கவிதைக்காரர்கள் வீதி




பாம்புச் சட்டை
கிளையில் தொங்கும்
பாம்புச் சட்டையைப் போல்
பயமுறுத்துகின்றன சூழல்கள்
சூறாவளிக்குச் சிக்காத சிலந்தி வலைகள்
சூழலுக்கு திகைக்கும்
என்னை கேலி செய்வது நியாயம்தான்
என்னை எதிரியென்று நினைத்து
ஓடவோ, விஷம் கக்கவோ
முனைந்து கொண்டிருக்கிறது பாம்பு.

இரை இல்லாதபோது
குட்டியைத் தின்னவும்,
குட்டிகளுக்கு ஆபத்தென்றால்
கடித்துக் கொல்லவும்
பக்குவப்பட்ட பாம்பைப் போல்
பம்மிப் பம்மி
துணிந்து துணிந்து 
நகர்கிறது வாழ்க்கை.

கண்ணீர் இயலாமை
எங்கும் இறைந்து கிடக்கின்றன
முத்திரை குத்தப்பட்ட
அஞ்சல் தலைகள்
வண்டுகளுக்குத்தான்
அழைப்பு கொடுக்கும் பூக்கள்
காதலர்கள் கவரும்போதும்
மறுப்பேதும் சொன்னதில்லை
சொந்தமாய் ஒரு வானவில்
வரைந்து
அதன் திசையிலே
என்னை மறைத்துக்கொள்ளும்
சூரியனாகிறேன்...
விடியல் என்னை என்று உணர்த்தும்?
அவசியமற்ற வேளை பெய்யும்
மழையாய்
கான்க்ரீட் கூரையைப் பிளந்த
விதையாய்
காலம் கடந்து தருகிறாய்
ஒரு பச்சாத்தாபத்தை
மறுக்கத் திராணியற்று
கையேந்துகிறேன் நான்.


கு.திரவியம்