நடைவெளிப் பயணம்



கணினியும் செல்போனும் சரிப்படவில்லை

இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடி என்றால் இந்தியாவில் இன்று 95 கோடி செல்போன்கள் இருக்கின்றன. மக்கள்தொகையில் கால்வாசிக்கு மேல் குழந்தைகளாக இருக்கலாம். கைகளைப் பயன்படுத்த முடியாத மனிதர்கள் இருக்கலாம். அதன் பிறகு பரம ஏழைகள். அப்படி யிருந்தும் 95 கோடி மொபைல் போன்கள் இருக்கின்றன. இது தமிழ் வாழ்க்கையோடு கலந்து விட்டது என்பதற்கு அடையாளமாக மொபைல் போன்களைக் ‘கைபேசி’ என்று அழைக்கத் தொடங்கி விட்டோம்.

முதலில் இது எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசிகள் போல எல்லோரும் பயன்படுத்தக் கூடியது என்றுதான் நான் நினைத்தேன். ‘ஒரு கைபேசி அதன் உரிமையாளர் மட்டும் பயன்படுத்தக் கூடியது’ என்று தெரிவதற்கு நிறைய நாட்கள் ஆயிற்று. அதன் பிறகு ‘அவ்வப்போது நியமிக்கப்பட்ட இடங்களில் கட்டணம் செலுத்திப் பயன்பாட்டை நீட்டிக்க வேண்டும்’ என்று புரிந்து கொள்வதற்கு இன்னும் நாட்களாயிற்று. ஒரு முக்கிய காரணம்...

எனக்குக் கணினியும், அது சம்பந்தப்பட்ட தொழில்நுட்பமும், இந்தியர் வாழ்க்கையில் அந்தத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய பொருளாதார ஏற்றத்தாழ்வும் பிடிக்கவில்லை. என் அயல்நாட்டு நண்பர்களை தொடர்ந்து தபால் எழுத வைத்தேன். அவர்கள் ‘‘இதென்ன பைத்தியக்காரத்தனம்?’’ என்று கேட்பார்கள். இன்டர்நெட் வசதி பெற்று ஈமெயி லில் அனுப்புவது கிட்டத்தட்ட இலவசம் என்பதோடு, உடனுக்குடன் போய்ச் சேர்ந்து விடும். ஆனால் ஏனோ என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணம், வீட்டில் கட்டுக்கட்டாகக் கையெழுத்துப் பிரதிகள்.

ஒரு முறை ஒரு நண்பர் நான் எழுதிய ஒரு தாள் கேட்டார். நான் ஒரு கட்டையே கொடுத்துவிட்டேன். பழைய காகிதம் வாங்கிப் போகிறவரிடம் போட்டேன். ‘‘இதெல்லாம் போவாதுங்க...’’ என்றார் தயக்கமாக! நானும் ஓரளவு கணினியைப் பயன்படுத்திக் கொள்ளக் கற்றுக்கொண்டபோது பிரதியை ஒருவாறு தயாரித்து விடுவேன்.

எனக்கே தெரியாமல் அது சில இடங்களில் கொட்டை எழுத்துக்களாகவும் சில இடங்களில் குட்டிக்குட்டி எழுத்துக்களிலும் இருக்கும். இன்னும் மோசம், நான் ஈமெயில் அனுப்ப எடுத்துக்கொண்ட முயற்சிகள்.

எனக்குச் சொல்லப்பட்டது ‘கன்ட்ரோல்’ என்ற கட்டத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘ஏ’, ‘சி’ என்று டைப் செய்துவிட்டு மீண்டும் இன்டர்னெட் பகுதிக்குச் சென்று கன்ட்ரோல் ‘வி’ அழுத்த வேண்டும். நான் அவ்வாறே செய்தேன். ஒரு பக்க விஷயம் திரும்பத் திரும்ப அதில் வந்து கொண்டே இருந்தது.

