பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ அருண் 37

புற்றிலுறையும் பாம்புகள்

‘‘சி ரமமான திரைப்படங்களைப் பார்ப்பதற்கு பயப்படக்கூடாது. கேளிக்கை இருக்காது, பொழுதுபோக்க முடியாது என அஞ்சக்கூடாது. பார்வையாளர் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு விலையாகக் கொடுப்பது பணத்தையல்ல... நேரத்தை; வாழ்வின் ஒரு பகுதியை; ஒன்றரை அல்லது இரண்டு மணி நேர காலத்தை. ஒரு மோசமான திரைப்படம் மனித குலத்திடமிருந்து பல நூற்றாண்டு கால வாழ்வைப் பறித்து விடுகிறது. வீணாக்கி விடுகிறது.’’
- அலெக்சாந்தர் சுக்ரோவ்

எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் ‘புற்றிலுறையும் பாம்புகள்’ என்கிற சிறுகதையில் திருமணம் ஆன ஒரு பெண், இன்னொரு ஆண் தன்னை சதா பார்த்துக்கொண்டே இருக்கிறான், அவனைக் கண்டிக்கக் கூடாதா? என்று தன்னுடைய கணவனிடம் கேட்கிறாள்.

கிட்டத்தட்ட சில மணி நேரம் நடக்கும் இந்த உரையாடலில், திருமணமான அந்தப் பெண், தன்னுடைய ஒழுக்கம் பற்றியும், எதிரில் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆணின் ஒழுக்கமின்மை பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறாள். ஆனாலும் கணவன் அவளது புலம்பலுக்கு செவி சாய்க்காமல் தன்னுடைய வேலையைச் செய்தபடி இருக்கிறான்.

ஒரு கட்டத்தில், ‘‘பாரேன்யா அவன... பழையபடியே வந்து நின்னுக்கினு மொறைக்கிறத. அப்பிடியே கொள்ளிக்கட்டைய எடுத்தாந்து கண்ணுல சுட்டா என்ன இவன?’’ என்கிறாள். அதற்கு கணவன், ‘‘சரிதான்... உள்ள போ! சும்மா தொணதொணன்னு...’’ என்று அமைதிப்படுத்திவிட்டு, ‘‘இப்பதான் ஒரேடியா காட்டிக்கிறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்’’ என்பான். நீண்ட இந்த உரையாடலில் கணவன் உதிர்த்த வார்த்தைகள் இவை மட்டுமே. தன் மனைவியின் ‘பிறன் நோக்கும் தன்மை’யை கடைசி ஒரு வரியில் கணவன் கதாபாத்திரம் சொல்வதோடு கதை முடிகிறது.

இந்தச் சிறுகதையின் மையச் சரடை அடியொற்றி தமிழில் வந்ததே, ‘அதிர்ஷ்டம் 5 கிலோ மீட்டரில்’ என்கிற இந்தக் குறும்படம். திருமணமான பெண்ணின் பிறன் நோக்கும் தன்மைதான் இதில் பிரதானம் என்றாலும், கணவனின் அதிர்ஷ்டம் பற்றியும் சிலேடையாகப் பேசிச் செல்கிறது. தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றும், அதிர்ஷ்டத்தைத் தேடியே தனது பயணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் சதா புலம்பிக் கொண்டிருக்கிறார் வைத்தீஸ்வரன்.

பட்டப்படிப்பு படித்தும் நல்ல வேலை கிடைக்காமல் இருப்பதும், தன்னைப் புரிந்து அனுசரித்து குடும்பம் நடத்தும் மனைவி கிடைக்காமல் இருப்பதும், அவரது அதிர்ஷ்டமின்மையின் உச்சமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் பக்கத்து வீட்டு இளைஞனோடு சகவாசம் வைத்திருக்கும் தன்னுடைய மனைவியைக் கொன்று விட முடிவெடுக்கிறார் வைத்தீஸ்வரன். அதற்காக ஒரு கடிதம் எழுதி, அதனை அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அனுப்ப தபால் பெட்டியில் போட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறார். ஆனால் வீட்டில் அவர் எதிர்பாராத வேறு ஒரு சம்பவம் நிகழ்ந்து விடுகிறது. அது என்ன என்பதை நகைச்சுவை இழையோட விவரித்திருக்கிறார் இயக்குனர்.

குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும் திரைப்படங்கள் ஒரு வகை. இவ்வகையான திரைப்படங்களை நாம் அடுத்த கணமே மறந்து விடுகிறோம். சில படங்கள் நமக்கே தெரியாமல், நமது உதடு களை அகல வைத்து, லேசாக புன்னகைக்க வைக்கும். இந்த வகையான படங்கள் நம்மை அடுத்தடுத்து சிந்திக்கவும் வைக்கும். ‘அதிர்ஷ்டம் 5 கிலோ மீட்டரில்’ குறும்படம் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது. ‘‘நான் ஒண்ணும் வக்கத்துப் போய் உன்ன கட்டிக்கல....

எல்லாம் என் தலையெழுத்து. போற வர்ற சிறுக்கிகள எல்லாம் பார்த்து பல்ல இளிக்கிற உன்ன போய் கட்டிக்கிட்டன் பாரு, என்னை சொல்லணும்’’ என்று மனைவி பேசி முடிக்க, அடுத்து கணவன் பார்வையாளர்களிடம் தொடர்கிறார்... ‘‘இதெல்லாம் நான் சொல்ல வேண்டிய வசனங்க. ஆனா பாருங்க, அவ சொல்லிக்கிட்டு இருக்கா.

