அழியாத கோலங்கள்



நான் அடிக்கடி வெட்கப்படாமல் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்... தம்பி கமலுடைய இரண்டு காதல் திருமணங்கள் போல் என்னுடைய கல்யாணமும் காதல் திருமணம்தான். ஒரே வித்தியாசம், காதல் வயப்பட்டது மாமியாரும் மருமகளும்தானே தவிர, அதில் எனக்கு எந்தவகையிலும் பொறுப்பில்லை.

மறைந்த பழைய நடிகர் ‘கோபி’ என்கிற வி.கோபாலகிருஷ்ணன், சுஹாசினி நடிகையாக பிரபலமான பிறகு எனக்கு ஒருநாள் போன் செய்தார். ‘‘சாரு... உன் மனைவியை மீட் பண்ணணுமே?’’ என்று கேட்டார்.

‘‘என்னய்யா விசேஷம்? கமலஹாசன்... சுஹாசினி... மாப்பிள்ளை மணிரத்னம்... இவர்களுக்குத்தான் அவங்க கேட்ட உடனே அப்பாயின்ட்மென்ட் கொடுப்பாங்க. இதுதவிர ரஜினிகாந்த், லதா... இவங்களையெல்லாம் கொஞ்சம் ஸ்பெஷல் லிஸ்ட்ல வச்சிருக்கேன். நீங்களோ, கொஞ்சம் புதியவர்? என்ன செய்யறது! ஒரு ஐடியா...

அவளுடைய போன் நம்பரைக் கொடுக்கிறேன்... ‘சாருஹாசன் பிரஸிடென்ஸி கிளப்ல ஒரு ரவுண்டு தண்ணியப் போட்டுட்டு சில விஷயங்கள் உளறினார்... அது நிஜமா?’ன்னு ஆரம்பிங்க! உடனே அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும்’’ என்றேன்.

அனேகமாக கிடைத்திருக்கும்... பேசியும் இருப்பார். அது முக்கியமல்ல! அவர் அப்பாயின்ட்மென்ட் கேட்ட காரணத்தைச் சொன்னார். ‘‘என் அப்பா கோர்ட்டுக்கு எழுதும் ஆங்கிலத்தையும்... என் சித்தப்பா கமல் எழுதும் தமிழையும்...

எஸ்.வி.சேகரின் டிராமா ஸ்கிரிப்ட்டையும் திருத்தம் செய்யும் ஆசிரியர் எங்கம்மாதான்!’’ என்று சுஹாசினி சொன்னதை பத்திரிகையில் படித்திருக்கிறார்! நல்லவேளை, திருமணமான புதிதில் பிறந்த வீடு போயிருந்த மனைவிக்கு நான் எழுதிய கடிதம் பற்றி அவருக்குத் தெரியாது!

தெரிந்தால் என் மானம் கப்பலேறி பிரஸிடென்ஸி கிளப் நாறிப் போயிருக்கும்! என் வாழ்க்கையிலேயே ஒரே ஒரு காதல் கடிதம்... 1955ல் எழுதியது. அன்று இன்றளவு தமிழ் வராததால் ஆங்கிலத்தில் எழுதினேன்.

 பதிலே வரவில்லை. என் மனைவியார் Convent Educated Girl. ஐன்ஸ்டீனுக்கு இணையாக, வாழ்க்கையிலேயே நான் எழுதிய ஒரே ஒரு காதல் கடிதத்தில் இல்லாத கமா, செமிகோலன், ஃபுல்ஸ்டாப்கள்... இருந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள்... எல்லாவற்றையும் கண்டுபிடித்தவர்.

அதில் பலூன் அளவுக்கு அடைத்து வைத்திருந்த என்னுடைய தெய்வீகக் காதலை மட்டும் கண்டுகொள்ளாமல் Wren and Martin கிராமர் குண்டூசி வாங்கிக் குத்தி, பலூனையும் என் காதலையும் வெறும் புஸ்வாணமாக்கியவர் (face bookஇலிருந்து காப்பி அடித்ததற்கு மன்னிக்கவும்... நடந்த விஷயத்தை அதைவிடச் சிறப்பாக மறுபடி சொல்ல முடியாது!)

கமல்ஹாசன் பிறந்த ஓரிரு வருடங்களுக்குள் என் தாயின் மருத்துவத்துக்காக பாதி குடும்பத்தை சென்னையிலும் மீதி குடும்பத்தை தொழில் காரணமாக பரமக்குடி யிலும் வைத்திருந்தேன்.