என்னிடம் அந்த ஆங்கிலப் பத்திரிகை கேட்டது ஒரு பக்கம். அவர்களுக்கு இருபது பக்கம் அனுப்பினால்? நான் அந்தக் குறிப்பிட்ட துணை ஆசிரியருக்குத் தொலைபேசி (சாதாரண தொலைபேசியில்தான்) தொடர்பு கொண்டு, ‘‘என் கம்ப்யூட்டரில் என்ன தவறு என்று தெரியவில்லை. நீங்கள் கேட்ட கட்டுரை சுமார் இருபது பிரதிகளாக வந்து விட்டது’’ என்றேன். அவர், ‘‘கவலைப்படாதீர்கள். நாங்கள் சரி செய்து விடுவோம்’’ என்றார்.

நான் தீர்க்கவே முடியாத தவறைச் செய்துவிட்டேன் என்று நடுநடுங்கிக் கொண்டிருந்தேன். அந்த மனிதர் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால் ஒரு முறை என்னை நேரில் சந்திக்க வந்தபோது அவர் சொன்னார்:

‘‘முன்பெல்லாம் எவ்வளவு அழகாகத் தட்டச்சு செய்து தபாலில் அனுப்புவீர்கள். செவ்வாய்க்கிழமை தவறாமல் தபாலில் வந்து விடும். நான் அச்சுக்குத் தயார் செய்வேன். எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் தெரியுமா?’’ அதாவது, கையெழுத்துப் பிரதி கொடுத்த அனுபவம் கணினியில் அவருக்குக் கிடைக்கவில்லை.

தச்சு வேலை செய்பவர், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், காய்கறி விற்பவர்கள் என மிக விரிவாகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகுதான் நான் என் மகனிடம் சொல்லி ஒரு கைபேசியைக் கையில் பிடித்தேன். மிகவும் சிறியதாக இருப்பதாகத் தோன்றியது. இதற்குள் ‘கணினியில் இதெல்லாம் சாத்தியமா’ என்று வியக்கும் அளவுக்குத் தவறுகள் செய்தேன். ஒரு முறை சுமார் 5000 சொற்கள் கொண்ட ஆங்கிலக் கட்டுரை அப்படியே மறைந்து விட்டது. எப்படி மீட்பது எனத் தெரியவில்லை.

அப்படி ஏதாவது மாற்றம் நேர்ந்தால் அதைச் சரி செய்ய ஒரு வழி உண்டு என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த முறை என் மகனின் மகளிடம் உதவி கேட்டேன். அவளுக்குக் கோபம் வந்தது. ‘‘நீ எதையாவது தப்பான கட்டத்தை அழுத்தியிருப்பாய்’’ என்றாள். அவள் ஏதேதோ செய்து பார்த்தாள்.

 போனது போனதுதான். நான் மீண்டும் கணினி அருகே போகவில்லை. என் தட்டச்சு இயந்திரத்தை வைத்துக் கொண்டு கட்டுரையை மீண்டும் அடிக்கத் தொடங்கினேன். தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்திப் பல மாதங்கள் ஆகியிருந்ததால் முதலில் ரிப்பன் மாற்ற வேண்டியிருந்தது. உள்ளூர் பகுதியில் அந்த இயந்திரத்துக்கான ரிப்பன் கிடைக்கவில்லை. திண்டாடிப் போய்விட்டேன். கட்டுரை தாகூர் பற்றியது.

பலர் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. கணினியில் என் கட்டுரை மிகவும் நன்றாக அமைந்திருந்தது. நினைவில் இருந்த வரிகளை எழுதி ஒரு மாதிரி சமாளித்தேன். கட்டுரை ஆங்கிலத்தில் தேவைப்பட்டது. ஆனால் கணினியில் எங்கோ போய் ஒளிந்துகொண்ட கட்டுரை மாதிரி மீண்டும் உருவாக்க முடியவில்லை. தொகுப்பும் வெளிவந்துவிட்டது.

அதன்பின் ஒருநாள் கணினி முன் உட்கார்ந்து எதையோ தட்டினேன். கட்டுரையின் ஒரு பகுதி திரையில் வந்தது. உ.வே.சாமிநாதய்யர் சேலம் ராமஸ்வாமி முதலியாரிடம் தான் படித்த பாடங்களைச் சொன்னபோது முதலியார் சொன்னார், ‘‘என்ன பிரயோசனம்?’’ ‘சீவக சிந்தாமணி’ என்றொரு காப்பியம் உண்டென்பதை அப்போதுதான் அய்யர் அறிந்தார். அதன் பிறகு நேர்ந்ததெல்லாம் வரலாறு. எனக்கு வரலாறு படைத்த பெயர் கிடைக்காது. ‘முட்டாள்’ பட்டம்தான் கிடைக்கும்.     