இதுதான் என்னுடைய பிரச்னையே, எல்லாத்துக்கும் பயம்’’ என்று முடிக்கிறார். இந்த வகையான கதையின் போக்கை இடைநிறுத்தி, பார்வையாளர்களோடு திரையில் நகரும் கதாபாத்திரம் பேசும் உத்தியே, மென் நகைச்சுவையின் பிரதானமாக இருக்கிறது.

‘நான் என்னுடைய மனைவியைக் கொலை செய்யப்போகிறேன்’ என்று காவல்துறைக்கு கடிதம் அனுப்பிவிட்டுத் திரும்புகிறார் வைத்தீஸ்வரன். ஆனால், இறுதியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மனைவி உயிரிழக்கிறார். இப்போது அந்தக் கடிதம் போலீஸ் கையில் சேர்வதற்கு முன்பாக, எப்படியாவது அதைத் திரும்ப தபால் பெட்டியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்று வேக வேகமாக சைக்கிளில் செல்கிறார் வைத்தீஸ்வரன். தபால் பெட்டி இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ‘என்னுடைய அதிர்ஷ்டம் ஐந்து கிலோ மீட்டரில்’ என்று முடிக்கிறார்.

ஒளிப்பதிவு, நடிப்பு என தொழில்நுட்பம் சார்ந்தும் இந்தக் குறும்படம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் எடுத்துக்கொண்ட கதையில் பெண் சார்ந்த பொதுப்புத்தியை கட்டுடைக்க இன்னமும் மெனக்கெட்டிருக்க வேண்டும்.நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு இரவு முழுக்க வீடு திரும்பாமல் இருந்தால் என்ன நடக்கும்? ஒரு குடும்பமே அவளது மாதச் சம்பளத்தை நம்பித்தான் இருக்கிறது.

தவிர, ‘வயதிற்கு வந்த ஒரு பெண், இரவு முழுக்க எங்கே இருந்திருப்பாள், என்ன செய்திருப்பாள்’ என்று அவளை மையமாக வைத்துப் பின்னப்படும் கற்பனைக் கதைகளை அந்தக் குடும்பம் எப்படித் தாங்கிக் கொள்ளும்? மிருணாள் சென் இயக்கத்தில் வெளியான   ‘Ek Din Pratidin’   என்ற திரைப்படம் இந்த பின்புலத்தை அடிப்படையாக வைத்துத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இறுதி வரை அந்தப் பெண் இரவு எங்கிருந்தாள் என்பதை படத்தில் சொல்லியிருக்க மாட்டார்கள்.

அதாவது, அந்தப் பெண்ணின் ஒழுக்கம் பற்றியோ, பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறமாதிரியோ எவ்வித கற்பிதங்களும் மறைமுகமாகக் கூட புனையப்பட்டுவிடக் கூடாது என்கிற கருத்தில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார். பொதுப் புத்தியோடு அந்தப் பெண் மீது எவ்வித குற்றச்சாட்டுகளையும் வைக்காமல், மிக நுட்பமாகக் குற்றச்சாட்டுகளை சமூகத்தின் மீது வைக்கிறார். இந்த நுட்பம், இந்தக் குறும்படத்தில் தவறவிடப்பட்டிருக்கிறது.

‘சமூகத்தில் ஆண் - பெண் பேதமிருக்கக் கூடாது; ஆணுக்குப் பெண் நிகரானவள்’ என்று நாம் பல வாக்கியங்களை வாக்கிய அளவில் மட்டுமே வைத்திருக்கிறோம். நாம் நம்மை புனிதமானவர்களாக, அல்லது நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள அவ்வப்போது இத்தகைய வாக்கியங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் அதனைச் செயல்படுத்துவதில் நாம் எப்போதும் அக்கறை காட்டுவதில்லை. ஒரு பெண்ணின் கற்பு நிலை குறித்தும், அவளது சுய ஒழுக்கம் குறித்தும், சமூகத்தின் பொதுப்புத்தி மனிதர்கள் கொள்ளும் அக்கறையானது, மிக மோசமான பாதிப்பை அந்தப் பெண்ணிடத்தில் ஏற்படுத்துகிறது.

அந்தக் கடிதம் போலீஸ் கையில் சேர்வதற்கு முன்பாக, எப்படியாவது அதைத் திரும்ப தபால் பெட்டியிலிருந்து எடுத்து விட வேண்டும். தபால் பெட்டி இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

படம்: அதிர்ஷ்டம் 5 கிலோ மீட்டரில்
இயக்கம்: ஸ்ரீராம் பத்மநாபன்
நேரம்: 10.21 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: வசந்தகுமார்
இசை: ரமேஷ்
படத்தொகுப்பு: முரளி
பார்க்க:www.youtube.com/watch?v=c1mHJl5K9eQ

என் நண்பர் ஒரு குறும்படம் எடுக்க நினைத்திருந்தார். பல்வேறு காரணங்களால் அது தடைபடவே, நான் இந்தக் கதையின் ஒன் லைனை அவரிடம் சொன்னேன். அவரோ, ‘நீயே இந்தக் குறும்படத்தை எடுத்துவிடு’ என்று என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார். பிறகு என் நண்பர்களோடு இணைந்து இந்தக் குறும்படத்தை எடுக்கத் தொடங்கினேன். குறும்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக சைக்கிளும் வருகிறது.

ஆனால் படத்தைத் தொடங்கும்போது எங்களிடம் சைக்கிள் இல்லை. அவ்வழியே சென்ற ஒருவர், தன்னுடைய சைக்கிளைக் கொடுத்து படத்தை எடுக்கச் சொன்னார். படத்தை ஒரே நாளில் எடுத்து முடித்தோம்’’ என்று சொல்லும் இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன், சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி மாணவர். இயக்குனர் திருமுருகனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துவிட்டு, நடிகர் பிரசன்னாவை வைத்து ‘டூ’ என்கிற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். தற்போது ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி