ஆர்யா வீட்டில் போட்டி ரெடி!



‘‘நல்லா யோசிச்சுப் பாருங்க... அரசு, போலீஸ், நிர்வாகம், அதிகாரிகள் எல்லாம் ஏழை, எளிய மக்களுக்கானது. ஆனால், இவர்கள் யாரையாவது நம்மால் சுலபமா அணுக முடியுமா? ஒரு எளிய மனிதனுக்கான நீதி இங்கே இருக்கா? வெக்கையும் புழுக்கமும் நிறைஞ்ச இந்த மக்களின் வாழ்க்கையில் வந்து ஈஸியா கலக்குற மேல் வர்க்கத்தை எங்கேயாவது பார்த்ததுண்டா..?


 அதனாலேயே இந்த மக்களின் வாழ்க்கையில் எப்பவும் வன்முறை கலந்தே நிற்குதோ! இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, ஒருவகையில் மக்கள் கொண்டாட வேண்டிய படமா, ‘எட்டுத்திக்கும் மதயானை’யை எடுக்கிறேன்’’ - வித்தியாசமாகப் பேசுகிறார் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி. ‘ராட்டினம்’ படத்தில் அதிக கவனம் ஈர்த்தவர்.

‘‘ஏதோ மெசேஜ் சொல்ல வர்றீங்களோ..?’’‘‘இப்பல்லாம் நேரடியா நீதி சொல்வது இங்கே யாருக்கும் பிடிக்கறதில்லை. கதையோட்டத்துல நம்மை அறியாமல் கலந்து நீதி வந்தால்தான் எடுபடுது. பழைய படங்களில் பாருங்க, அப்பா, அம்மா, மாமனார், மாமியார், அத்தை, மாமா, அண்ணன், தங்கச்சி...

இப்படி குடும்பத்தில் எல்லாருமே அருமையான கல்யாண குணங்களோட இருப்பாங்க. யாருக்கு யார் ரொம்ப நல்லவங்க என்ற போட்டிதான் படமே. இப்ப அப்படியா இருக்கு? இங்கே இருக்கிற தவறுகள், ஒரு சாதாரண மனிதனைக் கூட தப்பா மாற்றுவதற்கான எல்லா இடங்களையும் சூழலையும் தருது. படத்தின் ஆரம்பப் பகுதியில் அதிகாலை வெயில் தருகிற சுகம், பிற்பகுதியில் உச்சிகால வெயில் தர்ற ரணமுமாக வர்ற கதை ‘எட்டுத்திக்கும் மதயானை’.

இந்தக் கதையை எழுதி முடிச்சதும் எனக்குத் தோன்றிய தலைப்புதான் இது. ஆனால், ‘நல்லாயிருக்கா’ன்னு சில நண்பர்களிடம் கேட்டவுடனே, ‘கதை ரொம்ப நல்லாயிருக்கு. ஆனால், தலைப்பு மட்டும் நாஞ்சில் நாடனுடையது’ என்கிறார்கள். நான் கோவையில் போய் நாஞ்சில் நாடனைப் பார்த்தேன். ‘என்னங்க ஆச்சரியமா இருக்கு, கதையையே திருடுறாங்க. நீங்க என்னன்னா தலைப்புக்கு அனுமதி கேட்டு இவ்வளவு தூரம் வந்து நிற்கிறீங்க’ன்னு ஆச்சரியப்பட்டு அனுமதி தந்தார்!’’‘‘எப்படியிருக்கிறார் ஆர்யா தம்பி சத்யா?’’

‘‘மிடுக்கான டிரெயினிங் போலீஸா வர்றார். படத்தின் தன்மையை ஈஸியா புரிஞ்சுக்கிறார். இது ஒரு ஃபீலிங்கான கதை. ‘ராட்டினம்’ வந்தப்போ நிறைய பேரின் கவனம் கிடைச்சது. முற்றிலும் புதுமுகங்கள்னாலும் எல்லாரும் ஆசையா பார்த்த படம். அந்தப் படத்தில் எனக்குத் தெரிஞ்ச குறைகளைக் கூட இதில் களைஞ்சிருக்கேன்.

 இன்னும் சரியான நேரத்தில் இன்னும் அருமையா வெளிப்படுவார் சத்யா. அப்போ நிச்சயமா ஆர்யாவுக்கு வீட்டுக்குள்ள போட்டி இருக்கு. வாழ்க்கை உருட்டி விடுகிற மாயக்கட்டைகள் மாறி விழுந்து ஒருத்தனுக்கு என்னவெல்லாம் சங்கடங்கள் நேர்கின்றன என நீங்கள் பார்க்கலாம். காதலும் வேகமுமா இருந்த பையன் திசைமாறுகிற கணம் அருமையா பதிவாகி இருக்கு. நிஜமாகவே சத்யாவுக்கு பெயர் சொல்ற படம்!’’‘‘ஹீரோயின் அழகா இருக்காங்க!’’

‘‘ஆமாம். ஸ்ரீமுகின்னு பெயர். லோக்கல் சேனலில் அலப்பறை கொடுக்கிற பொண்ணு. ‘மதுபானக் கடை’யில் நடிச்ச துர்கா இருக்காங்க. ‘ராட்டினம்’ படத்தில் வந்த மாதிரி ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நானும் வர்றேன். ‘ராட்டினம்’ ஹீரோ லகுபரனும் இருக்கார். ஒரு ஒழுங்கான திரைப்படத்தை அளிக்கிற முயற்சியில் நல்ல ரிசல்ட் வந்திருக்கு.

இரட்டை அர்த்த வசனம், குத்துப்பாட்டு இதற்கெல்லாம் வேலையே இல்லாமல் கதை இருக்கு. உண்மையான மையப்புள்ளியை வச்சு படம் செய்திருப்பதால் படத்தில் அசல் தன்மை இருக்கும். இதில் யதார்த்தம்தான் பிரமாண்டம். இது என்னோட ரெண்டாவது படம்தான். ஆனால், நம்பிக்கையான படமா இருக்கும். என் படம் பார்த்துட்டு வெளியே போற ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை மேல் நம்பிக்கை வரும்.

சக மனுஷங்க மேலே இன்னும் அன்பு கூடும். வன்முறை, ஆபாசம் எதுவும் என் படங்களில் எப்பவும் இருக்காது. அதுதான் என் அடையாளம். ஒரு தனி மனிதனை கவனிக்காமல் விட்டால் எப்படியெல்லாம் அவன் மாறுவான் என்பதுதான் ஒற்றை வரிக் கதை. உலகமே கேள்விப்படாத கதைனு சொல்ல மாட்டேன்.

நல்ல கதைக்கு அவசியமான ட்விஸ்ட், சுவாரஸ்யம் சேர்த்திருக்கேன். இது இந்த மண்ணின் - மனிதர்களின் கதை. நிச்சயம் ஒரு பரபரப்பான கதைக்கு உங்களைத் தயார் செய்துக்கிட்டா ஏமாற மாட்டீங்க. இது உறுதி!’’

- நா.கதிர்வேலன்