சினிமாவும் இங்கே கத்துக் கொடுக்குது!



இதோ காத்திருக்கிறது வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்!’ ‘‘சமயங்களில் படைப்பு நாம் நினைச்சதைவிடவும் நல்லா வரும். உடலும், உணர்வுமாக என்னுடைய அதிகபட்ச உழைப்பைப் பதிவு செய்திருக்கேன்.

போன படத்தில் கிடைச்சது நல்ல அனுபவம். நான் இப்ப எது மேலேயும் நம்பிக்கை வைக்கிறதில்லை. வெள்ளிக்கிழமை ஒரு மணிக்கு என்ன ரிசல்ட்டோ அதைத்தான் எதிர்பார்க்கிறேன். ‘ஓவர் நம்பிக்கை உடம்புக்கு ஆகாது’ என்பது புதுமொழி!’’ - நிதர்சனமும் நிதானமுமாகப் பேசுகிறார் டைரக்டர் வசந்தபாலன். தமிழின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.

‘‘ ‘காவியத்தலைவன்’ ஒரு புது அனுபவம் தருகிற படைப்பாக இருக்கும் எனப் பேசப்படுகிறது...’’‘‘ரொம்ப நாட்களுக்குப் பிறகு நல்ல நடிப்பைப் பார்க்கலாம். இது ஆக்டிங் ஸ்கூல் பத்தின படமும் கூட. சித்தார்த், நாசர், பிருத்விராஜ் மூணு பேரும் அவங்களோட அதி அற்புத நடிப்பைத் தந்திருக்காங்க.

மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் உங்க கை விரலைப் பிடிச்சுக்கிட்டு கதை சொல்லிட்டுப் போற மாதிரி யோசிக்க விடாமல் படம் போகுது. எப்பவும் ‘செல்’லை நோண்டிக்கிட்டு இருக்கிற ஒரு மோசமான தலைமுறைக்கு இந்தக் கதையைச் சொல்ல முயற்சி எடுத்திருக்கேன்...

நம்பிக்கையோடு இருக்கேன். ஒரு ஹோட்டலில் போய் சூடா இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை ஆர்டர் பண்ணிட்டு உட்காருகிற மாதிரி ஏ.ஆர்.ரஹ்மானோடு வேலை செய்திருக்கேன்.

அவர் சமையலறையில் நுழைய முடியாது. ஆனால், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ‘டிஷ்’ பேரைச் சொல்லிட்டா அருமையா பரிமாறுவார் ரஹ்மான். இதுக்கு முன்னாடி ஜி.வி.பிரகாஷ், கார்த்திக்கை அறிமுகப்படுத்தியிருக்கேன். அங்கே சமையல்கட்டுக்கே போய் கையைச் சுட்டுக்கிட்டிருக்கேன். மிளகாய்ப் பொடியைக் கொட்டியிருக்கேன். கீ போர்டில் கையை வச்சு, சிங்கர்களோட நின்னு கரெக்ஷன் சொல்லியிருக்கேன். இதில் அந்த வேலையெல்லாம் இல்ல. ரஹ்மான் பெஸ்ட்!’’

‘‘வெற்றி கொடுத்திருக்கீங்க. நல்ல சினிமாவும் எடுக்கத் தெரியும். ஜாலியா ஒரு படம் பண்ண மனசு இல்லையா? ஒவ்வொரு தடவையும் ரிஸ்க்கை எதிர்பார்க்கிறது கஷ்டமா தெரியலையா?’’

‘‘என் மனைவி கூட இதே கேள்வியைக் கேட்டுட்டு இருக்காங்க. ரொம்ப டிஸிப்ளினோட, ரொம்பவும் ஃபைன் ஃபினிஷிங் படங்கள்தான் எனக்குப் பிடிக்கும். அப்படிப் படங்கள் செய்யணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். ‘சங்கராபரணம்’, ‘சிப்பிக்குள் முத்து’, ‘சலங்கை ஒலி’ மாதிரி ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்யத்தான் ஆசை.

ஆனால், இப்ப எனக்கு இந்த ட்ராக்கிலிருந்து நழுவி ஓடி வந்திடணும்னு தவிப்பு இருந்துக்கிட்டே இருக்கு. இது ‘ரிஸ்க்’கான வேலை. சந்தானம் காமெடி, பட்டையைக் கிளப்புற ஆக்ஷன், ரத்தத்தை சாம்பாரோட அள்ற வயலன்ஸ்... இதெல்லாம் எப்படிப் போய்ச் சேருதுன்னு தெரியுது. எனக்கும் இது தெரியும். ஆனா, வேறு விதமா பயணிக்கலாம்னு நினைக்கிறேன். ரோட்டில் கை, கால் விளங்காத ஒருத்தனை ஒரு பொண்ணு வண்டியில வச்சி தள்ளிக்கிட்டுப் போகுது. அந்தப் பொண்ணோட வலி...

