மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

மலர்கள் கடவுளுக்கு நெருக்கமானதாகவும் ப்ரியமானதாகவும் இருக்கின்றன. காரணம், அதன் மணமும் மென்மையும். நாமும் கடவுளுக்கு நெருக்கமாக முடியும். தேவை, நல்ல மனமும் இதயமும்தான்!

குழந்தை மிராவின் ஜனனம் மோரிஸின் வீட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. வீடு ஒரு தெய்வீக அமைதியில் தோய்ந்திருந்தது. வீட்டு வேலைக்காரர்களின் மனநிலையில் ஒரு நிதானம் ஏற்பட்டது.அதற்கு முன்பெல்லாம் வேலைகளை முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டுக்குப் போக விரும்பும் பணியாளர்கள், ‘‘இப்போதெல்லாம் இங்கே இருந்தால் தேவலைன்னு தோணுது. இங்க இருக்கும்போது மனசுக்கு நிம்மதியா இருக்கு.

வாசலைத் தாண்டிப் போனால் குடும்பப் பிரச்னைகள் எல்லாம் வரிசையா வந்து வாட்டுது. இதுக்கு முன்னால எல்லாம் இப்படி இல்ல. இங்க இருந்தா எந்தப் பிரச்னையும் மனசை வதைக்கறதில்லை. நம்ம வீட்டுக்கு மிரா வந்த பிறகுதான் இத்தனை சந்தோஷம். குழந்தை முகத்தைப் பார்த்துக்கிட்டிருந்தாலே போதும். அப்படி ஒரு சந்தோஷமா இருக்கு’’ என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.

‘‘இங்க பாரும்மா... அடிக்கடி இப்படி சொல்லாத. குழந்தைக்கு திருஷ்டி பட்டுடும்’’ என்றாள் இன்னொரு வேலைக்காரி. ‘‘அட! அந்தக் குழந்தையை திருஷ்டி எல்லாம் ஒண்ணும் செய்யாது. அது நிச்சயம் தெய்வீகப் பிறவிதான். குழந்தை இருக்கற அறைக்குள் போனாலே கடவுளின் சந்நிதானத்துல இருக்கற மாதிரி இருக்கு.

இப்பவெல்லாம் நம்ம தோட்டத்துக்கு புதுசு புதுசா பறவைங்க வருது. அதுங்களோட சத்தம் தாலாட்டு பாடுற மாதிரியே இருக்கு. செடிங்கல்லாம் கூட வழக்கத்திற்கு அதிகமாக பூத்துக் குலுங்குது’’ - மன விழிப்புள்ள ஒரு வயதான பெண்மணி நுணுக்கமாய் கவனித்துப் பேசினாள்.

மற்றவர்கள் எல்லாம் வியந்து அமைதியாக இருந்தார்கள். வேலைக்காரர்களின் பேச்சை மதில்தாவும் கவனிக்கத் தவறவில்லை.அன்று மாலை அவள் மிராவைத் தூக்கிக் கொண்டு தோட்டத்தில் நடந்தாள். மோரிஸ் பின்னாலேயே போனார். புல்வெளியில் தரை விரிப்பைப் போட்டுக்கொண்டு கீழே அமர்ந்தாள் மதில்தா.

பூக்களின் கலவையான மெல்லிய வாசனை அந்த பிரதேசத்தை மோன நிலையில் வைத்திருந்தது. அன்னையின் முகத்தைப் பிஞ்சுவிரலால் தொட்டுத் தொட்டு விளையாடியது குழந்தை. அருகில் அமர்ந்த மோரிஸ், மிராவின் பஞ்சுப் பாதங்களை வருடிக் கொண்டிருந்தார். இருவரும் பேசிக்கொள்ளாமல் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 வேலைக்காரர்கள் பேசிக் கொண்டதை மோரிஸிடம் மெல்லிய குரலில் சொன்னாள் மதில்தா.‘‘நானும் கவனிச்சேன் மதில்தா. அவங்க பேசினது உண்மைதான். மிரா நம்ம வீட்டுக்கு வந்த பிறகு எல்லாரோட முகத்துலயும் ஒரு சந்தோஷம் இருக்கு. நம்ம வீடே ஏதோ புதுசான மாதிரி தான் தோணுது. ஏன், உனக்கு எதுவும் புதுசா தெரியலையா?’’

