விஜய் ஃபேமிலியில் இன்னொரு ஹீரோ!



எஸ்.ஏ.சந்திரசேகரன் ஃபர்ஸ்ட் லுக்

‘‘என் புது முயற்சி இது. 32 வருஷமா டைரக்டர் சீட்ல உட்கார்ந்தாச்சு. 68 படங்கள் பண்ணியிருக்கேன். இன்னிக்கு வரை என்னை ஒரு சமூக அக்கறையுள்ள எழுத்தாளனா நிலை நிறுத்திக்கத்தான் விரும்பி உழைச்சிருக்கேன். கடைசியா நான் ‘சட்டப்படி குற்றம்’ படம் பண்ணி 3 வருஷமாச்சு. இந்த கேப்ல சும்மா இல்லை. இன்னிக்கு ட்ரெண்ட் என்ன, டேஸ்ட் என்னன்னு ஸ்டடி பண்ணி, என்னை ரெடி பண்ணி, களத்துல இறங்கியிருக்கேன்!’’

- புதுப்பட இயக்குநர் போல ஃப்ரஷ் காட்டுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இப்போது, ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தை இயக்கியிருக்கும் எஸ்.ஏ.சி, அதில் 75 வயது வாலிபராக நடிக்கவும் செய்திருக்கிறார்.

‘‘உங்க வாழ்க்கை வரலாறு தான், கதையாமே?’’‘‘அப்படியும் சொல்லிக்கலாம். டூரிங் டாக்கீஸ்ல டெய்லி ரெண்டு ஷோ நடக்கற மாதிரி, ஒரு படத்துல ரெண்டு கதைகள். என் இளமைக்காலத்தில் பல நல்ல விஷயங்களையும் பண்ணியிருக்கேன். சில தவறுகளையும் செய்திருக்கேன். பயோகிராபின்னா தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கும். எனக்கு அதில் உடன்பாடில்லை. என் வாழ்க்கையில் நான் முன்னுக்கு வந்ததையும், காதலையும் மட்டும் சொல்லியிருக்கேன்!’’‘‘லவ்வா?’’

‘‘ஆமாம்... நான் பாளையங்கோட்டையில் பி.யூ.சி. படிக்கிறப்ப, ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். அதான் என் முதல் காதல். அப்புறம் சென்னை வந்துட்டேன். அந்தப் பெண்ணை பார்க்கவோ, பேசவோ முடியலை. என்னோட ரெண்டாவது காதல்தான் ஷோபா. அஞ்சு வருஷமா லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒருநாள் கூட நாங்க பீச்சுக்கோ, பார்க்குக்கோ தனியா போனதில்லை. மனசுக்குள்ளேயே வளர்த்துக்கிட்ட காதல் இது. உண்மையான காதல்னா அதானே! 

அந்த 25 வயசு கேரக்டர்ல அபி சரவணன் நடிச்சிருக்கார். ஏற்கனவே 2 படங்கள் பண்ணினவர். இளமைக்கால காதலியா பாப்ரி கோஷ்னு பெங்காலி பொண்ணை அறிமுகப்படுத்தி
யிருக்கேன். 25 வயசில பண்ணின காதலை நினைச்சிட்டு வாழுற 75 வயது வாலிபனின் காதல் தேடுதல்தான் முதல் கதை.ஒரு கிராமத்து ஏழைப் பெண் ணின் பாசத் தேடுதல் இன்னொரு கதை. இதில் மெசேஜ், சமுதாய அக்கறை, பாசம் எல்லாம் இருக்கும்.

ஹீரோயினா சுனுலட்சுமின்னு கேரளப் பொண்ணு. அஸ்வின்குமார், காயத்ரின்னு எல்லாமே புதுமுகங்கள்தான். அருண்பிரசாத் ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத் - ரஜிஷ் எடிட்டிங். எம்.ஆர்.ராதா மாதிரி நகைச்சுவை கலந்த வில்லனா ரோபோ ஷங்கர் நடிச்சிருக்கார்.

முழுக்க முழுக்க தேனியிலதான் ஷூட்டிங். வெறும் டைரக்டரா படம் பண்ணினதுக்கும், விஜய்யோட அப்பாவா அறியப்பட்ட பிறகு இப்ப படம் பண்றதுக்கும் அவ்வளவு வித்தியாசம். தேனியில விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த முருகேசன், பாண்டி, பிரகாஷ்னு மூணு பேரும் அவங்க வேலையை எல்லாம் விட்டுட்டு என் கூடவே இருந்து வேலைகளை கவனிச்சாங்க!’’‘‘இளையராஜா...’’

‘‘ம்ம்... இசைஞானி இசையில எஸ்.ஏ.சந்திரசேகரன் என்ற நடிகன் உருவாகப் போறான். படத்தில 3 பாட்டுதான் ப்ளான் பண்ணினோம்.. ஆனா, ரீரெக்கார்டிங்ல படத்தைப் பார்த்துட்டு அங்கங்கனு மொத்தம் 7 பாட்டு போட்டிருக்கார் ராஜா. ‘நீ நடிக்கவே இல்லைய்யா... என்ன யதார்த்தமோ அதை பண்ணியிருக்கே’ன்னு என்னை வாழ்த்தினார்!’’
‘‘ஒரு சீனியரா இப்போதைய ஷார்ட் ஃபிலிம் தலைமுறையை எப்படிப் பார்க்குறீங்க?’’

