா மாறிடக் கூடாது. பாசம் மிகுதியால், பக்தியாகி, அது மதமாகி விடக் கூடாது. மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள், அது எந்த மதமா இருந்தாலும் எனக்கு சம்மதமில்லை. எனக்கு நாத்திகம் கூட முக்கியம் கிடையாது. மனிதன்தான் முக்கியம். மனிதர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.

மதத்தை வியாபாரமாக்கி விளையாடுகிறவர்களை தண்டிக்கிறோமோ இல்லையோ... தள்ளி வைக்கணும். தீண்டக் கூடாதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்றால், இது மாதிரி துரோகிகள்தான். குழந்தைகளைக் கற்பழிக்கும் சாமியார்கள் கூட இதில் இருக்காங்க. செல்போனில் தன் காமலீலைகளைப் போட்டு வச்சிருக்கிற அந்த சாமியாரிடம் விபூதி வாங்கித் திங்கலைன்னா என்ன கெட்டுப் போச்சு! இது புரியமாட்டேங்குதே... இந்த அக்கிரமத்தை பொறுக்க முடியலையே!’’

(அடுத்த இதழிலும் தொடர்கிறது கமல் மொழி!)

- நா.கதிர்வேலன்
படங்கள்: கிரண் ஷா
ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்