நாம யாருன்னு அவங்தான் சொல்லணும்!



சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் தவறாமல் அவரைப் பற்றி புத்தகங்கள் வெளியாகி விடுகின்றன. அப்படி ஒரு வழக்கமான பட்டியலில் இதைச் சேர்த்துவிட முடியாது. பா.தீனதயாளன் எழுதி, சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு’ புத்தகம், பல ஆண்டு உழைப்பில் உருவானது.

பல ஆண்டுகள் ஆராய்ச்சியிலும் உழைப்பிலும் உருவான இந்த நூல், ரஜினியே ஒரு சுயசரிதை எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது.

சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பாக ஒரு ரஜினி படத் திரைக்கதை போல விறுவிறுப்பாகச் செல்லும் இந்த நூலிலிருந்து சில பகுதிகள்...தமிழ் சினிமாவின் அரை நூற்றாண்டு அழுக்கை கோட்டில் சுமந்தபடி அந்த பங்களாவின் இரும்புக் கதவுகளைத் திறந்து கொண்டு ரஜினி உள்ளே நுழைய வேண்டும். கீழே விழுந்த கீ செயினைக் குனிந்து எடுக்கும்போது கமல், அவரை விசாரிப்பார்.ரஜினி அறிமுகமாகும் முதல் காட்சி அதுவே. பேச வேண்டிய வசனம், ‘‘பைரவி வீடு இதுதானா?’’‘‘ஆமாம். நீங்க யாரு?’’

‘‘நான் பைரவியோட புருஷன்.’’இந்த சின்ன சீனை எடுப்பதற்குள் கலாகேந்திரா யூனிட்டே தவித்துவிட்டது. காலையில் தேநீர் நேரத்தில் ஆரம்பித்த வேலை, லன்ச் பிரேக் வரை இழுத்தது. ‘‘என்னை நடிகனாக்கும் முயற்சியை கே.பாலசந்தர் ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டார். ‘பைரவி வீடு இதுதானா?’, ‘நான் பைரவியோட புருஷன்’ - இந்த டயலாக்குகளை ஆயிரம் தடவை சொல்லியிருப்பேன். லைட் பாயிலிருந்து அசிஸ்டென்ட் டைரக்டர் வரை, என்னை வசனம் சரியாகச் சொல்லச் சொல்லி வெறுத்துப் போயிட்டாங்க.

தெரியாத, புரியாத வேலை. ஏன்டா இந்தத் தொழிலுக்கு வந்தோம்னுகூட ஒரு சலிப்பு. என் முகத்துக்கு முன்னால் கிளாப் வந்தது. கிளாப் அடிச்ச சப்தத்திலே எனக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை. எனக்குத் தெரியாமல் டயலாக்கை உளறினேன். நான் கேமராவுக்கோ, கூட்டத்துக்கோ பயப்பட்டது கிடையாது. என்னுடைய பயமெல்லாம் பாலசந்தர் சார்தான்! கமலுடைய நடிப்பைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் எப்போ இப்படி ஆவதுன்னு கனவு கண்டேன். இதோட முதல் சீன் முடிஞ்சது’’ என்று அதுபற்றி சொன்னார் ரஜினி.

வாசு ஸ்டூடியோவில் குடிசை செட்டில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ ஷூட்டிங் ஆரம்பமானது. ரஜினி வசனத் தாள்களை வாங்கிப் பார்த்தார். கைக்குள் அடங்காமல் திமிறியது. உதவி இயக்குநர் லட்சுமி நாராயணன் வசனம் சொல்லித் தர ஆரம்பித்தார். நிறுத்தவே இல்லை. ரஜினியிடமிருந்து ஒரு ‘‘உம்’’ கூட காணோம். வாசிப்பதை நிறுத்திவிட்டு கவனித்தபோது ரஜினி எஸ்கேப் ஆகியிருந்தார். 

ரஜினி வெளியேறியதன் காரணம் புரியாமல் யூனிட் ரஜினிக்காகக் காத்து நின்றது. திரும்பி வந்த ரஜினி, தான் கற்றுக் கொண்ட எளிய தமிழில் படபடத்தார்... ‘‘வேணாம் சார் எனக்கு இந்த வேஷம். இவ்ளோ டயலாக் நான் பாலசந்தர் சார் படத்துல கூட பேசல. என்னை விட்டுடுங்க. நான் போறேன்.’’