‘‘எப்பவும் அடம் பிடிக்கற மத்தயோகூட மாறிட்டான். ‘தங்கச்சி தூங்கறா... சத்தம் போடாதே’ன்னு சொன்னா ரொம்ப அமைதியாகிடறான். மிரா அழறதே இல்ல. பசிச்சா சின்னதா ஒரு சிணுங்கல்தான்... எப்பவும் ஏதோ யோசிக்கற மாதிரி பாக்கறா. அவள் உதட்டில் எப்பவும் ஒரு புன்னகை ஒட்டிக்கிட்டிருக்கு. மத்தபடி இது எல்லாமே எனக்கு சாதாரணமாதான் இருக்கு. இதெல்லாம் ஒரு குழந்தை வீட்டுக்கு வந்தால் நடக்கும் மாற்றம்தான்னு நினைக்கிறேன்!’’

தன் குழந்தையை தெய்வீகம் என்கிற வார்த்தையில் அன்னியப்படுத்தி விடக்கூடாது என்கிற தாயன்பு மதில்தாவின் கவனமான பேச்சில் இருந்தது. ஆனால் மதில்தாவை எல்லோரும் கொண்டாடுவதில் அவளுக்குள் ஒரு ஆனந்தம் இருக்கவே செய்தது.புரிந்துகொண்ட மோரிஸ், மதில்தாவிடமிருந்து மிராவை இரண்டு கைகளாலும் வாங்கி ஏந்தினான். தன் முகத்திற்கு நேராகத் தூக்கி மூக்கு உரசியவன், குழந்தையின் வாசனையில் மெய்மறந்தான். ஓசையில்லாமல் அங்கே ஒரு தியானம் பூத்தது!ஆண்டுகள் ஓடின.

மிராவுக்கு நான்கு வயது. எல்லா குழந்தைகளையும் போல நண்பர்கள்... விளையாட்டு என நேரம் கழிப்பதில்லை. தோட்டத்தில் செடிகளோடு முணுமுணுப்பாள். பூக்களைப் பறிக்காமல் தன் நாசியால் வருடுவாள். பட்டாம்பூச்சிகள் அவளுக்கு நிரம்ப சினேகம். ஒருநாள் அப்பா தனக்காக வாங்கித் தந்த அந்தச் சின்ன நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளுக்குத் தெரியாமலேயே மெல்ல மனம் நகர்ந்து குவிந்தது. மிரா தியானத்தில் ஆழ்ந்தாள். அந்த ஆழ்ந்த தியானத்தின் போது மிக சக்தி வாய்ந்த ஆன்ம ஒளி அவளுள் பாய்ந்து கொண்டிருந்தது.

ஏதோ ஒரு மிகப்பெரிய பணியை வெற்றிகரமாகச் செய்து முடிக்கவே தாம் இங்கு வந்திருப்பதாக ஒரு எண்ணம் அன்று அவளுக்குள் தோன்றியது.கண்மூடி அமர்ந்திருந்த மிராவை கண்ணிமைக்காமல் பார்த்தார் மோரிஸ்.‘‘மிரா... மிரா... என்ன செய்யற?’’ - மென்மையாய்க் கேட்டார்.பதில் இல்லை.தோளைத் தொட்டு உலுக்கி, ‘‘மிரா தூங்கிட்டியா... எழுந்திரு செல்லம்... வா சர்க்கஸுக்குப் போகலாம்’’ என்றார்.

பளிச்சென கண் திறந்த மிரா மழலையாய் சொன்னாள்... ‘‘நான் தூங்கலப்பா... நான் சர்க்கஸுக்கும் வரல. எனக்கு அதைவிட மிக முக்கியமான வேலை இருக்கு... அதைத்தான் நான் செஞ்சிக்கிட்டு இருக்கேன்’’ என்றாள்.மோரிஸ் அமைதியாக அவளது கைகளைத் தொட்டார். உஷ்ணமாக இருந்தது. இது காய்ச்சல் சூடு இல்லை. தியானத் தீயால் என்பதைப் புரிந்துகொண்டார். மெல்ல அந்த இடத்தை விட்டு அகன்றார். ஒரு ரிஷியிடம் இருந்து வருவது போன்ற மிராவின் தீர்க்கமான பதில் அவருள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

மற்ற குழந்தைகள் மிராவை விளையாடக் கூப்பிட்டாலும் ‘‘நான் வரல. நான் இங்கேயே சந்தோஷமாதான் இருக்கேன்’’ என தனிமைத் தவத்தில் மூழ்கினாள் மிரா! அன்று ஞாயிற்றுக் கிழமை. மத்தயோவுக்கு பள்ளிக்கூடம் இல்லை. அண்ணனின் விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் மிரா. மதில்தா காலை உணவு தயாரித்து வந்து கொடுத்தாள். அண்ணன் - தங்கை இருவரும், ‘‘என்னம்மா செஞ்சிருக்க?’’ எனக் கேட்டார்கள்.