அதற்குள் ஒரு கதையிருக்கு. படம் பண்ணினா, ‘கேன்’ஸில் திரையிடலாம். ஆனால், அந்த எமோஷனைப் பார்க்க ஆடியன்ஸ் இருக்காங்களா? நம்ம எண்ணம் சரியா? தொடர்ந்து இந்தக் கேள்விகள் என்னை சங்கடப்படுத்துது. திரும்பத் திரும்ப அடித்தட்டு மக்கள், யார் பார்வையும் படாத மக்கள் வாழ்க்கைதான் நினைவுக்கு வருது.

இப்பல்லாம் எல்லாரும் தூங்கின பின்னாடி மூணு மணிக்கு கொட்ட கொட்ட ஒரு கொசு மாதிரி முழிச்சிட்டு இருக்கேன். தப்பிக்கணும்!’’‘‘உங்க குரு ஷங்கர் கூட எப்போதும் ஆக்ஷன், கொஞ்சம் சமூகநலன்னுதான் எடுக்கிறார். நீங்க அப்படியில்லை!’’

‘‘என் பாதை இதுதான்னு நினைக்கிறேன். மரத்துல தொங்குற புளியம்பழம் பார்த்திருக்கீங்களா? உள்ளே ஓடும், பழமும் ஒரு துளிகூட ஒட்டாது. உறிஞ்சி சாப்பிட்டால் அப்படி ஒரு டேஸ்ட். கொன்றைப் பூவை சாப்பிட்டால் ஒரு சுவை. இந்தத் தலைமுறை அந்தப் புளிப்பையும், துவர்ப்பையும் அனுபவிச்சிருக்கவே முடியாது. அதையெல்லாம் அனுபவிச்சதாலதான் இப் படி கஷ்டப்படுறேன். டொரன்டினோ மாதிரி, நோலன் மாதிரி எந்தக் கலாசாரத்தின் வேரும் இல்லாமல் படம் பண்ணிட முடியும்.

என்னால் முடியலை. இப்பக்கூட, ஊருக்குப் போயிருந்தப்போ, எங்க வீட்டு வாசல்ல வேகாத வெயிலில் ஒருத்தன் சைக்கிளைத் தள்ளிக்கிட்டு ‘ஐஸ்... ஐஸ்...’னு கத்திக்கிட்டே இருந்தான். அந்தக் குரலும் வலியும் என்னைத் துரத்திக்கிட்டே இருக்கு. தெரிந்தோ... தெரியாமலோ ஜெயமோகன், எஸ்.ரா, லா.ச.ரானு படிச்சிட்டு வந்தது தொந்தரவு பண்ணுது. மறுபடியும் தப்பிக்கணும்!’’

‘‘ஆடியன்ஸ்சை குறை சொல்லக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால், அவங்க நுணுக்கத்தை இழந்துட்டாங்களோ..?’’‘‘இங்கே இருக்கிற கல்விக் கூடங்களுக்குப் பிறகு இன்னொரு கல்விக்கூடம் தியேட்டர்தான். வாத்தியார் எவ்வளவு கத்துக்கொடுக்கிறாரோ, அதே அளவு சினிமாவும் கத்துக் கொடுக்குது. என் பையன் ஒண்ணாம் கிளாஸ் படிக்கிறான். அவன் மொழி வேறயா இருக்கு. சினிமா பார்த்து வளர்கிற ஒரு தலைமுறையோடு சேர்ந்து நிக்கிறோம்.

இதில் புத்தகங்களுக்கு இடமேயில்லை. பாலைக் கொடுத்தால் பால்தான். கள்ளைக் கொடுத்தால் கள்ளுதான். நீங்க கொடுத்ததைத்தான் திரும்ப எதிர்பார்க்க முடியும். சினிமா பார்த்துத்தான் மொத்த சென்ஸும் இங்க வளர்ந்துக்கிட்டு இருக்கு. அதனால ஆடியன்ஸ் பத்தி எதுவும் சொல்லக் கூடாது!’’

நா.கதிர்வேலன்