‘‘அப்போ எங்களுக்கு டெக்னாலஜி தெரியாதே தவிர, ஒவ்வொருத்தரும் ஒரு ஸ்கூல் மாதிரி இருந்தோம். நான் நாலஞ்சு டைரக்டர்கள்கிட்ட வொர்க் பண்ணித்தான் சினிமாவுக்கு வந்தேன். ஷங்கர் என்கிட்ட 17 படங்களுக்கு வேலை பார்த்தார். ஒரு காமெடி நடிகன், காமெடி ரைட்டராத்தான் என்கிட்ட அவர் வந்தார்.

‘பூந்தோட்டக் காவல்காரன்’ எடுத்த செந்தில்நாதன், பவித்திரன், ராஜேஷ், பொன்ராம்... இவங்களை எல்லாம் நான் உருவாக்கியிருக்கேன். இப்போ டெக்னாலஜி வளர்ந்துடுச்சு. அதுக்கேத்த மாதிரி இளைஞர்கள் புதுப்புது ஐடியாக்களோட வர்றாங்க, ஜெயிக்கிறாங்க. ஆனா, அவங்களும் நிலைக்கணும். நல்ல அடித்தளம் போட்டு வந்த ஷங்கர், செந்தில்நாதன் இவங்களோட படங்கள் வேணா கம்மியா இருக்கலாம். அத்தனை படங்களும் சக்சஸ். ஷங்கர் படத்துக்கு படம் இன்னும் மேலேதான் போறார்... அடித்தளம் சரியா இருக்கணும்!’’

‘‘இன்னமும் ஹீரோ, டைரக்ஷன்னு இளைய தலைமுறைக்கு டஃப் கொடுக்கறீங்களே..?’’‘‘இளைய தலைமுறை வரணும். ஆனா, நாங்களும் எனர்ஜி இருக்கற வரை படம் பண்ணுவோம். இளம் இயக்குநர்கள் எப்படி ஜெயிக்கிறாங்கன்னு அவங்களோட படங்களைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். உடம்புக்குத்தானே வயசு. புதுசா கத்துக்கிட்டே இருந்தா மனசை இளமையாக்கிக்கலாம்!’’‘‘ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் கவனிக்கிறீங்களா? விஜய்யைத் தான் அதிகமா ஓட்டுறாங்க..?’’

‘‘எல்லாத்தையும் கவனிக்கிறேன்... விஜய் படம் எடுக்கணும்னா, கிட்டத்தட்ட ஒரு வருஷம் உழைக்கிறாங்க. அவ்வளவு உழைப்பையும் பணத்தையும் சரியா புரிஞ்சிக்காம, மனசாட்சி இல்லாம விமர்சனம் பண்றாங்க. திறமையானவங்களுக்கு பாராட்டு கொஞ்சம்தான் கிடைக்குது. பொறாமை அதிகமாகிடுச்சு.

யூகத்தின் அடிப்படையில் படமே பார்க்காமல் ஒருசிலர் மார்க் போடுறாங்க. முன்னெல்லாம் இதுக்காக மனசு கஷ்டப்படுவார் விஜய். ஆனா, இப்போ ‘அதையெல்லாம் ஏம்ப்பா படிக்கிறீங்க?’னு என்கிட்ட கேட்குறார். பக்குவம் ஆகிட்டார்!’’
‘‘இந்தப் படத்தோட, டைரக்ஷனுக்கு குட் பை சொல்லப் போறீங்களாமே?’’

‘‘நோ... நோ... (பதறுகிறார்) நான் சுவாசிக்கிறதே சினிமாவைத்தான். படம் பண்ணலைனா, சுவாசம் நின்னுடும். ஒரு தந்தையா மகனுக்கு பண்ண வேண்டியதை பண்ணிட்டேன். அவர் டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அவர் ஆக்டராகணும்னு சொன்னார். நான் முடியாதுனு சொன்னதும் வீட்டை விட்டு ஓடினார்.

 பிடிவாதமா இருந்தார். நான் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்ததால மகனை ஹீரோவா அறிமுகப்படுத்த முடிஞ்சது. அவரோட முதல் அஞ்சு படங்கள் என்னோடதுதான். கொஞ்சம் கொஞ்சமா மெரூகேத்தி, அப்புறம்தான் வெளியே விட்டேன். ‘அப்பா உழைச்சிட்டார்... எல்லா மொழிகள்லயும் படங்கள் பண்ணிட்டார். இன்னும் ஏன் உழைக்கணும்?’னு மகனா அவர் ஆதங்கப்படுறார். என் வயது விஜய்க்கும் ஆகும்போதுதான் என் நிலை புரியும். படைப்பாளிக்கு ரிட்டயர்மென்ட்டே கிடையாது. பாலு

மகேந்திரா இறக்குறதுக்கு பத்து நாட்களுக்கு முன்னாடி கூட, ‘இந்த வருஷத்துக்குள்ள இன்னும் ரெண்டு படங்கள் பண்ணணும்’னார். அவரை மாதிரிதான் நானும். இன்னிக்கும் 7 மணி ஷூட்டிங்னா, 6.50க்கு ஸ்பாட்ல இருப்பேன். கடைசி மூச்சிலும் சினிமாவை நேசிப்பேன். இதை எல்லாம் விஜய்கிட்ட சொல்றதில்லை. இந்தப் படம் நிச்சயமான வெற்றினு தெரியும்போது, அதைப் பண்ணாம எப்படி விடமுடியும்?!’’

-மை.பாரதிராஜா