மதில்தா சொன்ன மெனு அவர்களுக்கு விருப்பமானதாக இல்லை. ‘‘இது எங்களுக்கு வேண்டாம்’’ என்றார்கள்.மதில்தா இருவரையும் அழைத்து அருகில் அமர்த்தினாள். இந்த உணவில் என்னென்ன காய்கறி இருக்கிறது, அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை எல்லாம் பொறுமையாக விளக்கினாள்.

ஆனால், இரண்டு பேரும் சாப்பிட மறுத்தார்கள். மதில்தா உறுதியாகச் சொன்னாள்... ‘‘இன்று இதுதான் சாப்பாடு. இதுதான் நல்லது. விரும்பினால் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் பட்டினியாக இருங்கள். நான் வேறு உணவு உங்களுக்கு சமைத்துத் தருவதாக இல்லை. முதலில் பெரியவர்கள் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்பட கற்றுக்கொள்ளுங்கள்’’ எனக் கண்டிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அண்ணன் தங்கை இருவரும் சாப்பாட்டு மேஜையைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அம்மாவை பாவமாக பார்த்தார்கள். மதில்தா அசைந்து கொடுக்கவில்லை.விளைவு-இருவரும் நல்ல பிள்ளைகளாக சாப்பிட்டு முடித்தார்கள். மிரா மனதில் அப்போது ஒரு எண்ணம் உருவானது. பெரியவர்களின் வார்த்தையை மதிக்க வேண்டும். கட்டுப்பாடும் ஒழுங்கும் முக்கியம் என உணர்ந்தாள். அன்றிலிருந்து அன்னையின் ஒரு வார்த்தையைக் கூட மிரா மீறியதில்லை!

மிராவுக்கு வயது ஐந்து. பள்ளிக்கூடம் போகத் தொடங்கினாள். அவளது கூர்மையான பார்வையும் கம்பீரமான நடையும் ஆசிரியர்களையும் நண்பர்களையும் வெகுவாகக் கவர்ந்தன. மிராவை ‘இளவரசி’ என்றே எல்லோரும் கொண்டாடினார்கள். பாடங்களை கவனமாகக் கற்றாள். எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தாள்.

மிரா இருக்கும் வகுப்பில் மாணவர்களுக்கிடையே எந்த சச்சரவும் வராது. வந்தால் அதை துளிப் பொழுதில் மிரா தீர்த்து வைப்பாள். அவளது வார்த்தைக்கு அத்தனை பேரும் கட்டுப்பட்டார்கள். மிராவின் அன்பு கலந்த ஆளுமை ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியது.அவர்களும் ‘மிரா, நீ உண்மையில் இளவரசிதான்’ என உச்சி முகர்ந்தார்கள்.

மிராவின் மனசு எப்போதும் உள்முகமாகப் பயணித்து ஏதோ ஒரு புதிய உலகத்தில் வெளிச்சப் புள்ளிகளில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தது.அன்று மாலை. தோட்டத்தில் அமர்ந்து பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென சோகமானாள்.அங்கு வந்த மதில்தா கையில் இருந்த கோப்பை தேனீரை மிராவிடம் கொடுத்தாள். இலக்கில்லாத பார்வையோடு வெறித்தபடி கோப்பையை வாங்கி நிதானமாகத் தேனீரைக் குடிக்க ஆரம்பித்தாள் மிரா.

மதில்தா, மிராவின் கனத்த மௌனத்தை சகியாமல், ‘‘என்ன மிரா... நீ யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நீதான் இந்த உலகத்தையே சுமந்துகிட்டு இருக்கே போல’’ என்று கேட்டாள்.

மிரா நொடிப்பொழுது கூட தாமதிக்கவில்லை... ‘‘ஆமாம்’’ என்றாள். மதில்தா பேச்சிழந்து நின்றாள். இவள் யார்? என்கிற கேள்வி மதில்தாவின் மனதில் பெரிதாய் எழுந்தது!

வரம் தரும் மலர்கள்

கடன் பிரச்னை தீர்க்கும் நாகலிங்கப் பூ


நோய், பகை, தீ இது மூன்றையும் மிச்சம் வைக்கக் கூடாது என்பார்கள். இந்தப் பட்டியலில் அடுத்த இடம் பிடிப்பது கடன். கடன் வாங்கி, அதை அடைக்க மேலும் கடன் வாங்கி, கடனிலேயே மூழ்கி சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களை தாயன்புடன் கை தூக்கி விட அன்னை கற்பக விருட்சமாக அருள்கிறார்.

 தீராக் கடனால் அவதிப்படுகிறவர்கள் உண்மையாக மனம் வருந்தி தினமும் நாகலிங்கப்பூவை அன்னைக்குச் சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, நியாயமான வருமானம் பெருகும். செல்வமும் வளமும் சேரும். சிறுகச் சிறுக கடன் நீங்கி வாழ்வில் நிம்மதி உண்டாகும்.

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்