அதைச் சொல்லி முடிப்பதற்குள் வியர்த்து வடிந்தது. தன் கதை இலாகாவில் இருந்தவர்களைக் கை தூக்கிவிடும் மனம், சாண்டோ சின்னப்பா தேவருக்கு எப்போதும் உண்டு. கலைஞானத்துக்கு அப்படித்தான் சொன்னார்... ‘‘கலைஞானம், சும்மா கதை, வசனம் எழுதிட்டு இருந்தா காலம் அப்படியேதான் போகும். நீ ஒரு படம் எடு. நான் பைனான்ஸ் பண்றேன்.’’
படத் தயாரிப்பு என்றதும் கலைஞானத்துக்கு மனதில் மின்னிய முதல் மனிதர் ரஜினி. எதைச் சொன்னாலும் ‘‘ஈஸ் இட்!’’ என்று சாதாரணமாகவே கேட்பார் ரஜினி.

எல்லாம் தெரிந்த அதிகப்பிரசங்கியாக தன்னைக் காட்டிக்கொள்ளவே மாட்டார். ‘‘என் கதையில் நீங்கதான் ஹீரோ’’ என்று கலைஞானம் சொன்னபோதும் ‘‘ஈஸ் இட்’’ என்றார் - நிஜமான ஆச்சரியத்தோடு. ‘விசுவாசமுள்ள வேலைக்காரன்’ என்று முதலில் பெயரிடப்பட்ட ‘பைரவி’ கதையை படபடவென்று சொல்லி முடித்தார் கலைஞானம். ‘‘வெரிகுட், சூப்பர்!’’ என்று கலைஞானத்தின் கைகளைக் குலுக் கியவர், ‘பைரவி’யில் ஹீரோவாகிவிட்ட பூரிப்பில் கனவுப் புன்னகை சிந்தினார்.

ஆனால் தேவர் கொதித்தார். ‘‘ஒரு ஹீரோவை புக் பண்ணிட்டு வான்னா வில்லன் நடிகர்கிட்டே கதை அளந்துட்டு வந்திருக்கே. முருகா! இவனுக்கு நான் எப்படி பணம் கொடுப்பேன்? கலைஞானம், நீ ஹீரோவ மாத்து. நான் பைனான்ஸ் பண்றேன். வில்லன் வேஷத்த ரஜினிக்குக் கொடு’’ என்றார்.கலைஞானம் மவுனமாக நின்றார். ரஜினியிடம் கால்ஷீட் வாங்கியதும் அவர் அடைந்த மகிழ்ச்சி, தேவர் உடம்பில் பூசிய சந்தனமாக கரைந்தேவிட்டது. எப்படியோ சமாளித்து படத்தை முடித்தார்.

ஆனால் ‘பைரவி’ வெற்றிக்குப் பிறகு, தேவர் அழைத்ததாக கலைஞானத்துக்குத் தகவல் போனது. ‘‘அடேய், முருகன் உன் பக்கமும் இருக்கான்டா. அட கழுத! நீ போண்டி ஆகணும்னு நான் சாமி கும்புட்டேன். இப்ப சொல்றேன்... நீ தொடர்ந்து படம் எடு. நான் பின்னால இருந்து உதவுறேன்’’ என்றார்.தேவர் தோழமை பாராட்டிப் பேசியதில் கலைஞானம் கலங்கி நின்றார். அடுத்த அஸ்திரத்தை தேவர் எடுத்தார். ‘‘அடேய், அந்த ரஜினியை எனக்கும் ரெண்டு படம் ஆக்ட் பண்ணச் சொல்லுடா.’’

அடுத்த பதினைந்து நிமிடங்களில் ரஜினி வந்து தேவரிடம் ஆசீர்வாதம் பெற்றார். ‘‘நீ அமோகமா வரப் போறே தம்பி.’’ அப்போதே தேவர் இரண்டு படங்களுக்கு ஹீரோவாக ரஜினியை ஒப்பந்தம் செய்தார். இரண்டுக்குமான மொத்தச் சம்பளத்தையும் ரூபாய் நோட்டுகளாகவே கட்டுக்கட்டாக வாரி வழங்கினார். ரஜினி அப்போது வாங்கிக்கொண்டிருந்ததைப் போல் இரண்டு மடங்கு ஊதியம்!

‘முரட்டுக்காளை’யில் ரதியின் கனவில் ரஜினி கண்ணனாக வருவதாகக் காட்சி. பெரும்பாலும் மேக்கப்பே இல்லாமல் நடிப்பதால், மேக்கப்பிற்காக மெனக்கெட்டு ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தது ரஜினிக்கு எரிச்சலாகிவிட்டது. ஆனால் கிருஷ்ணர் வேஷம் போட்டு முடிந்ததும் அப்படியே அசந்துபோய்விட்டார்.

