கல்யாணம் பண்ணிப் பார்... காரை வாங்கிப் பார்!



மிடில் கிளாஸ் மக்களின் பெருங்கனவு சொந்தமாக ஒரு வீடும், காரும். இதில், சொந்த வீட்டைப் பார்த்துப் பார்த்து வாங்கும் பலரும் கார் வாங்குவதில் கோட்டை விடுகிறார்கள். புதுசா, பழசா... பெட்ரோலா, டீசலா... சின்னதா, பெருசா... வாழ்வின் முதல் காரை வாங்க நினைப்பவர்களுக்குத்தான் எத்தனை குழப்பங்கள்! அத்தனைக்கும் விடை தேடிப் போனோம்... சென்னையைச் சேர்ந்த கார் டீலரான பாலாஜியிடம்...என்ன கார்?

‘‘நம்ம ஊரைப் பொறுத்தவரை கார்ல ‘ஹேட்ச் பேக்’, ‘செடான்’, ‘எஸ்.யு.வி’   (Sport Utility Vehicle), ‘எம்.பி.வி’ (Multi Purpose Vehicle)னு நாலு டைப் இருக்கு. ‘ஹேட்ச் பேக்’னா நானோ, அல்டோ மாதிரியான சின்ன வகை கார்கள். இதுல நாலு பேர் உட்கார்ந்து போகலாம். இதற்கடுத்து கொஞ்சம் கட்டமைப்புல வித்தியாசப்படுற ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் வெர்னா வகை கார்களெல்லாம் ‘செடான்’ வகையில வந்துடுது.

 இதில் நாலு பேர் சொகுசா உட்கார்ந்து சாஞ்சுக்கிட்டே போகலாம். இதைவிட கொஞ்சம் பெரிய ரக கார்களான மஹிந்திரா ஸ்கார்பியோ, ஃபார்ச்சூனர் வகைகளை எஸ்.யு.வினு சொல்றோம். இன்னோவா மாதிரி யான கார்கள் எம்.பி.வி. இந்த ரெண்டு வகை கார்கள்லயும் 6 முதல் 10 பேர் வரை போக முடியும். இதையெல்லாம் தவிர பி.எம்.டபிள்யு, ஆடி, பென்ஸ் மாதிரி சொகுசு கார்களையும் இப்ப நிறைய பேர் வாங்குறாங்க. இதுல அவங்கவங்க குடும்பத்துக்கு எந்த வகை தேவைன்னு முதல்ல முடிவெடுத்துக்கணும்!’’

பாதுகாப்பு

‘‘எப்போதும் வெறும் மைலேஜையும் விலையையும் மட்டும் பார்த்து கார் வாங்கவே கூடாது. அதுல பாதுகாப்பும் ரொம்ப முக்கியம். பொதுவா, காரோட வெயிட், பேனெட் நீளம், வீல் அகலம் இதெல்லாம் பாதுகாப்பை உறுதி செய்யுது. மியூசிக் சிஸ்டம், ஏ.சி, பவர் ஸ்டியரிங், பவர் விண்டோஸ் மாதிரியான வசதிகளோட ஏர் பேக், ஏபிஎஸ் பிரேக் மாதியான பாதுகாப்பு வசதிகளும் இருக்கிற காரை வாங்குறது நல்லது.’’

எப்போ வாங்கலாம்?

‘‘ஒவ்வொரு கம்பெனியும் அந்த வருஷ மாடலை அந்த வருஷமே விற்க வேண்டிய கட்டாயத்துல இருப்பாங்க. ஒரு வருடம் தாண்டிருச்சுன்னா மார்க்கெட்ல விலை குறைஞ்சிடும். இதனால, வருஷக் கடைசியில காருக்கு ஆஃபர்ஸ், டிஸ்கவுன்ட்ஸ் நிறைய வரும். இதுதான் கார் வாங்க சரியான நேரம். ஆனா, இதிலும் சில பேர் 2014 மாடல் காரை 2015ல் டிஸ்கவுன்ட் இல்லாம நம்மகிட்ட விற்கலாம்... கவனமா இருங்க!’’

பழைய கார் வாங்கும்போது...


‘‘ஏழு வருஷத்துக்கு உட்பட்ட மாடல்னா இப்போ பழைய காருக்கும் ஃபைனான்ஸ் பண்றாங்க. ஆக, இ.எம்.ஐ வசதி உண்டு. நம்பகமான டீலரான்னு விசாரிச்சுத்தான் பழைய கார் வாங்கணும். என்னதான் பேர் வாங்கிய டீலரா இருந்தாலும் வண்டியோட ஆர்.சி புக்கை முழுக்க ஒரு தடவை சரி பார்த்துக்கறது நல்லது.

இதிலும் சந்தேகம் வந்துச்சுன்னா, ஆர்.டி.ஓ ஆபீஸுக்குப் போய் சரிபார்க்கலாம். பழைய கார்னா எந்த வருஷ மாடல், எவ்வளவு கி.மீ. ஓடியிருக்கு, கண்டிஷன் எப்படி யிருக்கு... இப்படி எல்லாத்துக்குமே ஒவ்வொரு ரேட் இருக்கு. அதுக்கு ஏத்தபடி பேசி வாங்கணும். கூடவே, தெரிஞ்ச மெக்கானிக்கை கூட்டிட்டுப் போய் செக் பண்றது நல்லது!

விபத்துல சிக்கின கார்களை இன்சூரன்ஸ்ல இருந்து எடுத்து விற்கிற டீலர்களும் இப்போ நிறைய வந்துட்டாங்க. இப்படிப்பட்ட வண்டி களை இவங்கள்ல சிலர் மார்க்கெட் விலைக்கே விற்க ட்ரை பண்றாங்க. இவங்ககிட்ட விலையை தெளிவா பேசி வாங்கணும்.

பழைய காரை அவங்க செட்டில்மென்ட் பண்ணும்போதே ஆர்.சி புக்கிலிருந்து டூப்ளிகேட் சாவி வரை எல்லாத்தையும் கவனமா வாங்கிடணும். கூடுமானவரை அக்கவுண்ட் டிரான்ஸ்பர் அல்லது டி.டி கொடுத்து வாங்கினா நல்லது. நாளைக்கு ஒரு பிரச்னை வந்தாலும், நம்ம கையில ஒரு எவிடன்ஸாவது மிஞ்சும்!’’

கார் பராமரிப்பில் கவனிக்க வேண்டியவை...

*கார் ஓடாமல் நின்றாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்துவிட வேண்டும்.
*சரியான காலம் / கி.மீ இடை வெளியில் எஞ்சின் ஆயிலை மாற்றி விட வேண்டும்.
*மழைக் காலம் ஆரம்பிக்கும் முன்பாக, வைப்பர், ஹெட்லைட் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.
*டயர்களை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும். பட்டன்ஸ் நடுவில் சிக்கிக்கொள்ளும் கற்களை நீக்கினால்தான் ரோடு கிரிப் கிடைக்கும்!
*பேட்டரியில் நீரின் அளவை சரியாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் செல்ஃப் எடுக்காமல் அல்லாட நேரிடும்!
*5 ஆயிரம் கி.மீக்கு ஒரு தடவை வீல் அலைன்மென்ட் செய்வது நல்லது.

பேராச்சி கண்ணன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்