அழியாத கோலங்கள்



சமீபத்தில்தான் சினிமாவில் மரத்தைச் சுற்றி பாடிக்கொண்டே ஓடுவது பற்றி பேசியதும் எழுதியதும் நினைவுக்கு வருகிறது. கல்லூரி யில் படிக்கும்போது எனக்கு மட்டும் காதல் வரவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். கல்லூரிக் காலத்தில் பார்த்த படங்கள் ஜானி வீஸ்முல்லர் நடித்த பத்துக்கும் மேற்பட்ட டார்ஜான் படங்களாக இருக்கும்.

அவர் ஒலிம்பிக்கில் ஐந்து தங்கப் பதக்கங்கள் வாங்கிய நீச்சல் வீரர். அதேபோல் எஸ்தர் வில்லியம்ஸ் என்ற பெண்மணி நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்று கேள்வி. அவர் நடித்த Bathing Beauty  என்ற படம் வந்தது. நிறைய காட்சிகள் நீச்சல் குளத்திலே எடுக்கப்பட்டவை.

அந்த நாட்களில் சென்னையில் இரண்டு நீச்சல் குளங்கள்தான் இருந்ததாக ஞாபகம். மெரினா கடற்கரையில் ஒன்றும் சைதாப்பேட்டை விளையாட்டுக் கல்லூரியில் ஒன்றும் பார்த்திருக்கிறேன். ‘  Bathing Beauty’   படத்தில் குளியலழகியைப் பார்த்தபிறகு அந்த 17 வயதில் ஒரு காதல் வந்து,

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் நீச்சல் குளத்திலேயே ஊறிவிட்டு அதன் பின் வரும் தூக்கத்தின் கனவில் நான் ஒரு ஜானி வீஸ்முல்லர் போல் டார்ஜான் ஆகி ‘ஓஓஓஓஓஓஓ’ என்று ஊளையிடுவேன். அதைக் கேட்டு எஸ்தர் வில்லியம்ஸ் தோன்றி என் காதலை ஏற்றுக் கொள்வார் என நம்பினேன். வக்கீலானதும் பரமக்குடி வெயிலில் காதல்கள் எல்லாமே ஆவியாகிப் போய்விட்டன.  

பரமக்குடியில் மட்டுமில்லை - ராமநாதபுரம் மாவட்டத்திலேயே வருடத்தில் 10 மாதங்கள் தண்ணீர் பஞ்சம். மழை மறைவுப் பிரதேசம் என்று பெயர் வாங்கிய ஜில்லா. ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர், மாவட்ட நீதிபதி, மாவட்ட மருத்துவ அதிகாரி எல்லோரும் மதுரையில்தான் இருந்தார்கள். காதல்கூட வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான். அந்தக் காதலும் மதுரையில்தான் கிடைக்கும்.

என்னுடைய பக்தி பரமக்குடி அனுமார் கோயில் வடையிலிருந்து மதுரையில் மட்டும் கிடைக்கும் ரோஸ் மில்க்குக்கு பிரமோஷன் வாங்கி மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சித்திரை வீதி சுவரில், ‘இங்கு இருந்த விபசாரிகளெல்லாம் வெளியேற்றப்பட்டு விட்டதால் குடும்பஸ்தர்கள் குடி வரலாம்’ என்று வெள்ளை பெயின்ட்டில் எழுதப்பட்டிருக்கும். 

எனக்குத் தெரிந்த வக்கீல் பிள்ளைவாள் ஒருவர்தான் கொஞ்சம் அதிக செலவு செய்து அவருடைய ‘ஸ்டெப்னியை’ மதுரையில் வைத்திருந்தார். என் பள்ளிப் பருவத்தில் பரமக்குடியில் பவுண்டு தெரு என்று ஒரு தெரு.

Pound     என்பது ஆங்கிலச் சொல். அங்கே பரமக்குடி பஞ்சாயத்துக்கு ஒரு பெரிய கேட் போட்ட காம்பவுண்ட் உண்டு. இது ‘பவுண்டு’ எனப்படும். வயல்களில் தன்னிச்சையாக மேய்ந்த மாடுகளைக் கொண்டுபோய் அடைத்துவிட்டால், மாட்டின் சொந்தக்காரர் தீனி செலவும் அபராதமும் கட்டி மீட்டுக் கொள்ளலாம்.  

நீச்சலழகி எஸ்தர் வில்லியம்ஸ் காதல் எனக்கு ஒரு வருடத்திலேயே வெறுத்துப் போய்விட்டது. ‘Blood   and  Sand'   என அடுத்த படம் வந்தது. அதன் டிரெய்லரிலேயே மயங்கி விட்டேன். Rita   Hayworth alluring and passionate...   எனக்கு முழுப்பொருளும் தெரியாத இந்தச் சொற்களையே திரும்பத் திரும்ப ஆங்கிலத்தில் சொல்லி என் காதலியை மாற்றிக் கொண்டேன்.