கண்ணனாகி கரிய நிறத்தில் காட்சி தந்தார் ரஜினி. சகலருக்கும் திருப்தி. அடுத்து என்.டி.ராமராவை சந்திக்க ரஜினி ஆசைப்பட்டார். சினிமாவில் கண் கண்ட கடவுள் அவரே. ராமராவ் சாரதா ஸ்டூடியோவில் கிடைத்தார். ரஜினி சிறு குழந்தை கோகுலாஷ்டமிக்கு வேடம் போட்ட உற்சாகத்தில் ராமாராவை வணங்கினார். ராமாராவ் சில ஆலோசனைகளுடன் பாராட்டவும் செய்தார். ‘‘உன் கண்ணன் வேஷம் கன கச்சிதம். கடவுளாக நடிக்கும்போது தவறுகள் ஏதும் செய்யாமல் மன சுத்தியுடன் இருக்க வேண்டும்.’’

பின்பு என்ன நடந்ததோ... ‘முரட்டுக்காளை’யில் அந்தக் காட்சி எடுக்கப்படவே இல்லை.‘போக்கிரி ராஜா’வில் ரஜினியும் ராதிகாவும் ‘போக்கிரிக்கு போக்கிரி ராஜா’ என்று ஆடிப் பாட வேண்டும். வேகமான, விறுவிறுப்பான அங்க அசைவுகள் தேவை. புது லொகேஷன் பிடித்தார்கள், திருப்பதி மலையில் ஷூட்டிங். ‘‘ரஜினி, ரெடியா?’’ என்றார் எஸ்.பி.முத்துராமன். ‘‘வெளியிலே இருக்கேன் சார். நீங்க இங்கே வந்துடுங்க, ஒண்ணாவே போயிடலாம்.’’ரஜினி சொன்ன விலாசத்தில் கார் நின்றது. ரஜினி ஏற வந்தார்.

‘‘திருப்பதி போறோம். லக்கேஜ், துணிமணி எதுவும் வேணாமா ரஜினி. உங்க வீட்டுக்குப் போய் பெட்டி எடுக்கணும் இல்லியா?’’‘‘அதெல்லாம் வேணாம் சார். நைட்டுக்கு ஒரு லுங்கி இருந்தா போதும். காலையில நீங்களே காஸ்ட்யூம் தந்துடப் போறீங்க. பல் தேய்க்க ஒரு பிரஷ் புதுசா வாங்கிக்கலாம்.’’முத்துராமன் வாயடைத்துப் போனார்.

தேவலோகப் பசு காமதேனு. ரஜினி, அதன் பாலைக் கேட்டால்கூட வாங்கித் தரத் தயாராக இருந்தார்கள். ரஜினிக்குத் தனி மேக்கப் மேன், டச்சப் பாய் என்கிற கூட்டாளிகள் கிடையாது. சிகரெட், கார் பேட்டா ஏதும் கம்பெனி காசில் வாங்கவே மாட்டார். லகரங்களில் பெறும் சம்பளத்தோடு சரி.

ரஜினி, ‘உழைப்பாளி’ அவுட்டோரில் தயாரிப்பு நிர்வாகிகள் செய்த குளறுபடிகளினால் திண்டாடி தெருவில் நின்றார். சிக்மகளூர் ஓட்டலில் அறை காலி இல்லை. ரஜினி, நள்ளிரவை காரிலேயே கழிக்க வேண்டிவந்தது. ரஜினிக்குப் பிறகு அங்கு சென்று சேர்ந்தார் இயக்குனர் பி.வாசு. ஓட்டல் நிர்வாகத்தினரை கடுமையாகப் பேசினார். ‘‘ஒரு சூப்பர் ஸ்டாரை, மக்களின் அபிமானம் பெற்றவரை இப்படி காருக்குள் படுக்க வைத்திருக்கிறீர்களே! இப்போதாவது ரூம் கொடுங்கள். நான் சினிமா டைரக்டர் பி.வாசு. எனக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா?’’

வாசுவை ரஜினி ஆறுதல்படுத்தி அழைத்துச் சென்றார். ‘‘வாசு! நாம யாருன்னு அவங்கதான் நமக்குச் சொல்லணும். ரூம் கிடைக்காததுக்குக் காரணம், நம்மவங்க செய்த தப்புதானே! முன்கூட்டியே நாம அனுப்பினவங்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணாததால், நாம் இவங்களைக் கோபிச்சுக்கிறதில் நியாயம் இல்லை. நம்ம மேலே தப்பு வெச்சுக்கிட்டு நாம அவங்கள குறை சொல்லக்கூடாது.’’

(ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு - பா.தீனதயாளன், விலை: ரூ.250/-, வெளியீடு: சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004. தொலைபேசி: 72990 27361)