இதில் என் மனைவியார் காடாறு மாதம், வீடாறு மாதம் என்று விக்கிரமாதித்த ஆட்சி நடத்தினார். அன்று எங்கள் ஊரில் டெலிபோன் வசதி கூட கிடையாது. போஸ்ட் ஆபீஸில் மட்டும்தான் பொது டெலிபோன் இருக்கும். மதுரை போஸ்ட் ஆபீஸுக்கு டிரங்க் கால் போட்டு சென்னை லைன் கிடைக்க ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

என் தாய்க்கு திடீரென உடல்நலம் சரியில்லாவிட்டால், என் மனைவிக்குத்தான் ஒரு தந்தி வரும். வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க, மாமியார் உயிர் காக்கக் கிளம்பி விடுவார். ஒரு கடிதத்தில் நான் கவனிக்க வேண்டிய விஷயங்களை - ஒரு கலெக்டர் தாசில்தாருக்கு உத்தரவிடுவது போல் - ஸ்டாண்டிங் ஆர்டர் போட்டுவிட்டு, நான் முதுகுளத்தூரி லிருந்து ஓசி பஸ் ஏறி பரமக்குடி வருவதற்குள் சென்னைக்குப் புறப்பட்டுப் போயிருப்பார்.

நான் போஸ்ட் ஆபீசில் போய் டிரங்க் கால் போட்டு பெஞ்சில் காத்திருப்பேன். லைன் கிடைக்கும்போது மாமியாரும் மருமகளும் எங்கேயாவது ஊர் சுற்றப் போய் விடுவார்கள். சென்னையில் வீட்டு வேலை பார்க்கும் பெண்மணி போனில், ‘‘இன்னாபா சொல்ல? யார் கைலே சொல்ல?’’ என்பார்.

‘‘கையிலேயும் சொல்ல வேண்டாம், காலிலேயும் சொல்ல வேண்டாம்’’ என்று கோபமாக போனை வைத்தால் எங்க போஸ்ட் மாஸ்டர் புலம்புவார். ‘‘வக்கீல் ஸார்! பொண்டாட்டியோட போன்ல சண்டை போடுங்க... வேணாங்கலை! ஆனா, போன் மத்திய சர்க்கார் சொத்து. உடைஞ்சா காசு கொடுக்கணும்’’ என்பார்.

மறுநாள் லைன் கிடைக்காமல் சென்னையிலிருந்து ஒரு தந்தி வரும்... ‘அரைவிங் மண்டே போட் மெயில்’ என்று. பரமக்குடிக்கு போட் மெயில் காலை 11 மணிக்கு வரும். இரண்டு கோர்ட்டிலும் வழக்குகள். ஒன்றை மதிய சாப்பாட்டுக்குப் பின்னும் இன்னொன்றை 12 மணிக்குமாக வாய்தாவை கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு, பதினொண்ணே காலுக்கு கறுப்பு கோட்டோடு பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நின்று... ஸ்டேஷன் மாஸ்டர் தம்புவிடம் ரகசியமாகப் பேசி ஒரு நிமிஷ ஸ்டாப்பிங்கை இரண்டு நிமிஷங்களாக்கி... கம்பார்ட்மென்ட் கம்பார்ட்மென்டாக ஓடித் தேடிப் பார்த்தால், அந்த ‘இது நம்ம ஆளு’ மட்டும் வரவில்லை.

எனக்கு வந்த கோபத்தில் கோர்ட்டுக்குப் போகிற வழியில் போஸ்ட் ஆபீஸில் நுழைந்து, ‘மீட் டிரைவர் டியூஸ்டே இண்டோ சிலோன் எக்ஸ்பிரஸ்’ என்று என் மனைவிக்கு ஒரு தந்தி கொடுத்து விட்டு கோர்ட்டுக்குப் போய் விட்டேன். அங்கேயிருந்து ஒரு சத்தத்தையும் காணோம். ஒரு வாரம் கழித்து வந்தபின் என் மனையாள் மெதுவாகக் கேட்டார்... ‘‘ஒரு தந்தி குடுத்தீங்களே! யாரும் வரலையே?’’ நான் சொன்னேன், ‘‘வந்தார். நீங்கதான் பாக்கலை!

அவர்தான் ரயிலை ஓட்டிக்கிட்டு வந்தார். தனுஷ்கோடி போகும்போது முதல்நாள் நான் பார்த்தேனே? அந்த ரயிலோட டிரைவரேதான்.’’- இது எங்களுக்குள் நடந்த சண்டையில்லாத ஒரு முதல் சண்டை! ஸ்டேஷன் மாஸ்டர் தம்புவிடம் ரகசியமாகப் பேசி ஒரு நிமிஷ ஸ்டாப்பிங்கை இரண்டு நிமிஷங்களாக்கி... கம்பார்ட்மென்ட் கம்பார்ட்மென்டாக ஓடித் தேடிப் பார்த்தால், அந்த ‘இது நம்ம ஆளு’ மட்டும் வரவில்லை.

(நீளும்...)

சாருஹாசன்