கைபேசியில் ஒருவர் என்னோடு பேச அழைத்தால் எதை அழுத்த வேண்டும் என்பது புரியவும் மாதங்கள் ஆயிற்று. ஆனால் அப்போதும் தவறான பொத்தானை அழுத்தி, அவர் கோவித்துக்கொண்டு, பிறகு நானாக அவரிடம் பேச முயற்சி செய்யும்போது ‘ஏன்தான் பூனைக்குட்டியை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கிறேன்’ என்று தோன்றும். ஒரு விபரீதம். புதிதாகக் கட்டி முடித்த ஒரு கோயிலுக்குப் போனபோது ஒரு சாமியார் என்னிடம் வந்து, ‘‘செல்போன் இருந்தால் அதை மௌனமாக்குங்கள்’’ என்றார்.

‘‘எப்படி?’’அவர் செய்து தந்தார். ஆனால் யார் யாரோ அந்தக் கோயிலே உகந்த இடம் என்று போனில் பேசிக்கொண்டே இருந்தார்கள், அந்த சாமியார் உட்பட. அதன் பிறகு நாட்கணக்கில் எனக்கு ஒரு அழைப்பும் வரவில்லை. நான் ஒரு நண்பரிடம் கேட்டேன். அவர் போனைப் பார்த்து, ‘‘நீங்கள் சைலன்ட் மோடில் வைத்திருக்கிறீர்கள்’’ என்றார். ‘‘அதை எப்படிச் சரி செய்வது?’’‘‘முதலில் செய்தபடிதான்.’’

அந்த ஒரு வாரத்தில் பத்து நபர்கள் போன் செய்திருக்கிறார்கள்! இதெல்லாம் எல்லாருக்கும் நேரக்கூடியதுதான் என்று சொல்லக்கூடும். ஆனால் எல்லாரும் ஒத்துக்கொள்கிறார்களா?

இது எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசிகள் போல எல்லோரும் பயன்படுத்தக் கூடியது என்றுதான் நான் நினைத்தேன். ‘ஒரு கைபேசி அதன் உரிமையாளர் மட்டும் பயன்படுத்தக் கூடியது’ என்று தெரிவதற்கு நிறைய நாட்கள் ஆயிற்று.

படிக்க

உலகின் முதல் காவியம் எது? ஆராய்ச்சியாளர்கள் ‘அது கில்கமேஷ் காவியமே’ என்று நம்புகிறார்கள். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சுமேரிய மொழியில் களிமண் வில்லைகளில் எழுதப்பட்டதாகவும், சுமேரிய அரசுக்குப் பின் அக்காடியர்களால் அக்காடிய மொழியில் மீண்டும் களிமண் வில்லைகளில் எழுதி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முழு காவியம் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததிலிருந்து ஒருவாறு எழுதப்பட்டிருக்கிறது.

இது சாகசங்கள் நிறைந்த கதை. ‘மகாபாரதம்’ போல இதற்கு தத்துவப் பின்னணியோ, வரலாற்று முக்கியத்துவமோ கிடையாது. ஆனால் இதில் கூறப்படும் இடங்கள் இன்றும் உள்ளன. கிடைத்த தகவல்களைத் திரட்டி லண்டன் எஸ்.தியாகராஜா தமிழில் ரசமிக்க நூலாகத் தந்திருக்கிறார்.

பல சுமேரியப் படங்களும் வண்ண அட்டைப்படமும் கொண்ட இந்த நூலின் விலை நாற்பது ரூபாய் மட்டுமே!(கில்கமேஷ் காவியம் - டாக்டர் எஸ்.தியாகராஜா, வெளியீடு: இராமநாதன் பதிப்பகம், 1481, கார்டன் அவென்யூ, முகப்பேர், சென்னை-600 050. பேச: 044-26562346)

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்