அப்போது இடி போன்ற ஒரு செய்தி வந்து என் 18 வயது இதயத்தை இரண்டாகப் பிளந்து விட்டது. ரீட்டா ஹேவொர்த், இஸ்லாமிய மதத் தலைவர் ஆகா கான் அவர்கள் மகன் பிரின்ஸ் அலி கானை மணந்து கொண்டது தெரிந்து, லயோலா கல்லூரியில் நான் தூக்கு போட்டுக் கொள்ள பொருத்தமான மரம் தேடி, அது கிடைக்காததால் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டேன்.    

‘பரமக்குடி சீனிவாச அய்யங்கார் மகன் ஒரு வெள்ளைக்காரியை காதலிக்க முடியாது’ என்று பின்னால் புரிந்தது. ஒருவேளை சீனிவாச அய்யங்காரே ஒப்புக்கொண்டாலும், ஒரு இந்தியனை அந்த வெள்ளைக்கார நடிகைகள் ஏற்க மாட்டார்கள் என்பதும் தெரிய வந்தது. அதற்கேற்றாற்போல் ‘ஞானசௌந்தரி’ என்ற கிறிஸ்துவப் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. மறைந்த நடிகை எம்.வி.ராஜம்மா ‘அருள் தாரும் தேவ மாதாவே...

 ஆதியே இன்ப ஜோதி’ என்று பாடிய பாடலை 20 தடவை பார்த்தும் கேட்டும், ‘காதலித்தால் எம்.வி.ராஜம்மாவைக் காதலிப்பது. இல்லாவிட்டால் கல்லை வைத்து தட்டிக்கொள்வது’ என்ற பழமொழிப்படி அதையே  கொள்கையாக - நம் தமிழக அரசியல் போல் - மாற்றிக் கொண்டேன்.

பரமக்குடிக்கு வக்கீலாக சென்றடைந்ததும், கனவில் இந்த நடிகைகள் மட்டுமல்லாமல் என் அப்பா சீனிவாச அய்யங்காரும் ஒரு செருப்பை ஓங்கியபடி அடிக்கடி தோன்றியதும், எல்லா காதல்களையும் நானே ஓரங்கட்டிவிட்டேன்.

அதன்பின் நானே வழக்குகள் நடத்தி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்ததும், இந்த ‘தாய்’ என்னும் கோயிலையும் ‘தந்தை சொல்’ என்ற மந்திரத்தையும் எதிர்க்க வேண்டுமானால் மற்ற பிராமணப் பிள்ளைகள் போல திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று முடிவு செய்து, திராவிடர் கழகத்தில் சேராமல் பெரியார் கொள்கை பக்கம் சேர்ந்தேன்.

பெரியார் ‘திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று சொல்லி விட்டு மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்.  அறிஞர் அண்ணாவோ ‘திருமணங்கள் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் பெரியார் திருமணம் செய்தது தவறு’ என்றார். நான் இரண்டு கொள்கைகளிலும் சேர்ந்து, தந்தை சொல்படி நான் மட்டும் திருமணம் செய்துகொண்டு, ‘தம்பி கமலுக்கு வேண்டாம்’ என்று சொல்லிப் பார்த்தேன். கமலின் குற்றச்சாட் டெல்லாம், ‘அதை கீழே விழுந்து, புரண்டு, கையைக் காலை உதைத்துக் கொண்டாவது தவிர்த்திருக்கலாமே’ என்பதாக இருக்கக்கூடும்.      
        
அந்த ‘ஞானசௌந்தரி’ ஹீரோயினைக் காதலித்தது மட்டும் பீச்சில் என்னோடு வாக்கிங் வந்தவர்களுக்குத் தெரியும். அதில் முக்கியமானவர்கள்... மேஜர் சுந்தரராஜனின் மாமா வீரராகவன். 100 படங்களுக்கு மேல் நடித்தவர். சினிமா பத்திரிகையாளர் எஸ்.என்.நாராயணனுக்கும் விஷயம் தெரியும்.

ஒரு நாள் என் மனைவி சொன்னார், ‘‘நடிகர் வீரராகவன் மனைவி வெகு அழகாக இருப்பார். சென்னையில் எங்கள் தெருவில்தான் குடியிருந்தார்’’ என்று. மறுநாள் வீரராகவனிடம் அதைச் சொல்லவும், என்னை அவர் வீட்டுக்கு அழைத்துப்போனார். அந்த அம்மையார் எனக்கு காபி கொடுத்தார். மறுமாதமே வீரராகவன் தவறிப் போனார். மறுநாளே எம்.வி.ராஜம்மாவும் தவறிப் போனார் என்று தகவல் வெளியானது.

‘பரமக்குடி சீனிவாச அய்யங்கார் மகன் ஒரு வெள்ளைக்காரியை காதலிக்க முடியாது’ என்று பின்னால் புரிந்தது. ஒரு வேளை சீனிவாச அய்யங்காரே ஒப்புக்கொண்டாலும், ஒரு இந்தியனை அந்த வெள்ளைக்கார நடிகைகள் ஏற்க மாட்டார்கள் என்பதும் தெரிய வந்தது.

(நீளும்...)

சாருஹாசன்